வீட்டுக்குள்ளே டிஷ்யூம்...டிஷ்யூம்!

பஞ்சாயத்து Vs தீர்வு

‘‘இந்தியா, பாகிஸ்தான் சண்டையைக்கூட தீர்த்திடலாம். எங்க வீட்டுல ரெண்டு பேரும் போட்டுக்கற சண்டையைத் தீர்க்கவே முடியாது”

“போன நிமிஷம் வரைக்கும் சிரிச்சுப்  பேசிட்டு இருந்தாங்க. திடீர்னு சடையைப் புடிச்சு இழுத்து அடிச்சுக்கிறாங்க”

இப்படி பெற்றோரின் புலம்பல்ஸ் கேட்காத வீடுகளே இல்லை. பெரியவங்கதான் கோபம், வெறுப்பு, ஈகோ எனச் சண்டை போட்டுக்கிறாங்க. நமக்குள்ளே எதுக்கு சண்டை வருது? சில உடன்பிறப்புகளிடம் பேசினோம்...

“ஆமா அங்கிள். ஒரு நாளைக்கு மினிமம் நாலு முறையாவது எங்களுக்குள்ளே சண்டை நடக்கும்” என ஆரம்பித்தார், எட்டாம் வகுப்பு படிக்கும் லேகா. இவரது தம்பி ஷ்யாம்குமார், ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்.

“டிவி-யில் ஏதோ ஓடிட்டு இருக்கும். அவ்வளவு நேரமா விளையாடிட்டு இருப்பான். நான் பிடிச்ச சேனலைப் போட்ட நிமிஷம்... பக்கத்துல வந்து, வேற சேனலை மாத்துவான்” என்று பஞ்சாயத்தை ஆரம்பித்தார் லேகா.

“அதுக்காக, சின்னப் பையன்னுகூட பார்க்காம அடிப்பா... திட்டுவா. நான் திட்டினால், அம்மா வந்து, ‘பொம்பளைப் பிள்ளையை மரியாதை இல்லாமல் பேசாதே’னு திட்டுவாங்க” என்றார் ஷ்யாம்குமார்.

“ஆனா கடைசியில், ‘பாவம், நம்ம தம்பிதானே’னு விட்டுக்கொடுக்கிறது நான்தான் அங்கிள். இவன், ஒரு நாளும் அப்படி விட்டுக்கொடுத்தது இல்லை” என்று தம்பியை செல்லமாகத் தலையில் தட்டுகிறார் லேகா.

‘‘இவங்க பஞ்சாயத்தை விசாரிச்சு தீர்ப்பு சொல்ற நாட்டாமை நான்தான்” எனச் சிரிக்கிறார் பாட்டி.

அண்ணன்களான அர்ஷவர்த்தன், தர்ஷன் இருவருக்கும் சண்டை வருவது, விளையாட்டில்.

“இவனுக்கு எந்த விளையாட்டுமே சரியா விளையாடத் தெரியாது. கேரம் போர்டுல தப்பான இடத்துல ஸ்ட்ரைக்கரை வெச்சு அடிப்பான். அதைச் சொன்னா, அழுவான். எல்லாத்திலும் அழுகுணி ஆட்டம்தான்” என்று தம்பியை முறைத்தார் அர்ஷவர்த்தன்.

“சரியா விளையாடலைனா, பொறுமையா சொல்லலாமே? ‘உனக்கு ஒண்ணுமே தெரியாது. நீ வேஸ்ட்’னு அவங்க ஃப்ரெண்ட்ஸ் முன்னாடியே இன்சல்ட் பண்றதுதான் எனக்கு ரொம்பக் கோவம் வரும்” என்கிறார் தர்ஷன்.

“ரெண்டு பேர்ல யார் பக்கம் பேசினாலும் பிரச்னைதான். அவனுக்கே சப்போர்ட்டா பேசுனு எனக் கோவிச்சுப்பாங்க. ஆனா, எவ்வளவு கோபம் இருந்தாலும் பத்து நிமிஷம்தான். மறுபடியும் விளையாட ஆரம்பிச்சுடுவாங்க” என்கிறார், இவர்களது அம்மா விஜயலட்சுமி.

அண்ணன் தம்பிக்குள் இப்படின்னா, அக்கா தங்கையான நிரஞ்சனா பாரதி மற்றும் ஜெயஸ்ரீ பிரச்னைகள் வேற ரகம்.

“இவளோட ரிப்பன், ஸ்டிக்கர் பொட்டு, ஹேர்பின்னை எங்காவது தூக்கிப் போட்டுடுவா. ஸ்கூலுக்கு கிளம்புறப்போ என்னுடையதை எடுத்துப்பா. ஸ்கூலுக்கு கிளம்பற டென்ஷனோடு இந்த டென்ஷனும் சேர்ந்துக்கும். கேட்டால், சாப்பிடாம அழுவா.  ‘உன்னாலதான் அவள் சாப்பிடாமக் கிளம்புறா’னு அம்மாவும் பேசுவாங்க” என்கிறார் நிரஞ்சனா பாரதி.

“இவ மட்டும் என்னவாம்? நான் குளிக்கப்போகிற நேரத்துல இவளும் போவாள்.  வீட்டுப் பிரச்னையை வீட்டுலதானே வெச்சுக்கணும்? எங்க மிஸ்கிட்டே கம்ப்ளைன்ட் பண்ணிடுவா” என்கிறார் ஜெயஸ்ரீ.

ஆனாலும், அம்மா வேலையா இருக்கிறப்போ தங்கைக்கு சடை பின்னிவிடுவது, அவளுக்கும் சேர்த்து லன்ச் பாக்ஸ், வாட்டர் பாட்டிலில் தண்ணீர் ஊற்றுவது போன்ற வேலைகளைச் செய்வது நிரஞ்சனா பாரதிதான். “தங்கச்சி ஆச்சே” என்று கோபம் மறந்து அணைத்துக்கொள்கிறார்.
டிவி-ரிமோட்டுக்கு அடுத்து, அதிகமாக இப்போது சண்டை நடப்பது, அப்பா அல்லது அம்மாவின் செல்போனில் கேம் விளையாடுவதற்குத்தான்.

“நான் எடுத்து விளையாடும்போதுதான் இவன் வந்து பிடுங்குவான். பெரியவனா பிறந்தா, இதான் பிரச்னை. விட்டுக்கொடு, விட்டுக்கொடுனு சொல்வாங்க. எல்லாத்தையும் விட்டுத் தந்துட முடியுமா?” என்று உரிமைக்குரல் கொடுக்கிறார் ஹேமந்த்.

‘‘சின்னவனா இருக்கிறதுதான் ரொம்பக் கஷ்டம் தெரியுமா? ‘சே... நாம ஏன் சின்னவனா பொறந்தோம்’னு பல முறை ஃபீல் பண்ணுவேன். நான் மட்டும் இவனுக்கு அண்ணனா பொறந்திருந்தா....” என முடிக்காமல், டெரர் கிளப்புகிறார் தருண்.

“இவங்க சண்டையைத் தீர்க்கிறதுக்காகவே எக்ஸ்ட்ரா ஹெல்த் டிரிங்ஸ் சாப்பிட வேண்டி இருக்கும். இந்த வயசுலேயே இப்படி இருக்காங்களே... பெரியவங்க ஆகி எப்படி இருப்பாங்களோனு பயமா இருக்கும்” என்கிறார், அம்மா நாககன்னி.

இந்தப் பிரச்னையை எப்படித் தீர்த்துக்கறது? இதுபற்றிச் சொல்கிறார், குழந்தைகள் மனநல மருத்துவர் கண்ணன்.

‘‘குழந்தைகள் தெய்வத்துக்குச் சமம். அதுல எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அப்படி இருந்தும் ஏன் சண்டை வருது? இது, மரபு வழியாகவே வரும் அனிச்சை நிகழ்வு. ஒரு கன்றுக்குட்டி பிறந்ததுமே, தானாக தாயின் மடியைத் தேடிப்போய் பால் குடிக்கும். பல விலங்குகள், தங்களுக்கான எல்லைக் கோடுகளை வகுக்கும். அந்த மாதிரி, மனிதர்களுக்கு ‘இது என்னுடையது, இப்படி இருக்கிறது என் உரிமை’ போன்ற விஷயங்கள் மரபிலேயே வரும். அதைத்தான் சண்டையில் காட்டுவாங்க. கொஞ்ச நேரத்தில் மறந்துடுவாங்க. மனசுக்குள் வன்மமாகவோ வெறுப்பாகவோ அது இருக்காது. வயது ஆக ஆக மெச்சூரிட்டி வரும்.

பெற்றோர்கள் இந்த இடத்தில்தான், ஒற்றுமையாக இருக்கிறது, விட்டுக்கொடுக்கிறது போன்ற குணங்களை எடுத்துச் சொல்லணும். இப்பவே, நம்மளை எந்த மாதிரி மாத்திக்கலாம்னு சுட்டிகளும் யோசிக்கணும். நம்ம அப்பா, அம்மா காலத்தில் ஒரு வீட்டில் நான்கைந்து பிரதர்ஸ், சிஸ்டர்ஸ் இருப்பாங்க. ரெண்டு பேருக்குள் சண்டை வந்தாலும், இன்னும் ரெண்டு பேர் சமாதானம் செய்வாங்க. அவங்களோடு விளையாடலாம். இப்போ இருக்கிறதோ, ரெண்டு பேர்தான். உங்களுக்குள்ளே சண்டை போட்டுகிறதால, அந்த நேரத்தில் கிடைச்சிருக்க வேண்டிய சந்தோஷத்தை மிஸ் பண்ணிடுவீங்க. ஒரு அண்ணன் கிரிக்கெட் பார்க்க நினைக்கிறப்ப, தங்கை போகோ சேனல் பார்க்க ஆசைப்படும். ஒரு வீட்டுக்கு ரெண்டு டிவி வாங்க முடியுமா? அதனால், தங்கைக்கு விட்டுக்கொடுப்போம்னு நினைக்கணும். இப்படிச் செய்யும்போது, சண்டை வராது. இதைவிட முக்கியமான விஷயம் இருக்கு. இப்போ, பல வீடுகளில் ஒன் சைல்டுதான். தன்னுடைய வெற்றி, சந்தோஷம், வருத்தத்தைப் பகிர்ந்துக்க அவங்களுக்குப் பக்கத்தில் யாரும் இருக்க மாட்டாங்க. ஆனா, உங்களுக்கு அக்கா, தங்கை, அண்ணன் என ஒருத்தர் இருக்கிறது பெரிய கிஃப்ட். அந்த கிஃப்ட்டைப் பத்திரமாப் பார்த்துக்கணும் என நினைச்சாலே சண்டை வராது. எப்பவும் ஜாலிதான்” என்கிறார்.

இந்த விஷயங்களைப் புரிஞ்சுகிட்டு சண்டையை மறந்து உங்க பிரதர், சிஸ்டர்களோடு சந்தோஷமா இருங்க   ஃப்ரெண்ட்ஸ்!                        

கே.யுவராஜன்

எம்.உசேன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick