படிப்பு வேறு... அறிவு வேறு!

- உணரவைத்த உற்சாகத் திருவிழா!

ற்சாகம், உத்வேகம், குதூகலம், கொண்டாட்டம் என நாள் முழுவதும் களை கட்டியது, சுட்டி விகடனின் ‘பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்’ நிகழ்ச்சி. இந்த ஆண்டுக்கான சுட்டி ஸ்டார்களாகத் தேர்வான 55 பேரும், சரியான நேரத்துக்கு ஆஜராகி, ‘நாங்கள் சூப்பர் பெர்ஃபெக்ட்’ என்றார்கள். இனி வரும் சுட்டி விகடனில் உங்கள் படைப்பாற்றலால் பின்னி எடுக்கப்போறீங்க. இந்த நிமிஷத்தில் இருந்தே அதை ஆரம்பியுங்க. நிகழ்ச்சியை என்ஜாய் பண்ணும் அதே நேரம், ரிப்போர்ட்டிங் கொடுக்கவும் குறிப்புகள் எடுத்துக்கங்க’ என்றதும், சுறுசுறுப்பாகத் தயாரானார்கள். இதோ, நிகழ்ச்சியைப் பற்றிய அவர்களின் லைவ் ரிப்போர்ட்...  

படிப்பும் திறமையும்!

28.6.2015 ஞாயிற்றுக்கிழமை, மயிலாப்பூர் பி.எஸ்.மேல்நிலைப் பள்ளியில் பெற்றோருடன் கூடியிருந்தோம். சரியாக 9.45 மணிக்கு, ‘ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்’ என்ற வேலு மாமாவின் குரல், எங்களை உற்சாகத்துடன் வரவேற்றது.

‘‘நீங்க எல்லாம் ரொம்ப நல்லா படிப்பீங்களா..? நல்லா படிக்கிற ஸ்டூடன்ட்ஸைத்தான் பெரும்பாலான டீச்சர்களுக்குப் பிடிக்கும். ஆனா, இங்கே ஒருத்தர் வந்திருக்கிறார். அவருக்கு, படிக்காத குழந்தைகளைத்தான் ரொம்பப் பிடிக்கும். அவங்களுக்காகவே ஒரு ஸ்கூலை நடத்தறார். அவர் உங்களுக்கு என்ன சொல்லப்போறார்னு பார்ப்போமா?” என வேலு மாமா, பயங்கர சஸ்பென்ஸ் கொடுத்தார்.

‘ஹெலிக்ஸ்’ மனிதவள மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் சேர்மன் செந்தில்குமார்  அங்கிள், எங்கள் முன்னாடி வந்தார். ‘பலன்கள் ஏராளம்’ என்ற தலைப்பில் பேச ஆரம்பித்தார்.

‘‘படிப்பு என்பது வேறு, அறிவு என்கிற திறமை வேறு. கணக்கு தெரியாததாலோ, வரலாறு வராததாலோ ஒரு குழந்தை முட்டாள் என அர்த்தம் கிடையாது. அதே குழந்தை, வேறு பல விஷயங்களில் நம் எல்லோரையும் மிஞ்சும் திறமைசாலியாக இருக்கும். நம்மைவிட அற்புதமாக ஓவியம் வரையலாம், நடனம் ஆடலாம், புரிஞ்சுக்கவே முடியாத ஒரு பிரச்னைக்கு சுலபமாகத் தீர்வு சொல்லலாம். இன்றைய காலகட்டத்தில், 40 பேர் இருக்கும் ஒரு வகுப்பில், நான்கு குழந்தைகளாவது அப்படி இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. உங்கள் வகுப்பில், உங்களுக்குப் பக்கத்தில் அப்படி ஒரு தோழனோ, தோழியோ இருந்தால், அவங்களை ஒதுக்கிடாதீங்க. அவங்களைப் புரிஞ்சுக்கங்க” என்றவர், அப்படிப்பட்ட நண்பர்களை எப்படிப் புரிந்துகொள்வது எனச் சொன்னார்.

கை... கை... இடக்கை!

பள்ளிப் பாடங்கள், நம்மில் பலருக்கு ஏன் வெறுப்பைத் தருகின்றன? வீடியோ கேம்ஸ் விளையாட மிகவும் பிடிப்பது ஏன் என்பதைச் சொன்னவர், அந்த வீடியோ கேம்ஸ் போல  பார்ப்பதை, விளையாடுவதை பாடத் திட்டத்தோடு எப்படி  தொடர்புபடுத்துவது என்பதைச் சொன்னபோது, ‘ஆஹா... இந்த மாதிரி பாடங்கள் இருந்தால், 24 மணி நேரமும் ஸ்கூலிலேயே இருக்கலாமே’ என நினைத்தோம்.

பிறகு, இடது கையை மட்டுமே உபயோகப்படுத்தி, காகிதத்தில் படகு செய்ய சவால்விட்டார் செந்தில்குமார் அங்கிள். ‘ப்பூ... இது ஒரு விஷயமா’ என ஆரம்பித்தோம்.  இத்தனை வருடங்களா வலது கையை மட்டுமே பயன்படுத்திவந்ததால், இடது கையால் காகிதத்தை ஒரு மடக்கு மடக்கவே திணறிப்போனோம். அப்புறம், பெரிய மனதுவைத்து ‘‘ஒவ்வொருத்தரும் ஒரு பார்ட்னரை சேர்த்துக்கங்க. ரெண்டு பேரின் இடது கைகளால் படகு செய்ங்க” என்றார்.

ஒருவர் பேப்பரைப் பிடித்துக்கொள்ள, இன்னொருவர் மடக்க, படகுகளைச் செய்து முடித்தோம். பிறகு, நாம் இடது கையைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் என்ன? அதனால், மூளையின் செயல்பாடு எப்படி இருக்கும் எனப் பல விஷயங்களைச் சொல்லி, ஆச்சர்யப்படுத்தினார்.

முதல் பேட்டி!

அடுத்து, சக்தி விகடன் ஆசிரியர், ரவிபிரகாஷ் அங்கிள் வந்தார். பேனா பிடித்திருக்கும் நாங்கள், எப்படி எல்லாம் பின்னி எடுக்கலாம் என்பதற்கு, ‘என்ன எழுதலாம்... எப்படி எழுதலாம் ?’ என்ற தலைப்பில் டிப்ஸ்களாகக் கொட்டினார். நிமிடக் கதைகள், ஒரு பக்கக் கதைகள், சிறுகதைகள், ஒவ்வொன்றுக்கும் என்ன வித்தியாசம், அதில் எப்படி அழகான ட்விஸ்ட் கொடுக்கலாம் என உதாரணக் கதைகளோடு சொன்னது, அட! போட வைத்தது. ‘‘ஒரு தகவலை எழுதும்போது, அது உண்மைதானா என ஆராய்ந்து, நம்முடைய பொறுப்புணர்வை உணர்ந்து எழுத வேண்டும்”  என்றார். கூச்சம் இல்லாமல் எல்லாரோடும் பழகுவது, கூட்டு முயற்சி, தகவல் பரிமாற்றம் ஆகியவை பத்திரிகையாளர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் சொன்னார்.

‘‘உங்க திறமையை இந்த நிமிடத்தில் இருந்து பார்க்கலாம். ஒரு மாதம் முன்னாடி வரைக்கும் முட்டை என்றதும் கோழி முட்டை ஞாபகத்துக்கு வந்துட்டு இருந்துச்சு. இப்போ, காக்கா முட்டை படமும், அதில் நடிப்பால் கலக்கி எடுத்த விக்னேஷ், ரமேஷ்தான் கண் முன்னாடி வர்றாங்க. இப்போ, நிஜமாகவே உங்க முன்னாடி வந்திருக்காங்க. அவங்ககிட்டே பேட்டி எடுங்க” என்றார் ரவிபிரகாஷ் அங்கிள்.

‘காக்கா முட்டை’ படத்தின் இயக்குநர் மணிகண்டன், விக்னேஷ் மற்றும் ரமேஷ் உற்சாகமான கைதட்டலுக்கு மத்தியில் வந்து நின்றார்கள். ‘ஆஹா... நாமும் ரிப்போர்ட்டர் ஆகிட்டோம்ல’ என கெத்தாக எங்கள் கேள்விகளைக் கேட்டோம். அவங்களும் அசராமல் பதில்களைச் சொன்னாங்க. (அந்தக் கேள்வி பதில்கள், இதே இதழில் வேறொரு பக்கம் இடம்பெற்றுள்ளன).

அறிவுக்கும் விருந்து!

மதிய உணவுக்குப் பின் ஆரம்பித்தது,  ‘கைகளில் கண்ணாமூச்சி’ என்ற கலகலப்பான பகுதி. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலப் பொருளாளர் சுப்பிரமணியன் செய்த விரல் வித்தைகள் ஒவ்வொன்றும் அற்புதம். ‘‘இது  வேடிக்கைக்காக மட்டும் இல்லே. தினமும் இந்தப் பயிற்சிகளைச் செய்தால், நம் அன்றாட வாழ்க்கையில் கிடைக்கும் பலன்கள் நிறைய’’ என்று விளக்கினார்.

இவரைப் போலவே, ஒவ்வொரு  நிகழ்ச்சியின் இடையிலும், சின்னச் சின்ன அறிவியல் சோதனைகளை கலகப்பாக நடத்தி விருந்து படைத்தார், பெயரிலேயே அறிவை வைத்திருக்கும் அறிவரசன் அண்ணா.

புதையல் வேட்டை!

அடுத்து நடந்தது, படு உற்சாகமான ‘வேட்டையாடு விளையாடு’ நிகழ்ச்சி. வேலு மாமாவோடு தங்க வேட்டைக்குச் சென்றோம்.   வெவ்வேறு இடங்களில் மறைத்துவைத்திருந்த குறிப்புகளை ஓடி... ஓடி... தேடித் தேடிக் கண்டுபிடித்து, பரிசுப் பெட்டியை எடுத்தபோது, களைப்பு பறந்தேபோனது.

புதையல் பரிசுகளோடு உட்கார்ந்த எங்களுக்கு, போன வருடம் சுட்டி விகடனில் கலக்கி, ‘சூப்பர் சுட்டி ஸ்டார்’ சான்றிதழும் கேடயமும் வாங்கிய சீனியர்களின் டிப்ஸ், ஊக்கத்தைக் கொடுத்தது.

‘‘போன வருஷம் உங்களை மாதிரிதான் இதே இடத்தில், என்ன செய்யப்போகிறோம்னு தெரியாமல் உட்கார்ந்து இருந்தோம். இந்த ‘பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்’ திட்டம் மூலம் தன்னம்பிக்கை, தைரியம், மொழித்திறன் எனப் பல விஷயங்களை வளர்த்துக்கிட்டோம். அடுத்த வருஷம் நீங்க எல்லோருமே சூப்பர் சுட்டி ஸ்டார்களாக இங்கே வரணும்’’ என்றார் ஒரு சீனியர் சுட்டி ஸ்டார்.

பேனா பிடிச்சுட்டோம்ல... பின்னி எடுத்துருவோம்ல!


சுட்டி ஸ்டார்ஸ்

வெ.க.தாரிணி, ஆ.ஷ்.மோகனப் பிரியா, ஜெ.சந்தோஷ் ராம், பி.என்.எஸ்.அருண் பாலாஜி, ம.கவிப்பிரியா, நி.சௌமியா, ந.சிதம்பரம், மு.தனலெட்சுமி, சு.சத்யா,  அ.அபிராமி, சு.சுரேகா, எ.பிரியவர்ஷினி, கி.ஸ்ரீனிவாசன், ம.ஸ்வேதா, ச.அபிநயா,  ச.அரவிந்த், த.நித்ய செளந்தர்யா, சி.மெய் பாரதி, வீ.ஹரிணி.

வீ.நாகமணி, சொ.பாலசுப்ரமணியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick