தாயைக் காப்போம்!

ஜூன் - 5 உலக சுற்றுச்சூழல் தினம்!

ல்லோருக்குமான இந்தப் பூமி, நம் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுகிறது. நம்மை நேசிக்கிறது. நாம் வாழ்கிறோம், வளர்கிறோம். ஆனால், இந்தப் பூமியை நாம் நேசிக்கிறோமா? அதன் மீது அக்கறை எடுத்துக்கொள்கிறோமா?

இதை வலியுறுத்தும் நாள்தான், உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day - WED). ஒவ்வொரு வருடமும் ஜூன் 5-ம் தேதி  கொண்டாடப்படுகிறது.

எப்பொழுது தொடங்கியது?

1972-ல் ஸ்டாக்ஹோமில் கூடிய ஐ.நா.வின் மனித சுற்றுச்சூழல் மாநாடு, இப்படி ஒரு தினத்தைக் கொண்டாட முடிவுசெய்தது. ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் தொடங்கும். அதற்கொரு பேசுபொருள் உண்டு. ஒரு முழக்கம் உண்டு. உதாரணமாக, 2006-ம் ஆண்டின் பேசுபொருள், பாலைவனம். ‘வறண்ட நிலத்தைப் பாலைவனம் ஆக்காதீர்கள்’ என்ற முழக்கத்துடன் விழிப்புஉணர்வுப் பிரசாரம் செய்யப்பட்டது. முதன்முதலில் அல்ஜீரியா நாட்டில் இந்த முழக்கம் ஆரம்பித்தது.

‘உங்கள் சேவைக்காக இயற்கை’ என்ற பேசுபொருளுடன் 2011-ம் ஆண்டு, இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில்,  உலக சுற்றுச் சூழல் தினம் தொடங்கியது. 2011 உலக சுற்றுச் சூழல் தினத்துக்கான உலக கீதத்தை, இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி, அபய் இயற்றினார். அது, உலகம் முழுக்கப் பாடப்படுகிறது.

ஏழு பில்லியன் கனவுகள்!

இந்த வருடந்தின் பேசுபொருள், ‘நிலையான உற்பத்தி, நுகர்வு’ என்பதாகும். முழக்கம், ‘ஏழு பில்லியன் கனவுகள். ஒரே கோள் (பூமி). கவனமாகச் செலவிடுங்கள்!’

தற்சமயம், உலகின் மொத்த மக்கள்தொகை சுமார் 7,200 கோடி. இது, இன்னும் 35 வருடங்களில் 9,600 கோடியாக உயர்ந்துவிடும் என்கிறார்கள். அவ்வளவு மக்களின் தேவையைச் சமாளிக்க, இப்போது இருக்கும் பூமியைவிட, மூன்று பூமி அளவுக்கு வளங்கள் தேவைப்படும். ஆனால், உலகம் முழுவதும் தண்ணீர், உணவு மற்றும் ஆற்றலை வீணாக்கிக்கொண்டே இருக்கிறோம். இப்படியே போனால், மிகப் பெரிய சிக்கல்களைச் சந்திக்க வேண்டும். இதைத் தீர்க்க ஒரே வழி, இருக்கும் வளங்களைச் சிக்கனமாக, சாமர்த்தியமாகப் பயன்படுத்த வேண்டும்.

நீரும் உணவும்!

உலகின் நீரில் 0.5% மட்டுமே மக்கள் பயன்பாட்டுக்கு உரியதாக இருக்கிறது. ஆனால், இந்த நீரையும் பல வகைகளில்  வீணாக்குகிறோம்; மாசுபடுத்துகிறோம். இப்போதே, சுமார் 100 கோடிக்கும் மேற்பட்ட உலக மக்களுக்கு, சுத்தமான தண்ணீர் கிடைப்பது இல்லை. ஒரு வருடத்தில், உலகம் முழுக்க 1.3 பில்லியன் டன் உணவு வீணாக்கப்படுகிறது. அதே நேரம், 100 கோடி மக்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும், மூன்று வேளை உணவு இல்லாமலும் துன்புறுகிறார்கள். நிலத்தின் சீர்கேடு, நீர் வள இழப்பு, கடல் வளப் பாதிப்பு ஆகியவற்றால், உணவுப் பற்றாக்குறை பெருகிக்கொண்டே போகிறது.

இந்த நிலையை மாற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமை. வயதில் சிறியவர்களான நாம் என்ன செய்வது? என கேட்கத் தோன்றும்.இனிமேல், எந்தக் காரணத்தினாலும் உணவை வீணாக்க மாட்டேன் என்று உறுதி எடுங்கள். தேவையான அளவு உணவை மட்டும் பள்ளிக்கு எடுத்துச் செல்லுங்கள். முக்கியமாக, விருந்துகளில் பங்குபெறும்போது, ஆசைக்காக எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு அரைகுறையாகச் சாப்பிடுவதைத் தவிருங்கள். பள்ளியின் பொதுக் குழாயிலோ, வீட்டிலோ நீர் வீணாக ஓடிக்கொண்டு இருந்தால், ஓடிச்சென்று நிறுத்துங்கள். எப்படி தண்ணீரைச் சேமிக்கலாம் என்று நண்பர்களோடு விவாதியுங்கள்; செயல்படுத்துங்கள்.

எல்லாமே நம் கையில்!

தண்ணீரைப் போலவே எரிபொருள், மின்சாரம் என எல்லா வளங்களையும் சிக்கனமாகப் பயன்படுத்துவோம். ஏழு பில்லியன் கனவுகளை நனவாக்குவோம். இந்தப் பூமி, நமக்கு மட்டும் தாய் அல்ல. இன்னும் பல பல நூற்றாண்டுகளுக்கு, பல்வேறு உயிர்களுக்குத் தாயாக இருக்கப்போகிறது. அந்தத் தாயைப் பாதுகாப்பது நம் கையிலும் நம் செயலிலும்தான் உள்ளது. பூமியைப் காப்போம்!

பூ.கொ.சரவணன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick