வெள்ளைச்சாமி விதைக்கும் விதைகள்

ங்க வீட்டுக்கு முன்னாடிவெச்ச வேப்பமரம் நல்லா வளர்ந்துடுச்சு.  வெள்ளைச்சாமி மாமா வந்ததும், தென்னை மரக்கன்று கேட்கப்போறேன்” என்று ஆவலோடு சொல்கிறான் ஹரிஹரன் என்ற சுட்டி.

மதுரை, மேலூர் தமிழரசி நடுநிலைப் பள்ளியின் மொத்த  மாணவர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். சற்று நேரத்தில், சிறிய டெம்போ வேனில் வந்து இறங்கினார் வெள்ளைச்சாமி.  “எல்லோரும் நல்லா இருக்கீங்களா?” எனக் கேட்க, சுட்டிகளிடம் உற்சாகப் பதில் குரல்.

வேனில் கொண்டு வந்த மரக்கன்றுகளை ஒவ்வொரு மாணவரிடமும் கொடுத்துவிட்டு, ‘‘இந்தச் செடிகளைப் பத்திரமாக வீட்டுக்கு எடுத்துட்டுப்போங்க. தோட்டத்திலோ, வீட்டு முன்னாடியோ நட்டுவைங்க. இதுக்கு எப்படி தண்ணீர் ஊற்றுவது, எப்படிக் கவனிச்சுக்கிறதுனு சொல்றேன். அப்பா, அம்மாகிட்டே சொல்லி, அந்த மாதிரி செய்ங்க. நீங்க இப்போ குட்டிப் பசங்களா இருக்கீங்க. பெரிய வகுப்புக்குப் போகும்போது, இந்தச் செடியும் பெரிசா, ரொம்ப உயரமான மரமா வளர்ந்திருக்கும். தென்னங்கன்று வாங்கினவங்களுக்கு இளநீர் காய்க்கும், மாங்கன்று வாங்கினவங்க நிறைய மாம்பழங்கள் சாப்பிடலாம்’’ என்று சொல்லச் சொல்ல, சுட்டிகளின் முகங்களில் உற்சாகம்.

மரக்கன்றுகளைக் கொடுத்துவிட்டு, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாகப் பதில் சொன்ன வெள்ளைச்சாமியை, அந்தப் பகுதியில் இருக்கும் பெரியவர்களைவிட, சிறியவர்களுக்குத்தான் அதிகம் தெரியும். எப்போதும் புன்னகையோடு உலாவரும் பசுமைக் கொடையாளி.

“வாகனப் புகை, தொழிற்சாலைப் புகை என நம்முடைய சுற்றுச்சூழலில் நாளுக்கு நாள்  மாசு அதிகமாகிட்டே இருக்கு. புதிய புதிய நோய்கள் உருவாகுது. இதையெல்லாம் தவிர்க்க, மரங்களை அதிகமாக வளர்க்கணும். இதைப் பெரியவங்களைவிட, பிஞ்சுக் குழந்தைகள் மனதில் விதைப்பது சுலபம். அதற்்கான முயற்சியாக, பல்வேறு பள்ளிகளுக்கு நேரில்போய் கொடுக்கிறேன். வருஷத்துக்கு 1,000 மரக்கன்றுகளை இலக்கா வெச்சு கொடுத்துட்டு இருக்கேன். ஆயிரமாயிரம் மரக்கன்றுகள் வளர்ந்து, நாளைய சமுதாயத்துக்குப் பயன் கொடுக்கட்டுமே” என்கிறார் வெள்ளைச்சாமி.

பள்ளி மாணவர்களிடம் மரக்கன்றுகளைக் கொடுப்பது நல்ல பலன் அளிப்பதாகச் சொல்லும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவக்குமார், “போன குடியரசு தின விழாவில் இவர் கொடுத்த மரக்கன்றுகளை வாங்கிட்டுப்போன குழந்தைகள், அதை  நல்லபடியா வளர்க்கிறதை நேரில் பார்த்து  சந்தோஷப்பட்டிருக்கேன். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் மாதிரி, குழந்தைகள் மனதிலும் இந்த மண்ணிலும் நல்ல விதைகளை விதைக்கும் வெள்ளைச்சாமி, பாராட்டப்பட வேண்டியவர்” என்கிறார் மகிழ்ச்சியோடு.

ம.மாரிமுத்து

சே.சின்னத்துரை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick