மெட்ரோவில் பறந்தோம் மகிழ்ச்சியில் மிதந்தோம்!

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மெட்ரோ ரயில் பயணம் இன்னும் சில நிமிடங்களில் தொடங்கப்போகிறது. கோயம்பேடு ரயில் நிலையத்தில் இருந்து, உங்கள் முருகவேல்” என குஷியாக இன்ட்ரோ கொடுத்தான் முருகவேல்.

தமிழ்நாட்டின் ஹாட் டாபிக், மெட்ரோ ரயில். அந்த மெட்ரோ ரயில் பயணத்துக்கு உற்சாகமாக வந்தார்கள் சென்னை, விருகம்பாக்கம், பத்மா சாரங்கபாணி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்.

கோயம்பேடு ரயில் நிலையம், விமான நிலையத்துக்கு இணையாக அசத்தியது. முதல் தளத்தில்தான் டிக்கெட் எடுக்க வேண்டும். மேலே செல்ல எஸ்கலேட்டர், லிஃப்ட், படிக்கட்டுகள் இருந்தன. “நாங்க எஸ்கலேட்டரில் வர்றோம்”, “நாங்க லிஃப்டில் வர்றோம்” என ஆளுக்கு ஒரு குழுவாகக் கிளம்பினார்கள். “நாம யூத்துப்பா. படிக்கட்டிலேயே ஏறலாம்” என்ற தாரிணி, தோழிகளுடன் படிக்கட்டில் பாய்ந்தார்.

முதல் தளத்தின் டிக்கெட் கவுன்ட்டருக்குச் சென்றதும், “அங்கிள், நான் சின்னப் பையன். செவன்த்  படிக்கிறேன். எனக்கு டிக்கெட் கிடையாதுதானே...?” என அப்பாவிபோல கேட்டான் தணிகைவேலன்.

“அதோ, உயரம் அளக்கும் அளவுகோல் இருக்கு. அங்கே நில்லுங்க. 90 சென்டிமீட்டருக்குக் குறைவாக இருந்தால், ஃப்ரீயா போகலாம்” எனச் சிரித்தார் டிக்கெட் கொடுப்பவர்.

“ஐயோ... அது, இவன் எல்கேஜி படிச்சப்ப இருந்த உயரம் ஆச்சே. ஆலந்தூருக்கு ரிட்டன் டிக்கெட் கொடுங்க... எவ்வளவு?” என்றாள் சரஸ்வதி.

“ரிட்டன் டிக்கெட் கிடையாது. அங்கே  பிளாட்பாரத்தைவிட்டு வெளியே போய் மறுபடியும் டிக்கெட் எடுத்துக்கிட்டுத்தான் வரணும். 100 ரூபாய் டிராவல் கார்டு வாங்கினால், வசதியாக இருக்கும்.அடிக்கடி ரீசார்ஜ் செய்து, இஷ்டப்படி டிராவல் பண்ணலாம்” என்றார்.

ஆலந்தூருக்கான டிக்கெட் டோக்கனைப் பெற்றுக்கொண்டாள் சரஸ்வதி. பக்கத்திலேயே பணம் செலுத்தி, டோக்கன் பெறும் தானியங்கி இயந்திரமும் இருந்தது. ‘‘நாங்க அதில் எடுக்கிறோம்” என்ற சாய்லட்சுமி, அந்த இயந்திரத்தின் தொடுதிரையில், செல்ல வேண்டிய இடத்தைக் குறிப்பிட்டு, பணம் செலுத்தி டோக்கனைப் பெற்றாள்.

நீல நிற டோக்கனுடன் பாதுகாப்புப் பரிசோதனைகளை முடித்துக்கொண்டு, இரண்டாம் தளத்துக்குச் செல்லும் நுழைவுப் பகுதிக்கு வந்தார்கள்.

‘‘எல்லோருக்கும் நான் கைடு பண்றேன். இங்கே இருக்கிற கம்ப்யூட்டர் ஸ்கிரீன் மேலே டோக்கனை வைத்தால்தான், டோர் திறக்கும். கையோடு டோக்கனை எடுத்துட்டு வந்துடுங்க. நாம இறங்கும் ஸ்டேஷனில் இதே மாதிரி வழி இருக்கும். அங்கே டோக்கனைப் போட்டாதான் வெளியே போக முடியும். இல்லைனா ஃபைன் கட்டணும்” என்றாள் மனுத்ரா.

‘டன்டணக்கா.... டக்கா டக்கா” எனப் பாடியவாறு இரண்டாம் தளத்து பிளாட்பாரத்துக்கு வந்தார்கள். ரயில் வருகிறதா என ஆவலோடு எட்டிப் பார்க்க, செக்யூரிட்டி விசில் அடித்தவாறு வந்தார்.

“இந்த மஞ்சள் கோட்டைத் தாண்டாம நில்லுங்க. இங்கேதான் ரயிலுக்குள் போறதுக்கான கதவுகள் பகுதி வரும். ஆட்டோமேட்டிக் டோர். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் 35 செகண்ட்ஸ் நிற்கும். ஏறினதும் உள்ளே போய்டுங்க. கதவுக்குப் பக்கத்தில் நிற்காதீங்க” என்றார்.

“எதுவும் சேட்டை பண்ணிடாதே சதீஷ், ஒவ்வொரு ஸ்டேஷனிலும் 30 கண்காணிப்பு கேமராக்கள் இருக்காம். ரயிலிலும் கேமரா இருக்காம்” என நண்பனிடன் கூறினான் சையத் இம்ரான்.

பிளாட்பாரத்தில் இருந்த எல்.இ.டி திரைகளில் அடுத்த ரயில் எத்தனை நிமிடங்களில் வரும் எனக் காட்டப்பட்டது. ஐந்து நிமிடங்கள், நான்கு நிமிடங்கள் எனக் குறைந்துகொண்டே பூஜ்யத்துக்கு வந்தபோது, நீல நிறத்தில் ரயிலின் முகப்பு தெரிந்தது.

“ஹேய்ய்ய்ய்ய்ய்... ரயில் வந்தாச்சு... பிரெட்ல தடவுற ஜாம் மாதிரி நைசா வழுக்கிக்கிட்டு வருது” எனக் குஷியாகக் கத்தினார்கள்.

ரயில் வந்து நின்றதும், தானியங்கிக் கதவுகள் திறந்தன. முழுவதும் குளிர்சாதனம் செய்யப்பட்ட பெட்டிகள். பயணிகளை வரவேற்ற அறிவிப்புக் குரல், திரையிலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத்துகள் ஒளிர்ந்தன. தானியங்கிக் கதவுகள் மூடிக்கொள்ள, ரயில் புறப்பட்டது.

இரண்டு மாடி உயரத்தில் செல்லும் ரயிலின் கண்ணாடி ஜன்னல்கள் வழியே வேடிக்கை பார்த்தார்கள். “ஷாலினி, நம்ம ஸ்கூல் தெரியுதானு பாரு” என்றாள் தாரிணி.

“ஓ... நம்ம கிளாஸும் தெரியுது. சயின்ஸ் டீச்சர் நம்மளைப் பார்த்து, ‘சீக்கிரம் கிளாஸை அட்டென் பண்ண வாங்க’னு ஜாடை காட்றதும் தெரியுது” எனச்  சிரித்தாள் மன்னுரு ஷாலினி.

“இங்கே கவனிங்கப்பா... ரயிலில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், இந்த பட்டனை அழுத்தி, மைக்கில் டிரைவருக்குத்  தகவல் சொல்லலாம்னு எழுதி இருக்கு. ஸ்ரீனிவாசன், அறுவை ஜோக்கா சொல்லி இம்சை பண்றான். பட்டனை அழுத்திடலாமா?” என்றான் சதீஷ் குமார்.

“தேவை இல்லாமல் அழுத்தினால், ஃபைன் கட்டணும்னு எழுதி இருக்கிறதையும் கவனி. எமர்ஜென்ஸி சமயத்தில், கதவைத் திறக்கறது எப்படினும் இருக்கு” என்றான் ஸ்ரீனிவாசன்.

கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையான 10 கிலோமீட்டர் தூரத்தை, 19 நிமிடங்களில் கடந்து வந்துசேர்ந்தது மெட்ரோ ரயில். மகிழ்ச்சியோடு ரயிலைவிட்டு இறங்கினார்கள். “பஸ்ஸிலோ, பைக்கிலோ வந்திருந்தால், டிராஃபிக்கில் மாட்டி இருப்போம். இவ்வளவு சீக்கிரம் வர்றதுக்கு சான்ஸே இல்லை. இப்போதைக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் ரயிலைச் செலுத்துறாங்க. வேகத்தை அதிகப்படுத்தினால், இன்னும் சீக்கிரமா போய்டலாம். நேரமும் மிச்சம், பயணமும் சொகுசாக இருக்கும். மெட்ரோ ரயில் திட்டம், சென்னைக்குக் கிடைச்சிருக்கிற அற்புத வரம்” என்றார்கள்.

டோக்கனைச் செலுத்திவிட்டு வெளியே வந்தபோது, மீண்டும் குஷியாக ஆரம்பித்தது ‘டன்டணக்கா’ பாட்டுக் கச்சேரி.

மெட்ரோ ரயில்...

சென்னைக்கு மெட்ரோ ரயில் கொண்டுவருவதற்கான திட்டம், 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதன் மொத்த திட்ட மதிப்பு, 14,600 கோடி ரூபாய்.

2009-ம் ஆண்டு, மெட்ரோ ரயிலுக்கான பணிகள் தொடங்கியது. இப்போது, கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையான வழித் தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயங்குகின்றன. வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம், சென்னை சென்ட்ரல் முதல் செயின்ட் தாமஸ் மவுன்ட் வரையான வழித்தடங்களின் பணிகள், விரைவாக நடந்து கொண்டிருக்கின்றன.

கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையான மெட்ரோ ரயிலின் பொது வகுப்புப் கட்டணம், 40 ரூபாய். குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாய்.  20 நபர்கள்கொண்ட குரூப் என்றால், டிக்கெட் கட்டணத்தில் 10% சலுகை உண்டு. 

சிறப்பு வகுப்பு பயணம், பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான பகுதிகளும் உள்ளன.

கோயம்பேடு ரயில் நிலையத்தில் இருந்து தினமும் காலையில் 6 மணிக்கு முதல் ரயில் கிளம்பும். இரவு 10 மணி வரை, 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயங்கும்.

இந்த மெட்ரோ ரயிலை ஆள் இல்லாமல் இயக்கும் வசதியும் இருக்கிறதாம். அதை, இப்போதைக்குச் செயல்படுத்தும் திட்டம் இல்லை என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

கே.யுவராஜன்

பா.அருண்

ஒருங்கிணைப்பு: கே.கணேசன், கே.ஆர்.ராஜமாணிக்கம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick