தாஜ்மஹாலை பார்க்கும் வெற்றிலை!

‘‘எங்க அய்யம்மா (பாட்டி)  பொழுதுக்கும் வெத்தலையைப் போட்டுக்கிட்டு, ஊர்க் கதைகளைப் பேசிட்டிருப்பாங்க. நாங்க ஒரு வெத்தலையைக் கேட்டா, ‘சின்னப் புள்ளைங்க சாப்பிட்டா, மாடு முட்டும்னு பயமுறுத்துவாங்க. சரி, வெத்தலைதான் போட முடியல. அது எப்படி விளையுது, கடைகளுக்கு எப்படிப் போகுதுனு பார்த்துட்டு வரலாமே” என தளிர் வெற்றிலை போல துள்ளிக்கொண்டு கிளம்பினார்கள்.

தேனி மாவட்டம், வடுகபட்டியில் இருக்கும் பாலமுருகன் என்பவருக்குச் சொந்தமான வெற்றிலைத் தோட்டத்தில் நுழைந்தார்கள்.

அவர்களை வரவேற்ற பாலமுருகன், “தமிழ்நாட்டில் கும்பகோணத்துக்கு அடுத்து வெத்தலைக்குப் பேர்போன இடம், வடுகபட்டி. வெத்தலை ஒரு கொடி வகை. அது படர்றதுக்கு நிழலா, அகத்தி மரத்தை வளர்க்கணும். அகத்தி விதைகளை வாங்கி வந்து, மூணுக்கு நாலு என்ற இடைவெளியில், நீள் வரிசையில நடுவோம். இதுக்கு, ‘தான இடைவெளி’னு பேரு’’ என்றவர், தோட்டத்துக்குள் அழைத்துச் சென்றார்.

அங்கே, ஆள் உயரத்தில் வளர்ந்திருந்த அகத்தி மரங்களில், பசுமையாகப் படர்ந்து வாசனை பரப்பிக்கொண்டிருந்தன வெற்றிலைகள்.

‘‘இரண்டு மாசத்துல அகத்தி நல்லா வளர்ந்துடும். அப்புறம்,  வெத்தலைக் கொடியை ஒவ்வோர் அகத்தி மரத்துக்கும் இடையில் இருக்கிற இடைவெளியில் நடுவோம். அதில் நீர்ப் பாய்ச்சல் நடக்கும். 30 நாட்களில் வெத்தலை தளிர் விடும். 40 நாட்களில் ஓர் அடி வளர்ந்துரும். வெத்தலைக் கொடியை அகத்தி மரத்தில் படரவிட்டு,  கோரைப்புல்வெச்சு கட்டிருவோம். 90-வது நாளில் இருந்து பறிப்பு ஆரம்பமாகும். அதுக்கு அப்புறம், 35 நாள் இடைவெளியிலயும் பறிப்பு நடக்கும். அகத்திக் கீரையையும் விற்போம். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா’’ எனச் சிரித்தார் பாலமுருகன்.

“வெத்தலைக் கொடியில எத்தனை ரகம் பயிரிடுவீங்க?’’ எனக் கேட்டான் வீரபத்திரன்.

“நாட்டுக்கொடி, சிறுதாமணி, கற்பூரக்கொடி, திருச்சிக்கொடி ஆகிய ரகங்களை வடுகபட்டியில், பயிரிடுறாங்க. வெத்தலை செரிமானத்துக்கு உதவுற நல்ல நாட்டு மருந்து.  இதோட நுனிக்காம்பு, சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலைப் போக்கும்” என்றார் பாலமுருகன்.

அதன் பிறகு, வெற்றிலை தரம் பிரிக்கும்  இடத்துக்கு வந்துசேர்ந்தார்கள்.

“தோட்டத்தில் இருந்து கொண்டுவரும் மொத்த வெத்தலையையும், எடை போடுவாங்க. கவுளிகளாகப் பிரிச்சு, லோக்கல் ஏரியாக்களுக்கு அனுப்பும் ‘வட்டச்செமை’ இதுதான்’’ என்றார் பாலமுருகன்.

“நாங்களும் வட்டமாப் பிரிச்சு வைக்கிறோம்” எனச் சுட்டிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

“வெத்தலைக்கு, ஈரப்பதம் ரொம்ப முக்கியம். அதனால, ஒரு கிலோ இருக்கிற வெத்தலையை எடை போட்டு, தென்னங்கீற்றுகளால் சுத்திக் கட்டிருவோம். அதுக்கும் மேலே வாழைத்தார்களைச் சுத்திருவோம். 4 அடுக்கு மேல 4 அடுக்கு வெச்சு, 16 கிலோ பண்டல் ரெடி பண்ணுவோம். இதுக்கு, ‘சதுரச் செமை’னு நம்ம ஏரியாவில் சொல்வாங்க. இதே மாதிரி, 35 கிலோ வெத்தலைகளுக்கு ‘கோட்டை’னு பேரு. அதுக்கு அப்புறம் தண்ணியில் நனைச்சுட்டு, விற்பனைக்கு அனுப்பிடுவோம்” என்றார், வெத்தலை அடுக்கும் தொழிலாளி.

“இங்கே விளையிற வெத்தலை திருச்சி, திருவண்ணாமலை, கேரளா, பெங்களூர், ஆக்ரா வரைக்கும் போகுது தம்பிங்களா” என்றார் பாலமுருகன்.

‘‘அப்படினா, நம்ம ஊரு வெத்தலைங்க ஓசியிலேயே தாஜ்மஹாலைப் பார்க்கும்னு சொல்லுங்க” என மணிகண்டன் என்ற சுட்டி சொல்ல, அனைவருடனும் சேர்ந்து வெற்றிலைகளும் சிரித்தன!

ம.மாரிமுத்து

சே.சின்னத்துரை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick