"தேடல் வேட்டை தொடரும்!”

குழந்தை எழுத்தாளர் செல்ல கணபதி

விடுமுறை நாளில்

வெளியூர் செல்வோம்

விதவித மான

வேடிக்கை பார்ப்போம்

படபட படவெனப்

பரவும் உற்சாகம்

பார்ப்பது புதியது

பழகவும் புதியது

ந்தப் பாடலைப் பாடும்போது உற்சாகம்  நம்மைத் தொற்றிக்கொள்ளும். இதை எழுதியவர், குழந்தைக் கவிஞர் செல்ல கணபதி. குழந்தைகளுக்காக 40-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். இவர் எழுதிய ‘தேடல் வேட்டை’ எனும் குழந்தைப் பாடல் புத்தகத்துக்கு, சாகித்ய அகாடமியின் ‘பால சாகித்ய புரஸ்கார் விருது’ கிடைத்துள்ளது. புதிது புதிதாக எழுத விரும்பும் இவருக்கு வயது 74. ஓய்வு நேரத்தில், குழந்தைகள் சுற்றி இருக்க, தன் புத்தகத்தில் இருக்கும் பாடல்களை ராகத்துடன் பாடிக் காட்டிக்கொண்டிருந்தார்.

‘‘உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்’’

“நான் பிறந்தது சிவகங்கை மாவட்டம் கண்டனூர். தொழில் காரணமாக கோவைக்கு வந்துவிட்டேன். என்னுடைய மனைவி, உமையாள். என் மகன் சிதம்பரம் தொழில் செய்கிறார். மகள் மீனாள், திருமணமாகி சென்னையில் இருக்கிறார். எங்களுக்கு நான்கு பேரன், பேத்திகள். விடுமுறை நாட்களில் எல்லோரும் ஒன்றுகூடி, வீட்டைக் கலகலப்பாக்கிவிடுவார்கள். என்னுடைய பேரன், பேத்திகளுடன் பேசுவதும் விளையாடுவதும் என் எழுத்துக்கு ஊக்க சக்தியைக் கொடுக்கிறது.’’

‘‘உங்களுக்கு எப்படி எழுத்தின் மீது ஆர்வம் வந்தது?’’

“நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது, ஒரு நாள் அறிவியல் ஆசிரியர் வரவில்லை. அந்த வகுப்புக்கு தமிழ் ஆசிரியர், புலவர் ஆறுமுகம் வந்தார். எங்களிடம் கதைகள், பாடல்கள் எழுதச் சொன்னார். அடுத்த நாளே ஒரு பாடல் எழுதிக் காட்டினேன். அதைப் படித்துப் பாராட்டியவர், ‘உனக்கு பாடல் எழுத நன்றாக வருகிறது. தொடர்ந்து எழுது’ என்றார். அது எனக்கு ரொம்பவே உத்வேகம் அளித்தது. அதிலிருந்து தொடர்ந்து எழுதிவருகிறேன்.”

‘‘உங்களுடைய முதல் புத்தகம் எது?’’

‘‘ ‘வெள்ளை முயல்’ எனும் குழந்தைப் பாடல் புத்தகம். இது, 1960-ம் ஆண்டு வெளிவந்தது. இந்தப் புத்தகத்தைப் பற்றி சுவாரஸ்யமான செய்தி ஒன்று இருக்கிறது. ‘வெள்ளை முயல்’ புத்தகத்தில் இருக்கும் பாடல்களை, சிங்கப்பூர் பள்ளிப் பாடப் புத்தகத்தில் சேர்த்திருக்கிறார்கள். இந்தத் தகவல் எனக்கு பிறகுதான் தெரியவந்தது. 26 சிறுவர் பாடல் நூல்கள், ஒரு சிறுவர் சிறுகதை நூல், 6 சிறுவர் நாவல்கள், கவிதை நூல் நான்கு உள்ளிட்ட 43 நூல்களை எழுதியிருக்கிறேன்.’’

‘‘உங்கள் பாடல்களில் பயணங்கள் பற்றி உற்சாகமாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறீர்களா?’’

‘‘பயணம் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். நிறைய மனிதர்களுடன் பழகுவதற்கு, அது ஒரு வாய்ப்பு. சிங்கப்பூர் மற்றும் துபாய் நாடுகளில் குழந்தைகள் இலக்கியம் பற்றிப் பேசுவதற்காகச் சென்றிருக்கிறேன். அமெரிக்கா, ஜப்பான், மலேசியா போன்ற நாடுகளுக்கும் சென்றிருக்கிறேன்.’’

‘‘குழந்தைகள் இலக்கியத்தில் உங்களை வியக்கவைத்தவர் யார்?’’

‘‘எல்லோருக்குமே பிடித்த அழ.வள்ளியப்பா. அவர்தான் புதிதாக எழுத வருபவர்களைப் பாராட்டி, தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்கம் அளித்தவர். குழந்தைகளுக்காக அவர் எழுதிய பாடல்களை, எப்போது படித்தாலும் அலுப்புத் தராது. என்னைப் போன்றவர்களை வளர்த்தெடுத்த பெருமை அவரையே சேரும்.’’

‘‘குழந்தைகளுக்குப் பாடப் புத்தகம் படிக்கிறதே பெரிய வேலையாக இருக்கிறது; கதை, பாடல் புத்தகங்களை ஏன் படிக்க வேண்டும்?’’

“அவசியம் படிக்க வேண்டும். எப்போதும் பாடப் புத்தகத்தையே படித்துக் கொண்டிருப்பதால், குழந்தைகளின் மனம் முழுக்க பாடங்களே நிறைந்திருக்கும். அது, சரியான வளர்ச்சி அல்ல. அவர்களுக்கு கதைகள், பாடல்கள் முக்கியம். பறவைகள், விலங்குகள், உறவுகளின் அருமையைப் புரிந்துகொள்ள இவை தேவை. கதைப் புத்தகங்கள் படிப்பதால், பாடப் புத்தகங்களை பொருள் புரிந்து படிப்பதற்கும் உதவும்.’’

‘‘குழந்தைகளுக்கு எழுதுவது தவிர, அவர்களுக்காக வேறு என்ன செய்திருக்கிறீர்கள்?’’

‘‘ ‘அழ.வள்ளியப்பா இலக்கிய வட்டம்’ எனும் அமைப்பை நண்பர்களோடு சேர்ந்து 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். மாணவர்களின் கலைத் திறனை வளர்ப்பதே இதன் நோக்கம். இந்த அமைப்பு, தொடக்கத்தில் கோவைப் பகுதியில் செயல்பட்டது. இப்போது, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் தன் பணியைச் செய்துவருகிறது.’’

‘‘ ‘பால சாகித்ய புரஸ்கார் விருது’  போல வேறு என்ன விருதுகள் பெற்றிருக்கிறீர்கள்?’’

‘‘என்னுடைய பல நூல்களுக்கு, குழந்தை எழுத்தாளர் சங்கப் பரிசு, திருப்பூர் தமிழ்ச் சங்கப் பரிசு, பாரத ஸ்டேட் வங்கிப் பரிசு உள்ளிட்ட பல பரிசுகள் கிடைத்திருக்கின்றன. ‘மணக்கும் பூக்கள்’ எனும் நூலுக்காக, தமிழ்நாடு அரசு விருது கிடைத்தது. இந்த ‘பால சாகித்ய புரஸ்கார் விருது’ கிடைத்ததை, தொலைக்காட்சி பார்த்துவிட்டு நண்பர்கள் சொன்ன பிறகுதான் தெரியும். விருது பெறுவது மகிழ்ச்சி தருவதோடு, அடுத்த படைப்பை உருவாக்க உற்சாகத்தை தருகிறது என்பதை மறுக்க முடியாது. ஆனாலும், விருதை எதிர்பார்த்து எழுதுவது கிடையாது. குழந்தைகளின் மகிழ்ச்சியான உலகில், என்னுடைய நூல்கள் சில பூக்களாக, கூடுதல் மகிழ்ச்சியைச் சேர்க்க வேண்டும் என்ற ஆசை. அதற்காக, வார்த்தைப் பூக்களைத் தேடும் எனது தேடல் வேட்டை தொடரும்.’’


‘சாகித்ய அகாடமி’ என்பது இந்திய அரசால் 1954-ம் ஆண்டு நிறுவப்பட்ட ஓர் அமைப்பு. இந்திய இலக்கிய வளர்ச்சிக்கு உதவுவதே இந்த அமைப்பின் நோக்கம். பல்வேறு இலக்கியக் கூட்டங்களை நடத்துவதோடு, ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருதும் அளிக்கிறது. இந்த விருது, தமிழ் உள்பட  22 இந்திய மொழிகளில் எழுதும் எழுத்தாளர்களுக்குத் தரப்படுகிறது. அதில், ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது, 2010-ம் ஆண்டு புதிதாகத் தொடங்கப்பட்டது. இந்த விருது, சிறந்த சிறுவர் இலக்கியம் படைப்பவர்களுக்கு தரப்படுகிறது. இந்த ஆண்டு, ‘தேடல் வேட்டை’ நூலுக்காக, செல்ல கணபதி பெற்றிருக்கிறார்.

வி.எஸ்.சரவணன்

ஜெ.வேங்கடராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick