ஜான்சி ராணியும் ராஜா தேசிங்கும்!

“வீ்ரபாண்டிய கட்டபொம்மன், ராஜா தேசிங்கு, ஜான்சி ராணி என மன்னர்கள் காலத்தில் யாரை நினைச்சாலும், இடுப்பில் இருக்கும் அவங்களோட உடைவாள் கவனத்துக்கு வரும். அதை, சரக்கென உருவி, அவங்க சண்டை போடுற காட்சியை நினைச்சு சிலிர்ப்பு ஏற்படும்.இப்போ, நாங்களும் அப்படித்தான் குட்டி ராஜாவாக, ராணியாக நினைச்சுக்கிறோம்” எனப் புன்னகையுடன் வாளைச் சுழற்றினார் லோகேஷ்வரி.

சேலம் குளூனி மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் லோகேஷ்வரி, வாள்வீச்சு (Fencing) விளையாட்டுப் போட்டியில், தமிழகத்தின் நம்பிக்கை வீராங்கனை.

வாள்வீச்சு விளையாட்டில், தேசிய அளவில் ஒரு தங்கம், மாநில அளவில் 4 தங்கம், மாவட்ட அளவில் 5 தங்கங்களை வென்றவர். இந்திய மகளிர் சப்-ஜூனியர் பிரிவில் மூன்றாம் இடம், தமிழக அளவில் முதல் நிலை வீராங்கனை.

‘‘நான், ஜான்சி ராணி மாதிரி தைரியமான பெண்ணா வளரணும்னு என் பெற்றோருக்கு ஆசை. எனக்கும் வழக்கமான விளையாட்டுகளில் இருந்து மாறுபட்டு, தனித்துத் தெரியணும்னு விருப்பம். மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, வாள்வீச்சு விளையாட சேர்த்துவிட்டாங்க. அப்போ, கையில் பிடிச்ச வாளை இப்போ வரை அலுக்காமல் சுத்திட்டே இருக்கேன்” என்கிறார் லோகேஷ்வரி.

வாள்வீச்சில் மூன்று வகைகள் உள்ளன.

‘‘முதலாவது, எப்பி (Epee) எனப்படும் குத்து. அணிந்திருக்கும் யூனிஃபார்ம் மீது எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வாள் முனையால் தொட்டு எதிரியைத் தோற்கடிப்பது. இரண்டாவது வகை, ஃபாயில் (Foil). வீரர்கள் இருவரும் ஒரு எலெக்ட்ரிக் ஜாக்கெட் அணிந்து இருப்பாங்க. எதிர் வீரர் ஜாக்கெட்டின் ஒரு பகுதியில், வாளால் தொடணும். அப்படித் தொட்டதும் லைட் எரியும். மூன்றாவதாக, சேபர் (Saber). இடுப்புக்கு மேல எந்தப் பகுதியிலும் தொட்டுத் தோற்கடிக்கலாம்.  மூன்றாவது வகையில், உடலில் லேசாகக் குத்தவும் செய்யலாம். வாள்வீச்சு விளையாட்டைப் பொறுத்த வரை, தனிநபர் பிரிவில், ஏதாவது ஒரு வகையை மட்டுமே விளையாட முடியும். நான் மூன்றாவது வகை விளையாடுறேன்” என்கிறார் லோகேஷ்வரி.

சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த தேசிய வாள்வீச்சுப் போட்டியில், சப்-ஜூனியர் மகளிர் பிரிவில் தங்கம் வென்றதன் மூலம், உலக வாள்வீச்சுப் போட்டிக்குச் செல்கிறார்  லோகேஷ்வரி.

‘‘நான், இந்திய ஆண்கள் சப்-ஜூனியர் பிரிவில் மூன்றாம் இடம் வகிக்கும் வீரர்’’ என்கிற மெய்யப்பன், 11-ம் வகுப்பு படிக்கிறார். ஃபாயில் (Foil) வகை வாள்வீச்சில் பல பதக்கங்களை வென்றிருக்கிறார்.

‘‘நம் நாட்டில் 1991-ல் வாள்வீச்சு விளையாட்டு அறிமுகம் ஆச்சு. தமிழ்நாட்டில், 1999-ல் அறிமுகமாச்சு. பலருக்கும் தெரியாத விளையாட்டாதான் இன்னும் இருக்கு. பலரும் ‘இது ரொம்ப ஆபத்தான விளையாட்டு’ என நினைக்கிறாங்க. அப்படிக் கிடையாது. பாதுகாப்பு உபகரணங்கள் போட்டுக்கொண்டுதான் விளையாடுவோம். 15 நிமிடங்கள்தான் விளையாட்டு நடக்கும். எதிரியின் உடலில் தொட்டு, முதலில் யார் 15 புள்ளிகளை எடுக்கிறாங்களோ, அவங்க வின்னர். மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை, ஒரு நிமிடம் இடைவேளை விடப்படும்” என விளையாட்டு நுணுக்கம் பேசினார் மெய்யப்பன்.

இவர்களின் பயிற்சியாளர் வஸ்தாத் கிருஷ்ணன், ‘‘வேகம், ஸ்டைல், கவனத்திறன், சூழ்நிலையைச் சமாளிக்கும் சாதுர்யம் எனப் பல விஷயங்கள் அடங்கியது, வாள்வீச்சு விளையாட்டு. மாறிவரும் வாழ்க்கைச் சூழ்நிலையில், மாணவ - மாணவிகள் தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் இருக்க,  வாள்வீச்சுப் பயிற்சி உதவியாக இருக்கும்” என்றார்.

‘‘பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, வீட்டுக்கு வீடு வாளோடும் வேலோடும் இருந்த வீரத் தமிழர்கள் நாம். ஆனால், சர்வதேச வாள்வீச்சுப் போட்டிகளில் மற்ற நாட்டு வீரர்கள் அளவுக்கு இன்னும் நாம் வரலை. அந்த நிலை மாறணும்.ஆசியப் போட்டிகள், ஒலிம்பிக் போன்றவற்றில் விளையாடி இந்தியாவுக்குப் பதக்கம் வாங்கித் தரணும். அதை நாங்க செய்வோம்” என்ற சுட்டி வீரர்களின் வாள்கள், ‘கணீர் கணீர்’ என மோதிக்கொண்டன.

கு.ஆனந்தராஜ்

எம்.விஜயகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick