"மலை என் தோழன்!”

"ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஃப்ரெண்டைப் பார்க்க வந்துடுவேன். இதோ, இந்த திருமூர்த்தி மலைதான் என்னோட ஃப்ரெண்டு’’ எனப் புன்னகையுடன் பாறையைத் தடவுகிறார் செங்கதிர்.

ஈரோடு, யூ.ஆர்.சி.பழனியம்மாள் மெட்ரிக் பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் செங்கதிர், மலையேற்றத்தில் இமாலய சாதனை படைத்திருக்கிறார்.

‘‘போன ஏப்ரல் மாசம், 15 பேர்கொண்ட குழுவோடு, இமாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் மணாலியில் (Manali) இருந்து இமயமலை மேலே 15,200 அடி உயரம் ஏறினேன். என்னோடு வந்த  எல்லோரும் பெரியவங்க. ‘இந்தியாவுல இருந்து  7-வயதுக்கு உட்பட்டோர் யாருமே இந்த உயரத்துக்குப் போனது இல்லை, நீதான் முதல் ஆள்’னு எல்லோரும் பாராட்டினாங்க. எனக்கு சாதனை பற்றி ஆர்வம் இல்லை. மலையேற்றம் எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். அதை அனுபவித்துச் செய்றேன் அவ்வளவுதான்” என்கிறார் மழலை மாறாத குரலில்.

ஐந்து நாட்களில் 15,200 அடி உயரத்துக்கு ஏறி, இந்தச் சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் செங்கதிர். அந்த அனுபவத்தை, கண்கள் விரியச் சொல்ல ஆரம்பித்தார்.

‘‘பாறை மலையில் மட்டுமே பயிற்சி செய்துக்கிட்டு இருந்த எனக்கு பனிமலையில் போறது ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு. நடக்கும்போதே, திடீர்னு பனிக்கட்டி உடைஞ்சு உள்ளே போகும். அப்படித்தான் ஒரு நாள், பனிப்பாறை உடைஞ்சு, இடுப்பு அளவுக்கு உள்ளே போய்ட்டேன். பயிற்சியாளர், ஃப்ரெட்ரிக் (Fredrick) அங்கிள்தான் தூக்கிவிட்டாரு. நம்ம ஊர்ல மழையில் நனைஞ்சு விளையாடி இருக்கேன். ஆனா, இமயமலையின் பனிமழையில் நனைஞ்சது த்ரில்லிங்கா இருந்துச்சு” எனச் சிலிர்க்கிறார் செங்கதிர்.

‘‘ஐந்து வயது முதல் முறையான பயிற்சி எடுத்தால், மலையேற்றத்தில் சாதனை படைக்கலாம்’’ என்கிறார் பயிற்சியாளர் ஃப்ரெட்ரிக்.

‘‘முதலில், நம் பகுதிகளில் இருக்கும் மலைகளில் ஏறணும். இதைப் ‘பாறை ஏறுதல்’ எனச் சொல்வாங்க. அதைத் தொடர்ந்து,  பனிப்பிரதேசங்களில் ஏறலாம். செங்குத்தான மலையின் உச்சிக்கு, ஒரு கயிற்றின் மூலமாகச் செல்வதை, க்ளைம்பிங்க் (Climbing) என்பார்கள்.  இரண்டு கயிற்றின் மூலம் கீழே இறங்குவதை, ரேப்பெல்லிங் (Rappelling) என்பார்கள். இடுப்பு பெல்ட்டில், ஒரு முனையை இணைக்கணும். கயிற்றின் மறுமுனையை, மலையின் உச்சியில் கட்டி இருப்பாங்க. ஆபத்து ஏற்பட்டால், நம்மைக் காத்துக்கொள்ள மட்டுமே கயிறு. மற்றபடி, பாறையின் மீது கை, கால்களைப் பயன்படுத்தித்தான் ஏறணும். செங்கதிருக்கு இந்தச் சின்ன வயதிலேயே பாறைகள், வெற்றிப் படிக்கட்டுகள் ஆகிடுச்சு. அடுத்த ஆண்டு இமயமலையின் மீது 20,000 அடி வரை செல்ல பயிற்சி எடுத்துட்டு இருக்கிறார்” என்கிறார் ஃப்ரெட்ரிக்.

‘‘மலையேற்றப் பயிற்சியின் மூலம், ஒரு செயலை எப்படி சரியாகத் திட்டமிடுவது, செய்து  முடிப்பது எனக் கற்றுக்கொள்ளலாம்.  ஆபத்தை தைரியமாக எதிர்கொள்ளும் மனபலமும் உடல் உறுதியும் கிடைக்கும். வாழ்க்கையில் எந்த ஒரு வெற்றி தோல்வியையும் இணையாகப் பார்க்கும் மனப்பான்மை வளரும்” என்கிறார், செங்கதிரின் அப்பா சசிகுமார். இவரும் ஒரு மலையேற்ற வீரர்தான்.

‘‘இந்த மலையேற்றம், நமக்குத் தேவையான நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுக்குது.  எல்லோரோடும் சேர்ந்து ஏறும்போது, கூட்டு முயற்சியைச் சொல்லுது. மலையில் உணவோ, குடிநீரோ கிடைக்காது. நாம எடுத்துட்டுப் போறதைத்தான்  வீணாக்காமல்  பயன்படுத்தணும். அதனால், சிக்கனத்தைக் கத்துக்கலாம். இயற்கையை, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கணும் என்பதைத் தெரிஞ்சுக்கலாம். எல்லோருமே மாசத்துக்கு ஒரு முறையாவது மலையேற்றத்தில் ஈடுபட்டுப் பாருங்க. உங்க உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்’’ என்ற செங்கதிர், விறுவிறு என திருமூர்த்தி மலை மீது ஏற ஆரம்பித்தார்.

கு.ஆனந்தராஜ்

த.ஸ்ரீநிவாசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick