கொரில்லா கேடயம்!

ப்பாவின் ஸ்மார்ட்போன் எப்போது டேபிளுக்கு வரும், எடுத்து  கேம் விளையாடலாம் எனத்  துடிப்போடு காத்திருக்கும் சுட்டிகளில் நீங்களும் ஒருவரா? அப்படியானால், இந்தச் செய்தியையும் தெரிஞ்சுக்கங்க.   பல செல்போன் நிறுவனங்களுக்கு, திரையின் கண்ணாடியைத் தயாரித்துக் கொடுத்தே, மெகா கோடீஸ்வரப் பட்டியலில் ஒரு நிறுவனம், இடம் பிடித்திருக்கிறது.

1960-களில் அமெரிக்காவில் இருந்த ஒரு கண்ணாடித் தயாரிப்பு நிறுவனம், கார்னிங் (Corning). அதன் தொழில்நுட்ப நிபுணர் பில் டெக்கர், புதுமை விரும்பி.   “கண்ணாடியின் ஒரே பிரச்னை உடைவது. அதனை ஏன் சரிசெய்ய முடியாது?’ என யோசித்தார்.

தனது நண்பர் பில் அர்மிஸ்டெட் என்பவருடன் இணைந்து, ‘புரொஜெக்ட் மசில்’ (Project Muscle) என்ற ஆராய்ச்சியைத் தொடங்கினார். கண்ணாடியில் இருக்கும் சோடியம் அயனிகளை, பொட்டாசியம் அயனிகளால் நிரப்பி, உயர் அழுத்தத்தில் இறுக்கியதும் வலுவான கண்ணாடி கிடைத்தது.

இனி, வணிகரீதியில் மிகப் பெரிய வெற்றி என நினைத்தனர். ஆனால், கார்னிங் நிறுவனத்தின் கண்ணாடியை வாங்க, யாரும் வரவில்லை. ‘எளிதில் உடையாத கண்ணாடி சரிதான். ஆனால், எங்களுக்குத் தேவை விலைகுறைந்த கண்ணாடிகள்தான்’ என்றனர்.

கடினமான கண்ணாடிகள் தேவைப்படும் இடங்களான, வேதியியல் ஆய்வகங்கள், மருந்து நிறுவனங்கள், மேஜைக் கண்ணாடிகள் என, கார்னிங் தனது வர்த்தகத்தை மாற்றியது. இந்தச் சமயத்தில்தான் ஸ்டீவ் ஜாப்ஸ் மூலம் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்தது.

2006-ல், தனது ஆப்பிளின் கனவுத் தயாரிப்பான ஐபோனை சந்தைப்படுத்தும் முனைப்பில் இருந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். இந்த ஐபோனின் விலை, மற்ற போன்களைக் காட்டிலும் அதிகம். அதில் குறைகள் இருக்கக் கூடாது என நினைத்தார். அதன் தொடு திரை பாக்கெட்டில் வைத்து எடுத்தாலே கீறல்கள் விழும் அளவுக்கு இருந்தது. கண்ணாடிக்குப் பதில் பிளாஸ்டிக் பயன்படுத்தும் உத்தியைக்  கையாள முயன்றார். அதுவும் சரிவரவில்லை. அப்போதுதான் கார்னிங் பற்றித் தெரிய வந்தது. இதைத்தான் தேடிக்கொண்டிருந்தேன் எனத் தனது ஐபோன்களுக்கான திரைக் கண்ணாடிகள் தயாரிக்கும் பொறுப்பை கார்னிங்கிடம் கொடுத்தார் ஜாப்ஸ். ஆறு மாதங்கள் அவகாசம்.

டேபிள், குடுவை என வீட்டு உபயோகக் கண்ணாடிகள் தயாரித்த கார்னிங், எப்படி ஆறு மாதங்களில் லட்சக்கணக்கான போன்களுக்குத் தயாரிக்க முடியும்? எனத் தயங்கியது. ‘‘அடுத்த ஆண்டில் (2007) ஐபோன் சந்தைக்கு வரவேண்டுமானால், நீங்கள் ஆறு மாதங்களுக்குள் முடித்துத் தர வேண்டும். நிச்சயம் உங்களால் முடியும்” என ஊக்கம் அளித்தார் ஜாப்ஸ்.

சொன்ன அவகாசத்தில், வெற்றிகரமாகப் பணியை முடித்து, ‘கொரில்லா கிளாஸ்’ என்ற பெயரில் ஐபோன் கண்ணாடித்  திரையில் இடம்பெற்றது, கார்னிங். அதன் தொழில்நுட்பம் போட்டியாளர்களை ஆச்சர்யப்படுத்தியது.

அடுத்த சவாலைச் சந்தித்த கார்னிங், முன்னதைவிட இன்னும் மெல்லிய, கீறல் விழாத, வலுவான கண்ணாடியை உருவாக்கியது. வெற்றிகரமாக ‘கொரில்லா 2’ களம் இறங்கியது. கார்னிங்கை மற்ற செல்போன் நிறுவனங்களும் மொய்த்தன. கொரில்லா க்ளாஸ் தயாரிப்புகளின் எண்ணிக்கை, கோடிகளைத் தாண்டியது. லேப்டாப்,  டேப்லெட், ஏ.டி.எம் கருவி தொடு திரைகள் என எங்கும் ஆக்ரமித்தது கொரில்லா கிளாஸ்.

இன்று உலகம் முழுக்க இருக்கும் தொலைத்தொடர்பு சாதன நிறுவனங்கள், தங்கள்  தயாரிப்பின் தொடு திரைக்கு கார்னிங் நிறுவனத்தின் கொரில்லா கண்ணாடியிடம்தான் கையேந்த வேண்டும். பொறுமையும் உழைப்பும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணம், கார்னிங் தயாரித்த கொரில்லா க்ளாஸ்.      1960-ம் ஆண்டு கண்ட கனவு நனவாக, 50 வருடங்கள் தேவைப்பட்டன. இன்று உலகம் முழுக்க மூன்று பில்லியன் சாதனங்கள், கொரில்லா கண்ணாடியால் மின்னுகின்றன.

சக்சஸ் கொரில்லா வகைகள்!

கொரில்லா க்ளாஸ் 1: ஐபோன் ஒன்றில் பயன்படுத்தப்பட்ட இந்த வரிசையின் முதல் பாகம். கடினமானது. கீறல்கள் விழாது.

கொரில்லா க்ளாஸ் 2: 2012-ல் வெளியான இது, முதல் கண்ணாடியைவிட 20% மெல்லியது, மிக உறுதியானது. இதன் தொடு உணர்வு அதிகம்.

கொரில்லா க்ளாஸ் 3: ஜனவரி 2013-ல் வெளியிடப்பட்டது. மூன்று மடங்கு வலுவானது. கீறல் விழுந்தாலும் திரையில் தெரியாது.

கொரில்லா க்ளாஸ்  NBT:  மடிக்கணினிகளுக்காக பிரத்யேகமாக உருவானது.

கொரில்லா ஆன்ட்டிமைக்ரோபியல் க்ளாஸ் (Antimicrobial glass) கார்னிங், கடந்த ஆண்டு வெளியிட்டது. நுண்ணுயிர்கள் மூலம் திரைக்கு வரும் பாதிப்பை இது தடுக்கும்.

ஞா.சுதாகர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick