சுட்டி ஸ்டார் நியூஸ்!

தொடரும் சாதனை!

துபாயில் உள்ள ‘புர்ஜ் அல் அரப்’ (Burj al Arab) ஓட்டல், சர்வதேச அளவில் தலைசிறந்த ஹோட்டலாகத் தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள ‘டெய்லி டெலிகிராப்’ நாளிதழின் வாசகர்களிடம் 20 அம்சங்களை அடிப்படையாகக்கொண்டு நடத்தப்பட்ட சர்வேயின் மூலம் இந்தத் தேர்வு நடைபெற்றது. 650 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட இந்த ஹோட்டல், 1999 டிசம்பரில் திறக்கப்பட்டது. இதன் உயரம், 689 அடிகள். கடற்கரையில் இருந்து 280 மீட்டர் தொலைவில், படகு போன்ற அமைப்பில், கடலுக்குள் கட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீமீரா சுப்பிரமணியன்

ஆதர்ஷ் வித்யா கேந்திரா,

நாகர்கோவில்.

நுரையீரல் மீன்கள்!

நிலத்திலும் நீரிலும் வசிக்கும் மீன்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? ‘நுரையீரல் மீன்’  (Lung fish) என அழைக்கப்படும் இந்த வகை மீன்கள், நீரிலும் நிலத்திலும் வாழும் இயல்புடையவை. இவை அதிகம் காணப்படுவது, தென் அமெரிக்காவில். 4.10 அடி நீளம் வரை வளரும் இந்த வகை மீன்கள் நீரில் இருக்கும்போது, மற்ற மீன்களைப் போல சுவாசிக்கும். நீர் வற்றும்போதும் அங்குள்ள சேற்றில் வளை தோண்டித் தங்கும். 35 முதல் 50 செ.மீ ஆழம் வரை வளை தோண்டி வாழும்போது, அந்தத் துளைகள் வழியே சுவாசிக்கும். மழைக்காலம் வந்ததும், வளையிலிருந்து வெளிவந்து நீரில் வசிக்கும்.

கோ.செந்தமிழ்

ஆதித்யா வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளி,

பொறையூர், புதுச்சேரி.

விவசாய எறும்புகள்!

எறும்புகள், காளான்களைப் பயிரிடுகின்றன என்றால் நம்புவீர்களா? மரம், செடி கொடிகளில் உள்ள இலைகள், மலர்கள், குச்சிகளைத் தூக்கிக்கொண்டு தம் இருப்பிடம் செல்லும் எறும்புகள், அவற்றை மேலும் நுண்ணிய துண்டுகளாக நறுக்குகின்றன. பிறகு, அவற்றைப் பல அறைகளில் பரப்பிவைக்கின்றன. நாட்கள் பல கடந்ததும், அந்தத் தாவரக் கழிவுகளில் காளான்கள் முளைவிடத் தொடங்கும். அவற்றைப் பத்திரமாகப் பாதுகாத்து, குறிப்பிட்ட வளர்ச்சி அடைந்ததும், எறும்புகள் உணவாக உண்ணுகின்றன.

ச.மதுரவாணி

ஜேப்பியார் பள்ளி,

செம்மஞ்சேரி, சென்னை.

நிறம் மாறும் பாறை!

 ஆஸ்திரேலியாவின் வட பகுதியில், ‘ஆலிஸ் பிரிங்ஸ்’ எனும் ஊரிலிருந்து 480 கி.மீ தொலைவில், நிறம் மாறும் கற்பாறை ஒன்று உள்ளது. இது, 348 மீட்டர் உயரமும் 9 கிலோமீட்டர் சுற்றளவும்கொண்டது. இதன் இயற்கை நிறம், நீலம் கலந்த சாம்பல். ஆனால், சூரிய ஒளியின் தன்மைக்கு ஏற்ப காலையில் மஞ்சள் நிறத்திலிருந்து ஆரஞ்சுக்கும், மாலையில் சிவப்பு நிறத்திலிருந்து வயலட் நிறத்துக்கும் மாறுவது, காண்போரை வியக்கவைக்கிறது.

சே.நவநீதன்

ஸ்ரீவித்யா மந்திர், சிவாஜி நகர்,

சேலம்.

ராட்சச முட்டை!

அழிந்துபோன பறவை இனங்களில் ஒன்று, யானைப் பறவை  (Elephant Bird). இதன் உணவு, தாவரமே. இதுவே உலகில் வாழ்ந்த மிகப் பெரிய பறவை என ஆராச்சியாளர்கள் கூறுகிறார்கள். 10 அடி உயரம், 500 கிலோவுக்கு மேல் எடை உடையது. மடகாஸ்கர் பகுதியில் வாழ்ந்த இந்தப் பறவை இனம், 16-ம் நூற்றாண்டில் அழிந்துவிட்டது. இதன் முட்டை, சாதாரண முட்டையைவிட 160 மடங்கு பெரியது. இதன் ஒரு முட்டை, லண்டனில் உள்ள ஸாத்தெபைஸ் ஏல நிறுவனத்தில் ஏலத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த ‘யானை முட்டை’ 70 ஆயிரம் அமெரிக்க டாலர் வரை ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பா.பவன் சுப்பு

பெசன்ட் அருண்டேல் சீனியர் செகண்டரி ஸ்கூல்,

திருவான்மியூர், சென்னை-41.

பூனைத் தீவு!

ஜப்பானில் உள்ள ஓஷிமா தீவில், மனிதர்களைவிட பூனைகளின் எண்ணிக்கை அதிகம். முதலில், மீனவர்களின் படகு மற்றும் வலைகளைச் சேதமாக்கும் எலிகளை அழிக்கவே பூனைகளை வளர்த்தனர். பிறகு, பூனைகளுக்கு உணவிடுவதால் செல்வம் பெருகும், எதிர்காலம் சிறக்கும் என்ற நம்பிக்கை உண்டானது. அதன் விளைவு, அந்தத் தீவில் ஒரு நபருக்கு ஆறு பூனைகள் என்ற விகிதத்தில் பூனைகளின் ராஜ்ஜியம் களைகட்டுகிறது.

செ.சுபஸ்ரீ

பாரி வள்ளல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,

சிங்கம்புணரி, சிவகங்கை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick