மரங்களின் சகோதரன்!

‘முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி... மரங்களுக்கு உயிர் கொடுப்பது மாரி’, ‘நெகிழியைத் தவிர்ப்போம்... நிலத்தடி நீரைப் பெருக்குவோம்’, ‘மரங்கள் இல்லாத ஊர்... கூரைகள் இல்லாத வீடு’ இதுபோன்று 55 ஸ்லோகன்களை உருவாக்கி, மத்திய அரசு நடத்திய ஸ்லோகன் போட்டியில், முதல் பரிசு வென்றிருக்கிறார் மதுரை மாவட்டம், இளமனூர் கிராமத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர், புகழேந்தி.

‘‘என் அப்பா, பெயின்ட்டர். எங்க ஊரில் சீமைக்கருவேல மரங்கள் அதிகம். இது, நிலத்தடி நீரை உறிஞ்சி, நம்ம மண்ணை மலடாக்கிடும்னு எங்க ஆசிரியர் ராஜவடிவேல் சொல்வார். இதைச் சரிபண்ண, நம்மால் முடிஞ்ச அளவுக்கு மரங்களை நடணும்னு நினைச்சேன். ஆசிரியர், நண்பர்களோடு சேர்ந்து, 200-க்கும் மேற்பட்ட மரங்களை நட்டிருக்கேன். பள்ளிகள் அளவில் நடக்கும் ‘டிசைன் ஃபார் சேஞ்ச்’ எனும் குழுச் செயல்பாட்டில் கலந்துக்கிட்டு, குஜராத் வரை போயிருக்கேன். முன்னாள் குடியரசுத் தலைவர், அப்துல் கலாம் தலைமையில் இயங்கும் ‘பர்யாவரண் மித்ரா’ (Paryavaran Mitra) இயக்கம், ஒவ்வொரு வருஷமும் சுற்றுச்சூழலில் சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்களுக்குப் போட்டி நடத்தும். அதில்தான் இந்தப் பரிசு  எனக்குக் கிடைத்தது என்கிறார் புகழேந்தி.

‘பர்யாவரண் மித்ரா’ என்பதற்கு ‘மரங்களின் நண்பன்’ என அர்த்தம்.

‘‘இப்படி ஒரு விருது இருக்கிறது பத்தியெல்லாம் தெரியாது. நாம ஒவ்வொருத்தரும் மரங்களை நம் உடன் பிறந்தவர்களா நினைச்சு, பாசமா பார்த்துக்கணும். நான் அதைத்தான் செய்தேன்” என்கிறார், இந்த மரங்களின் சகோதரன்.

சி.சந்திரசேகரன்

நா.ராஜமுருகன்

ஓவிய உடன்பிறப்புகள்!

ரு வீட்டுல ரெண்டு ஓவியர்கள் என கோயம்புத்தூரைக் கலக்கிவருகிறார்கள், ஆல்ஃபியா மற்றும் வாசிம் அக்ரம்.

கோவை, எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பை முடித்திருக்கிறார்கள் ஆல்ஃபியாவும் அவரது  அண்ணன், முகமது வாசிம் அக்ரமும். இருவரும் ஓவியப் போட்டிகளில் மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு பரிசுகளை வென்றிருக்கிறார்கள்.

‘‘என்னோட முதல் தோழி, பெயின்டிங்தான். ஆயில் பெயின்டிங்தான் அதிகமா வரைவேன். தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பத் தேர்வு வாரியம் நடத்தும் ஓவியப் போட்டியிலும், இளநிலைப் பிரிவில் முதல் இடத்திலும் தேர்ச்சி அடைஞ்சிருக்கேன். அமெரிக்காவின் UNEP (United Nations Environment Programme) அமைப்பு நடத்தும், சர்வதேச அளவிலான ஓவியப் போட்டியில், ‘வைல்டு லைஃப்’ ஓவியங்களை வரைந்து, இரு முறை 4-ம் மற்றும் 5-ம் இடம் பிடிச்சிருக்கேன்” என்கிற ஆல்ஃபியா, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, சுற்றுச்சூழல் விழிப்புஉணர்வு எனப் பல்வேறு விஷயங்களைத் தனது ஓவியங்களில் அற்புதமாகப் பதிவுசெய்கிறார்.

‘‘ஓவியப் போட்டிகளில் மாநில அளவில் 12 முறையும், தேசிய அளவில் 11 முறையும் முதல் பரிசு வென்றிருக்கிறேன். இயற்கைக் காட்சிகள், மனிதர்கள், பிற உயிரினங்களை வித்தியாசமான கோணங்களில் பதிவுசெய்றது எனக்குப் பிடிச்ச விஷயம்” என்கிறார் வாசிம் அக்ரம்.

‘‘பொதுவா ஒரு போட்டியில் கலந்துக்கணும்னா, மற்றவங்களை நாம எப்படி முந்தலாம்னு ப்ளான் பண்ணுவாங்க. ஆனா, எங்க வீட்டுக்குள்ளேயே ஒரு போட்டியாளர் இருக்கிறதால முதலில், வீட்டு வாசலை வெற்றிக்கரமா தாண்டணும்னு இன்னும் அதிகமா யோசிச்சு வரைய வேண்டியிருக்கு. இந்தப் போட்டி, எங்கள் ஓவியங்களை இன்னும் சிறப்பா மாற்றுது. வருங்காலத்தில் ரெண்டு பேரும் சேர்ந்து, ஓவியப் பள்ளியை ஆரம்பிக்கிற ப்ளானில் இருக்கோம்” என்கிறார்கள், நம்பிக்கை மின்னும் குரலில்!  

கு.ஆனந்தராஜ்

த.ஸ்ரீநிவாசன்

அதிரடி நாயகன்!

‘எங்க ஏரியாவில், பந்தல் போடாமல் கல்யாணம் நடக்கலாம். ஆனா,  தீபக் டிரம்ஸ் இல்லாமல் எதுவும் நடக்காது’ என்கிறார்கள், மதுரை ஆனையூர் பகுதிவாசிகள்.

வீட்டு விசேஷங்கள், வெளியூர் கச்சேரிகளில் அதிரடி டிரம்ஸ் இசை மூலம் அனைவரையும் சுண்டி இழுக்கும் தீபக், மதுரை மகாத்மா காந்தி பள்ளியின் ஐந்தாம் வகுப்பு சுட்டி!

‘‘என் அப்பா, வீட்டில் இருக்கும்போது தபேலா வாசிப்பார். அதைப் பார்த்து எனக்கும் இசைக் கருவி வாசிக்கும் ஆசை வந்துச்சு. அப்பா, சின்ன டிரம்ஸ் வாங்கிக்கொடுத்தார். அதில், டிவி-யில் வரும் மியூசிக் புரோகிராம், இசைக் கச்சேரி வீடியோக்களைப் பார்த்து அதில், நானாக வாசிக்க ஆரம்பிச்சேன். என் ஆர்வத்தைப் பார்த்துட்டு, லண்டன் டிரினிட்டி மியூசிக் ஸ்கூலின் அங்கீகாரம் பெற்ற மதுரை சென்டரில் சேர்த்துவிட்டாங்க” என்கிற தீபக் பேச்சிலும் டிரம்ஸ் வேகம்.

டிரினிட்டி கோர்ஸில் மூன்று கிரேடு முடித்திருக்கும் தீபக், பல மணி நேரம் டிரம்ஸ் வாசிக்கிறார்.

‘‘நான் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் மேடையில் ஏறும்போது, கூட்டத்தில் பாதி பேர், ‘இந்தச் சின்னப் பையன் என்னத்த வாசிப்பான்?’னு சந்தேகமா பார்ப்பாங்க. அத்தனை பேருக்கும் என்னோட திறமையால் பதில் சொல்வேன். ஒரு நிகழ்ச்சியில், நான் வாசிச்சு முடிச்சதும், ஒரு பாட்டி பக்கத்தில் வந்து, ‘கொஞ்சம் மெதுவா அடிச்சா குடியா முழுகிடும். கை வலிக்குமே கண்ணு’னு அன்போடு தடவிக் கொடுத்தாங்க. அந்தப் பாராட்டு சும்மா கிடைக்கலை அங்கிள். தவில், டிரம்ஸ் கருவிகளை வாசிக்க, இசை ஆர்வம் மட்டும் போதாது. உடம்பு ஹெல்தியா இருக்கணும். அதுக்காக, தினமும் எக்ஸர்சைஸ் பண்ணுவேன். காய்கறி, பழங்களை நிறையச் சாப்பிடுவேன். சாக்லேட், ஐஸ்கிரீம் கொடுத்தால்கூட கொஞ்சமாதான் எடுத்துப்பேன். ‘எப்படி தீபக் உன்னால இப்படி இருக்க முடியுது?’னு ஃப்ரெண்ட்ஸ் கேட்பாங்க. பெரிசா சாதிக்கணும்னா, சின்ன விஷயங்களை விட்டுக்கொடுத்துதானே ஆகணும். சீக்கிரமே, கண்ணைக் கட்டிட்டு டிரம்ஸ் வாசிச்சு, கின்னஸ் ரெக்கார்டு பண்ணணும்னு ஆசை” என்கிற தீபக் குரலில் அதிர்கிறது இசை!

செ.சல்மான்

பா.காளிமுத்து

கராத்தே குயின்!

‘‘மலேசியா, சிங்கப்பூர், நியூஸிலாந்து போன்ற நாடுகளை ஸ்கூல் மேப்பில் மட்டும்தான் பார்த்துட்டிருந்தேன். இப்போ, அந்த நாடுகளில் என்னுடைய கால்களும் பட்டு, பதக்கங்களையும் செல்ஃபிகளையும் அள்ளிட்டு வந்திருக்கேன். அதுக்குக் காரணம், கராத்தே” எனக் கலகலப்புடன் சொல்கிறார், தீப்தி அஜித்பிரகாஷ்.

மதுரை, டால்ஃபின் மெட்ரி குலேஷன் பள்ளியில் பத்தாம்  வகுப்பு படிக்கும் தீப்தி, சர்வதேச சாம்பியன்ஷிப்களைத் தட்டி வந்திருக்கும் கராத்தே குயின்.

‘‘மலேசியாவில் ஒவ்வொரு வருஷமும் சர்வதேச அளவிலான கோஜுரியூ கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி (Goju-Ryu) நடக்கும். அதில், 15 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில், தொடர்ந்து மூன்று முறை சாம்பியன் பட்டம் தட்டிருக்கேன்” என்கிறார்.
ஆசிய சாம்பியன்ஷிப், (ஐந்து முறை) தேசிய சாம்பியன்ஷிப் என பதக்க வேட்டை நீள்கிறது.

‘‘இந்த வருஷம், நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரத்தில் நடக்கப்போகும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தேர்வாகியிருக்கேன். ‘நல்லா ட்ரெய்னிங் எடு தீப்தி’னு என்னைச் சுத்தி இருக்கிறவங்கதான் டென்ஷனா இருக்காங்க. ஆனா, எனக்கு எந்த டென்ஷனும் இல்லே. ஏன்னா, ‘உனக்காகவோ, சுற்றி இருக்கும் கூட்டத்தின் ஆர்ப்பாட்டத்துக்காகவோ விளையாடாதே. நாட்டுக்காக விளையாடு’னு நம்ம கிரிக்கெட் கேப்டன் தோனி சொன்னது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதைத்தான் நான் ஃபாலோ பண்றேன்.  டென்ஷன் இல்லாமல் ஜெயிப்பேன்” என கூலாகச் சிரிக்கிறார் தீப்தி.    

ப.சூரியராஜ்

எஸ்.பரத்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick