விவசாயிகளின் தோழன்!

“விவசாய வளர்ச்சிக்கு மிகப் பெரிய ஆதாரமாக இருப்பவை தேனீக்கள். இந்தத் தேனீக்களின் தேனடைகளில் இருந்து மெழுகு தயாரிக்கப்படுகிறது. மெழுகு தயாரிக்க தேனடைகளைத் தண்ணீரில் சூடுபடுத்தும்போது, நிறையத் தேன் வீணாகிறது. எரிபொருள் செலவும் அதிகமாகிறது. இதற்கான தீர்வுதான் இந்தக் கண்டுபிடிப்பு” என்கிறார் ஜவஹர் ராஜ்.

ஈரோடு மாவட்டம், கொளப்பலூரைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர், ஜவஹர் ராஜ்.  சூரிய வெப்பத்தின் மூலம், தேனடையில் இருந்து எளிதாக மெழுகைப் பிரித்தெடுக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்.

‘‘என் அப்பா, அரசுப் பேருந்து நடத்துநராக இருக்கிறார். எங்கள் தோட்டத்தில் தேனீ பெட்டிகளை வைத்து, தேனைச் சேகரிப்பார். அப்பாவோடு நானும் தேன் சேகரிக்கப் போகும்போது உருவான யோசனைதான் இது. ஒரு பாத்திரம் போன்ற குடுவையின் மேல், கண்ணாடியால் மூடி அமைத்து, நடுவில் ஒரு துளையைப் போட்டேன். அதில், இருபக்கக் குவிலென்ஸை வைத்தேன். இந்த இருபக்கக் குவிலென்ஸ் வெப்பத்தைக் கடத்தி, குடுவைக்குள் அனுப்பும். குடுவையைச் சுற்றிலும் கறுப்பு பெயின்ட் அடித்தேன். கறுப்பு நிறம், வெப்பத்தைச் சீராகக் கடத்தும். பிறகு, குடுவையைச் சுற்றிலும் தெர்மக்கோல்,  வாழை நாரால் கவர் செய்தேன். இதனால்,  குடுவைக்குள்  வெப்பம் குறையாமல் இருக்கும். குடுவைக்குள் தேன் அடைகளைப் போட்டு மூடிவிட்டால், தேனடை உருகி, இயந்திரத்தின் கீழ்ப் பகுதிக்கு வரும். வெப்பத்தால் மெழுகு இறுகிவிட, தேனும் சேகரமாகும்” என்றார் ஜவஹர் ராஜ்.

இந்தக் கண்டுபிடிப்புக்காக, லீட் இந்தியா 2020 ஃபவுண்டேஷன் (Lead India 2020 Foundation) சார்பில், சிறந்த விஞ்ஞானி விருதைப் பெற்றிருக்கிறார் ஜவஹர் ராஜ்.

‘‘இப்போ, இந்தப் பகுதியில் தேன் சேகரிக்கும் விவசாயிகள், என்னுடைய இயந்திரத்தைப் பயன்படுத்துறாங்க. அவங்களுக்குப் பயன்படும் ஒரு விஷயத்தைச் செய்திருக்கிறேனே, அதுதான் விருதைவிட மகிழ்ச்சியான விஷயம்” என்கிறார் புன்னகையுடன்.

கு.ஆனந்தராஜ்

த.ஸ்ரீநிவாசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick