முன்னோர்கள் சாப்பிட்ட 3,000 அரிசி ரகங்கள்!

‘‘எல்லோரும் மதிய உணவு சாப்பிட்டீங்களா?” எனக்  கேட்டார் ரகுநாத்.

அந்த ஹாலில் அமர்ந்த மாணவ - மாணவிகள் அனைவரும் ‘‘சாப்பிட்டோம் சார்” என்றார்கள். அது, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகில் உள்ள தர்மத்தோப்பு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி.

‘‘என்ன சாப்பிட்டீங்க?” எனக் கேட்கும் ரகுநாத் அருகே, ஒரு வெள்ளைத் திரை இருந்தது.

‘‘சோறுதான் சார்” என்றார்கள் கோரஸாக.

‘‘அப்படியா? நீங்க சாப்பிட்ட சோறு, எந்த ரக அரிசினு தெரியுமா? இல்ல, உங்களுக்குத் தெரிஞ்ச அரிசி ரகங்களின் பெயர்களைச் சொல்லுங்க” எனக் கேட்டதும் எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

நாமக்கல் மாவட்டம், வேமன்காட்டுவலசு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ரகுநாத். பள்ளி மாணவர்கள், நமது பாரம்பர்யப் பயிர்கள் பற்றியும் இயற்கையோடு இணைந்த வாழ்கையை வாழ வேண்டும் என்பதற்காகவும், பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார்.

‘‘அதிகபட்சம் 10 வகைகளைச் சொல்வீங்க. ஆனால், நம்ம கொள்ளுத் தாத்தா, பாட்டி எல்லாரும் 3,000-க்கும் அதிகமான பாரம்பர்ய நெல் ரகங்களைப் பயிரிட்டு, சாப்பிட்டாங்க.  ரொம்ப முக்கியமான விஷயம், இயற்கை முறையில் விவசாயம் செய்ததால், விவசாயமும் செழிப்பாக இருந்துச்சு; மக்களும் ஆரோக்கியமாக வாழ்ந்தாங்க. இப்போ, இந்தக் காட்சிகளைப் பாருங்க” என்றதும், வெள்ளைத் திரை உயிர் பெற்றது.

இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், நம்மாழ்வார் பேச்சு, அப்போது இருந்த பல்வேறு அரிசி ரகங்களின் புகைப்படங்கள்  ஆகியன ஒளிபரப்பானது.

‘‘இவர்தான், இயற்கை விவசாயத்தை தமிழர்கள் பலருக்கும் கொண்டுசேர்த்த நம்மாழ்வார் தாத்தா. இன்றைக்கு நமக்கு இருக்கிற பல்வேறு நோய்களுக்கு அடிப்படைக் காரணமே, ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விளைந்த உணவுகளைச் சாப்பிடுறதுதான். நான் ஆசிரியர் பணியில் இருந்தாலும், வாரத்தில் இரண்டு நாட்கள் என் சொந்த ஊரான சேந்தமங்கலத்தில், இயற்கை விவசாயம் செய்துட்டு இருக்கேன். உங்களில் யாராவது விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவங்களா இருந்தால், பெற்றோரிடம் சொல்லி, இயற்கை விவசாயத்துக்கு மாறச் சொல்லுங்க. அதுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் என்கிட்டே கேட்கச் சொல்லுங்க. ஓய்வு நேரத்தில், வெளியே போய் நல்லா விளையாடுங்க. சிப்ஸ், சாக்லேட் சாப்பிடுறதுக்கு பதில், சுண்டலை அவிச்சுக்கொடுக்கச் சொல்லிச் சாப்பிடுங்க. காய்கறி, கீரை வகைகளை சாப்பாட்டில் சேர்த்துக்கங்க’’ என்றார் ரகுநாத்.

தான் சேகரித்துவைத்திருந்த 70 வகையான பாரம்பர்ய நெல் ரகங்களை, அந்த ஹாலில் காட்சியாக வைத்திருந்தார். அதைப்  பார்வையிட்ட மாணவர்களுக்கு, அவற்றைப் பற்றி விளக்கினார்.

‘‘இது,  ‘காட்டுயானம்’ என்ற வகை. இதைச்  சாப்பிட்ட நம் முன்னோர்கள், சர்க்கரை, புற்றுநோய் வராமல் பாதுகாப்பாக வாழ்ந்தாங்க. நடவு செய்த பிறகு, ஒரு நாள் மழைபெய்து, அறுவடை வரைக்கும் தண்ணீர் இல்லாமலேயே வளரக்கூடிய ரகம், ‘குழிவெடிச்சான்’ என்ற நெல். ‘கலாநமக்கு’ என்ற ரக அரிசியைத்தான் புத்தர் விரும்பிச் சாப்பிடுவார்னு சொல்வாங்க’’ எனச் சொல்லச் சொல்ல, மாணவர்கள் முகங்களில் வியப்பு.

நிகழ்ச்சி முடிந்ததும் பேசிய ரகுநாத், ‘‘முதலில், என்னுடைய பள்ளி மாணவர்களுக்காக இந்த நிகழ்ச்சியைச் செய்தேன். அவர்கள், வீட்டிலேயே செடி வளர்த்து, காய்கறிகளைக் கொண்டுவந்து காட்டியபோது, சந்தோஷமாக இருந்தது.  இதை நம்மால் முடிந்த அளவுக்கு நிறைய மாணவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று நடத்திவருகிறேன்” என்றார் உற்சாகமாக!

கு.ஆனந்தராஜ்

அ.நவின்ராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick