விசில் சத்தம்

”அம்மா, நான் ஸ்கூலுக்குக் கிளம்பறேன்” என்றபடி புத்தகப் பையை எடுத்துக்கொண்ட  மதியழகனின் கைகள் நடுங்கி வியர்த்தன. அம்மா பார்க்கும் முன், சட்டென வெளியே வந்துவிட்டான்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மதியழகன்,  படிப்பில் கெட்டிக்காரன். எப்போதும் உற்சாகமாகக் கிளம்பும் மதியழகன், இன்று பதற்றமாக இருக்கக் காரணம், முதல் முறையாக வீட்டுக்குத் தெரியாமல் ஒரு தவறு செய்யப்போகிறான். இன்று பள்ளிக்குச் செல்லாமல், சினிமாவுக்குச் செல்லப்போகிறான்.

நேற்று உணவு இடைவேளையில், பத்தாம் வகுப்பு படிக்கும் முத்து, வெங்கட், திவாகரோடு பேசிக்கொண்டிருந்தான். இவனின் அபிமான நடிகரின் திரைப்படம் ரிலீஸாகும் பேச்சு எழுந்தது.

‘‘ட்ரெய்லரே மிரட்டுது. நாளைக்கு ஃபர்ஸ்ட் ஷோவுக்கே நாங்க போகப்போறோம். நீயும் வர்றியா?” எனக் கேட்டான் முத்து.

‘‘காலையிலா... ஸ்கூல் இருக்கே?” என்று பதறினான் மதியழகன்.

‘‘ஒரு நாள் கட் அடிச்சுட்டுப் போகவேண்டியதுதான். பத்தாம் வகுப்பு படிக்கிற நாங்களே தைரியமா போறோம். அந்த த்ரில்லே செமையா இருக்கும். வீட்டுல, நோட்டு வாங்கணும்னு சொல்லி, பணம் வாங்கிக்க. அடுத்த நாள் டீச்சர் ஏன் வரலைனு கேட்டா, உடம்பு சரியில்லைனு சொல்லிடு. நீ நல்லா படிக்கிற பையன். உன்னைக் கேட்கவே மாட்டாங்க” என்றான் வெங்கட்.

மதியழகனுக்கு ஆசை எட்டிப் பார்த்தது. எத்தனை நாளைக்குத்தான் அம்மா கூட்டிட்டுப் போவாங்க. அப்பா கூட்டிட்டுப் போவாங்கன்னு எதிர்பார்த்துக் காத்திருப்பது? அவனது வகுப்பு ஆசிரியர் மாணிக்கம் பற்றியும் தெரியும். விடுமுறை எடுக்கும் மாணவர்களை அதிகம் விசாரித்துக் கேட்க மாட்டார். ஒரே ஒரு முறை போய்தான் பார்ப்போமே என நினைத்தான்.

அம்மாவிடம் நோட்டு வாங்கப் பணம் கேட்டபோது, கொஞ்சமும் தயங்காமல் கொடுத்தார். மதியழகனுக்குத்தான் அதை வாங்கும்போது உறுத்தலாக இருந்தது. ஆனால் சினிமா பார்க்கும் ஆசை, அந்த உறுத்தலைத் துரத்தியது.

நண்பர்கள் சொன்ன, பாலத்தை ஒட்டிய மாரியம்மன் கோயில் வாசலுக்கு வந்தபோது, அவர்கள் தயாராக இருந்தார்கள். கோயிலுக்குப் பின்னால் இருந்த புதர் மறைவில், புத்தகப் பைகளை ஒளித்துவைத்துவிட்டுக் கிளம்பினார்கள்.

நல்ல வேளையாக, யாரும் இவர்களைப் பார்க்கவில்லை. மற்ற மூன்று பேரும் அந்தப் படம் பற்றி ஜாலியாகப் பேசிக்கொண்டே நடக்க, மதியழகன் மட்டும் அமைதியாக வந்தான்.

‘‘என்ன மதி, டென்ஷனா இருக்கா? தியேட்டரில் போய் உட்கார்ந்து, விசில் சத்தத்தைக் கேட்டதும் டென்ஷன் பறந்துடும்” என்ற திவாகர், மதியழகன் முதுகில் உற்சாகமாகத் தட்டினான்.

உண்மைதான்... இவ்வளவு ஆட்டம், விசில் சத்தத்தோடு இதற்கு முன்பு அவன் படம் பார்த்தது இல்லை. எந்தப் படம் வந்தாலும், ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் கழித்துதான் அப்பா அழைத்துச் செல்வார். அங்கே வந்திருப்பவர்கள், ஏதோ ஆராய்ச்சிக்கு வந்தது போல அமர்ந்திருப்பார்கள். அவ்வப்போது லேசான சிரிப்பு, மெல்லிய கைதட்டல் கேட்கும். இன்றைய அனுபவம், அவனுக்குப் புதிதாக இருந்தது.

படம் முடிந்து திரும்பிவந்து, புத்தகப் பைகளை  எடுத்துக்கொண்டார்கள். பொழுதை நகர்த்த வேண்டும் என்பதற்காக அங்கும் இங்கும் சுற்றிவிட்டு, மாலை நேரத்தில் அவரவர் வீடுகளுக்குத் திரும்பினார்கள்.

அடுத்த நாள், ஒருவித படபடப்புடனே வகுப்பில் அமர்ந்திருந்தான் மதியழகன். வகுப்பு ஆசிரியர் மாணிக்கம் உள்ளே நுழைந்தார். வருகைப் பதிவேடு எடுத்து,  பெயர்களை வரிசையாக அழைத்தார். இவன் பெயர் வந்ததும் “நேற்று ஏன் வரவில்லை?” எனக் கேட்டார்.
“அது... வந்து... ஜுரம் சார்” என்றான்.

“அப்படியா... டாக்டர்கிட்டே போனியா?’’ எனக் கேட்டார் ஆசிரியர்.

“ஆ... ஆமாம் சார்’’ என்றான்.

“சரி, நாளைக்கு அந்த மருந்துச் சீட்டை கொண்டுவந்து காட்டு” என்றபடி அடுத்த பெயரை அழைத்தார்.

மதியழகன் திகைத்து நிற்க, தலையைத் தூக்கிப் பார்த்து, ‘‘என்ன?’’ எனக் கேட்டார்.

‘‘ச... சரி சார்” என்றான்.

வருகைப் பதிவேடு முடிந்ததும், பாடம் நடத்த ஆரம்பித்தார் மாணிக்கம் சார். மதியழகனின் மனம் அலைபாய்ந்தது.

‘ஆசிரியர் என்னை நம்பவில்லை. ஏதோ விஷயம் தெரிந்திருக்கிறது. அதனால்தான் மருந்துச் சீட்டு  கேட்கிறார். இப்போது என்ன செய்வது? சே... வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களுக்கு நம் விஷயம் தெரிந்தால், இவ்வளவு நாட்களாக நம் மீது இருந்த மதிப்பு போய்விடுமே’ என நினைக்கும்போதே உடல் நடுங்கியது.

அந்த வகுப்பு முடிந்து, அடுத்த வகுப்புக்கான  மணி அடித்தது. மாணிக்கம் சார் வெளியேறி வராண்டாவில் நடக்க, சட்டென அவர் முன் சென்றான் மதியழகன்.

‘‘சா... சார் என்னை மன்னிச்சுடுங்க. எனக்கு உடம்புக்கு ஒண்ணும் இல்லே சார்” என்றான்.

‘‘தெரியும். நேற்று மதியம், பெர்மிஷன் போட்டுட்டு என் மனைவியை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போனப்ப, உன்னை சினிமா தியேட்டர் வாசலில் பார்த்தேன். எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு மதி” என்றார் ஆசிரியர்.

நடந்ததைச் சொன்ன மதியழகன், ‘‘இதுதான் சார் கடைசி. இனிமே இப்படிப் பண்ண மாட்டேன் சார்” என்றான்.

‘‘மதி, இந்த வயசுல சில விஷயங்கள் செய்றதுக்கு ரொம்ப த்ரிலிங்காதான் இருக்கும். அந்த த்ரில்லிங், ஒரு பலசாலியின் போதை மாதிரி. நாம நல்லாப் படிக்கிறோம். ஒரு நாள் இப்படிப் போவதால், நம்ம அறிவு மங்கிடாதுனு நினைப்போம். ஆனால், அந்த விசில் சத்தமும்  ஆர்ப்பாட்டமும் நம்மை வீழ்த்திடும். அந்த வெற்று ஆர்ப்பாட்டங்களால் நம்ம வாழ்க்கைக்கு எந்தப் பயனும் இல்லை மதி. காலையிலேயே மற்ற மூன்று பேரையும் தனியா கூப்பிட்டுக் கண்டிச்சேன். எனக்கு உன்னைப் பற்றித் தெரியும். நீயாக வருவேனு எதிர்பார்த்தேன்” என்று புன்னகைத்த ஆசிரியர், அவன் தோளில் தட்டிக்கொடுத்துவிட்டு நகர்ந்தார்.

ஐந்து நிமிடங்களுக்கு முன்பு வரை, மதியழகன் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்த விசில் சத்தம் இப்போது நின்றுபோயிருந்தது.           

எஸ்.சௌமியா

ராம்கி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick