அங்கீகாரம்

‘‘இப்படி ஒரு முடிவை நான் எதிர்பார்க்கவே இல்லைப்பா” என்றாள் தமயந்தி. அவள் குரலில், உலகின் ஒட்டுமொத்த ஏமாற்றம் நிரம்பி வழிந்தது.

எட்டாம் வகுப்பு படிக்கும் தமயந்தி, வீட்டுக்கு ஒரே பெண். பள்ளியில் நடக்கும் கவிதை, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் அவளுக்குத்தான் முதல் பரிசு கிடைக்கும். மாவட்ட அளவிலான கவிதைப் போட்டியிலும் பரிசு பெற்றிருக்கிறாள்.

அப்போது, பள்ளியின் இறை வணக்கத்தில், ‘‘தமயந்தியால் நம் பள்ளிக்கே பெருமை. எல்லோரும் தமயந்தியை ஒரு தூண்டுகோலாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என தலைமையாசிரியர் சொன்னபோது, தமயந்திக்கு இறக்கைகள் முளைத்தன.

மதிப்பெண்ணுக்கும் அறிவாற்றலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது அவள் தந்தையின் கருத்து. அவளை முதல் மதிப்பெண் எடுக்கும்படி கட்டாயப்படுத்த மாட்டார். அவளது தனித் திறமையைப் புரிந்துகொண்டு, பொது அறிவுப் புத்தகங்களையும் சிறுவர் வார இதழ்களையும் வாங்கிக்கொடுப்பார்.

அப்படித்தான் ஒரு சிறுவர்  பத்திரிகையில் பிரமாண்டமான  ஓவியப் போட்டி அறிவித்திருந்தார்கள்; பரிசும் பிரமாண்டமானதுதான்.  அதைப் பார்த்த நிமிடமே, ஓவியம் வரைய அமர்ந்துவிட்டாள் தமயந்தி.

ஒரு மணி நேரம்...  தென்னைமரம், கடல், படகு, பறவைகளோடு அற்புதமான ஓவியம் பிறந்தது. அப்பா வீட்டுக்கு வந்ததும் காட்டினாள்.

‘‘இதைப் பார்த்ததும், அந்த இடத்துக்கே போன மாதிரி இருக்கு. ரொம்ப அழகா வரைஞ்சிருக்கே. உனக்குப் பரிசு கிடைக்கும்” என்றார் அப்பா.

சந்தோஷமாகத் தூங்கச் சென்றாள் தமயந்தி.

மறுநாள், “அப்பா, மறக்காம போஸ்ட் கவர் வாங்கிட்டு வாங்க” என்றாள்.

“நிச்சயம் வாங்கிட்டு வர்றேன் செல்லம்” என்றார் அப்பா.

அப்பா, இரவுதான் வீட்டுக்கு வருவார். அதற்குள் அந்த ஓவியத்தை தோழிகளிடம் காட்ட ஆசை. பள்ளிக்கு எடுத்துச் சென்றாள் தமயந்தி.

பள்ளியில் அதைப்பார்த்த மாணவர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர். அவளுக்குத்தான் முதல் பரிசு கிடைக்கும் என்றார்கள். தமயந்திக்குப் பெருமையாக இருந்தது.

அப்பா, அஞ்சல் உறை வாங்கி வந்தார். பத்திரிகையின் முகவரி எழுதி, அந்த ஓவியத்தை அனுப்பினாள். அப்படி இப்படி என ஒரு மாதம் சென்றது. ஒருநாள், போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

முதல் பரிசு... இரண்டாம் பரிசு... மூன்றாம் பரிசு... என அவள் கண்கள் பரபரப்பாகத் தேடின. மூன்றிலும் அவள் பெயர் வரவில்லை. பரிசுக்குரிய சிறுவர்களை, வீட்டுக்கே சென்று போட்டோ எடுத்துப்போட்டிருந்தார்கள். அந்த மூன்று ஓவியங்களோடும் அவள் வரைந்த ஓவியத்தை ஒப்பிட்டுப் பார்த்தாள். போட்டி முடிவில் அவளுக்குத் திருப்தி இல்லை.

“என்னம்மா, ரொம்ப அப்செட் ஆயிட்டே?’’ தலையை வருடியபடி கேட்டார் அப்பா.

‘‘நான் வரைஞ்ச ஓவியங்களைவிட நல்லா  இருந்திருந்தா பரவாயில்லை. ஆனா, சுமாரான ஓவியங்களை செலெக்ட் பண்ணியிருக்காங்களே’’ எனச் சலித்துக்கொண்டாள் தமயந்தி.

“அப்படிச் சொல்லாதே தமயந்தி. உன்னுடைய கோணத்தில் இருந்து மட்டும் பார்க்றே. இந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வன உயிரினங்களைக் காப்பது என ஒரு கருத்தை அழகாகச் சொல்லியிருக்கு. இன்னொரு விஷயத்தைக் கவனி. உன்னைவிட வயசில் சின்னவங்க வரைந்த ஓவியங்கள் அவை. அவங்க சிந்தனைக்கு இது பெரிய விஷயம்தானே’’ என்றார் அப்பா.

‘‘என்னமோ போங்கப்பா” என்ற தமயந்தி, புத்தகத்தை ஓரமாக வைத்துவிட்டு நகர்ந்தாள்.

பள்ளியிலும் இதே பேச்சுதான். நல்ல ஓவியத்துக்குப் பரிசு கிடைக்கவில்லை. இந்தப் பத்திரிகைகளே இப்படித்தான். ஒருவேளை, தெரிந்தவர்களுக்குப் பரிசு கொடுத்திருப்பார்களோ என சக மாணவிகள் பேசியபோது, தமயந்திக்கு இன்னும் வருத்தமாக இருந்தது.

இரண்டு நாட்கள் கழித்து மாலை நேரம், அப்பாவின் செல்போன் ஒலித்தது. பரபரப்போடு தமயந்தியிடம் கொடுத்தார். எதிர் முனையில் பேசியவர், ஓவியப் போட்டி நடத்திய பத்திரிகையின் உதவி ஆசிரியர்.

‘‘தமயந்தி, உங்கள் ஓவியத்தில் ஒரு மெச்சூரிட்டி இருக்கு. எங்களோட பத்திரிகையில் வரும் சிறுகதைகளுக்கு உங்களால் ஓவியம் வரைஞ்சு தர முடியுமா?” எனக் கேட்டார்.

தமயந்தியால் பதில் சொல்ல முடியவில்லை. ‘‘நா... நான் எப்படி?” எனத் தடுமாறினாள்.

‘‘ஒரு கதையை அனுப்புகிறோம். முயற்சி செய்துபாருங்க. உங்களால் நிச்சயம் முடியும்” என்றார் அவர்.

அந்த நொடியில், நமது திறமைக்குச் சரியான நேரத்தில் அங்கீகாரம் கிடைக்கும் எனப் புரிந்துகொண்ட தமயந்தி, ‘‘அனுப்புங்க சார். அசத்திடுறேன்” என்றாள் உற்சாகமாக!

டி.மதுவந்தி

ராம்கி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick