அரிச்சுவடி படிக்கும் இத்தாலிய விருந்தாளிகள்!

"வாங்க, வணக்கம், தண்ணீர், நன்றி’’ என்று கொஞ்சும் தமிழில், பளிச் சிரிப்போடு வரவேற்கிறார்கள், லியோனார்டோ மோடினா (Leonardo modina) மற்றும் மார்ட்டின் மெட்ஜர் (Martin metzger). காரைக்குடிக்கு வந்திருக்கும் இத்தாலிய விருந்தாளிகள்.

‘‘பிரதர்ஸ், நன்றியைப் போகும்போதுதான் சொல்லணும். நடுவுல தண்ணீரைக் கொண்டுவந்துட்டீங்க. பரவாயில்லை, அடுத்த முறை சரிசெய்துக்கலாம்” என்று ஆங்கிலத்தில் சொன்னார்கள், அவர்களைச் சுற்றி நின்றிருந்த நம் தமிழ் மாணவர்கள்.

காரைக்குடி, செட்டிநாடு பப்ளிக் ஸ்கூலில்தான்  இந்த கலாட்டா. யார் இந்த விருந்தாளிகள்?

“நாங்கள் இரண்டு பேரும் இத்தாலியைச் சேர்ந்தவர்கள். இருவரும் இத்தாலி நாட்டுக் கல்வி முறையில், நான்காம் நிலை படிக்கிறோம். இங்குள்ள கல்வி முறைக்கு 11-ம் வகுப்பு. அமெரிக்கன் ஃபீல்டு சர்வீஸ் (American Filed Service - A.F.S) அமைப்பின் மூலம் வந்திருக்கிறோம். இந்த ஒரு வருடம் இங்குதான் படிக்கப்போகிறோம்” என்றார் லியோனார்டோ மோடினா.

 முதல் உலகப் போரின் முடிவில், ஆம்புலன்ஸ் டிரைவர்களால் தொடங்கப்பட்ட அமைப்பு, அமெரிக்கன் ஃபீல்டு சர்வீஸ். உலகம் முழுவதும் உள்ள மாணவர்களிடையே நட்புறவை உண்டாக்கி, போர் மற்றும் வன்முறை இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பது இந்த அமைப்பின் நோக்கம்.

‘‘அதற்காக, உலகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து குறிப்பிட்ட மாணவர்களைத் தேர்வுசெய்து, வேறு நாடுகளுக்கு அனுப்புவார்கள். அப்படித்தான் இந்தியாவின் தமிழ்நாட்டுக்கு நாங்கள் தேர்வாகி வந்திருக்கிறோம். தமிழ்நாட்டின் கலாசாரம், பண்பாடுகளைத் தெரிந்துகொள்வதோடு, தமிழையும் கற்றுக்கொள்வோம். அரிச்சுவடியில் இருந்து எங்கள் கல்வியை ஆரம்பித்திருக்கிறோம்’’ என்கிறார் மார்ட்டின் மெட்ஜர்.

‘‘இவங்க இரண்டு பேரும் வர்றது பற்றி ஸ்கூலில் சொன்னதும் ரொம்ப சந்தோஷப்பட்டோம். முதல் நாளில், பெரிய விழாவே நடந்தது. பட்டு வேட்டி, பட்டு சட்டையைப் போட்டு, பெரியவங்க மடியில் உட்காரவெச்சு, அரிசியில், ‘ஆனா ஆவன்னா’ எழுதவெச்சு, ‘அட்சராப்யாசம்’ செய்து, இந்தக் குழந்தை நண்பர்களைச் சேர்த்துக்கிட்டாங்க” என மார்ட்டின் தோளில் கைபோடுகிறார் ஒரு மாணவர்.

‘‘இந்த ஒரு வாரத்தில் இவங்களைப் பத்தியும் இவங்க நாட்டைப் பத்தியும் நிறையக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டோம். அதே போல நம்முடைய வீர வரலாற்றின் பெருமைகள், சிற்பக்கலை எனத் தொடங்கி, லேட்டஸ்ட் ஹிட் சினிமா பாட்டு வரைக்கும் சொல்லியிருக்கோம். அடுத்த வாரம் வந்து பாருங்க. உங்ககிட்டே பாட்டாலே பேசுவாங்க” எனச் சிரிக்கிறார் ஒரு மாணவி.

‘‘தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு அன்பானவங்க என இங்கே வந்த கொஞ்ச நாளிலேயே புரிஞ்சுக்கிட்டோம்.  பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதில் தொடங்கி, எல்லாவற்றுக்கும் விழா எடுக்குறீங்க. எல்லாமே வண்ணமயமாக, இசையோடு சேர்ந்திருக்கு. உங்க நாட்டு உணவும் பிரமாதம். இட்லியும் சட்னியும் ஸ்பெஷல்” என முகம் மலர்கிறார் லியோனார்டோ மோடினா.

இவர்களை ஒரு வருட விருந்தாளி மாணவர்களாக ஏற்றிருக்கும் செட்டிநாடு பப்ளிக் ஸ்கூலின் தாளாளர் குமரேசன், “அமெரிக்கன் ஃபீல்டு சர்வீஸ் அமைப்பின் மூலம், இந்த ஆண்டு 57 மாணவர்கள் இந்தியாவுக்கு வந்திருக்காங்க. அதில், தமிழ்நாட்டுக்கு வந்த மாணவர்கள்தான் இவர்கள். இங்கே படிக்கும் மாணவர்களின் வீட்டிலேயே தங்கி, பள்ளிக்கூடம் வரப்போறாங்க. இந்த ஒரு வருடம், அவர்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நாட்களாக அமையும். அதற்கு ஏற்ப, நம் நாட்டின் பெருமையையும், தமிழ் மொழியின் அருமையையும் அவங்களுக்குச் சொல்லித்தருவோம்’’ என்றார் மகிழ்ச்சியோடு.

ம.மாரிமுத்து

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick