Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"இயற்கையை ஏறிட்டுப் பார்ப்போம்”

‘சுட்டி ஸ்டார்’ என்றால் சும்மாவா?  எனச் சொல்லும்வகையில், தங்கள் ஓவியத் திறமையால், அடுத்தடுத்த வாரங்களில் புதுச்சேரியைக் கலக்கியிருக்கிறார்கள் இரண்டு பேர்.

‘‘என் அப்பா கோபால் ஓர் ஓவியர் என்பதால், எனக்கும் ஓவியம் வரையப் பிடிக்கும். என் இயல்பான ஆர்வத்துக்கு அப்பா கொடுத்த ஊக்கம்தான் தனி ஓவியக் கண்காட்சி நடத்தும் அளவுக்குக் கொண்டுவந்திருக்கு” எனப் புன்னகைக்கிறார் செந்தமிழ்.

புதுச்சேரி, ஆதித்யா வித்யாஸ்ரம் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார் செந்தமிழ். சுட்டி விகடனின் ‘பேனா பிடிக்கலாம்...பின்னி எடுக்கலாம் 2014-15’ திட்டத்தில் தேர்வாகி, படைப்புகளால் கலக்கிவருபவர்.  இவர் வரைந்த ஓவியங்களை, புதுச்சேரியில் உள்ள செகா ஆர்ட் கேலரியில் கண்காட்சியாக வைத்தார். கண்காட்சி தொடங்கிய அன்றே நான்கு ஓவியங்கள் விற்பனையாகின.    

லைன் ஆர்ட், அக்ரிலிக், கேன்வாஸ் எனப் பல வகைகளில் இவரது தூரிகை அசத்துகிறது. 2014-ம் ஆண்டு சர்வதேசப் பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ‘பிங்க்’ என்ற தலைப்பில் நடந்த கூட்டு ஓவியக் கண்காட்சியில் பங்கேற்றுள்ளார். அதே வருடம், தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா மாநிலத்தில், ‘இயற்கையை அழகாக்குவோம்’ என்ற தலைப்பில் தன் தோழி ஓவியாவுடன் இணைந்து ஓவியக் கண்காட்சியை நடத்தியிருக்கிறார் செந்தமிழ்.

‘‘கம்ப்யூட்டர், வீடியோ கேம், செல்போன் கேம் என ஒரு பெரிய எலெக்ட்ரானிக் முகமூடி இன்றைக்கு நம்ம முகத்தை நிரந்தரமா மூடப் பார்க்குது. பஸ்ஸில் போகும்போது, ஒரு பூங்காவில் உட்கார்ந்து இருக்கும்போதுகூட தனக்குப் பக்கத்தில் யார் நடந்துபோறாங்க, யார் உட்கார்ந்திருக்காங்கனு தெரியாமல் செல்போனில் மூழ்கி இருக்காங்க. இயற்கை வளங்களில் பெரும்பாலானவற்றை அழிச்சுட்டோம். இருக்கிற கொஞ்சத்தையும் ஏறிட்டும் பார்க்காதவங்களா இருக்கிறோம். இப்படியே போனால் இயற்கைக்கும் நமக்குமான தொடர்பே இல்லாமல் போய்விடும். இந்த நிலை மாறணும். அதனால்தான், என்னுடைய ஒவ்வோர் ஓவியத்திலும் இயற்கையை மையமா வெச்சிருக்கேன்” என்கிற செந்தமிழின் குரலில், அவரது ஓவியங்களைப்போலவே சமூக அக்கறையும் ஒளிர்கிறது.

”மனித உணர்வுகள் அற்புதமானவை!”

‘‘கோபம், சிரிப்பு, ஏமாற்றம், எதிர்பார்ப்பு... எனப் பல உணர்வுகளைக்  காட்டும் மனித முகங்கள் மிகவும் அற்புதமானவை. அவைதான் என் சாய்ஸ்” எனச் சிரிக்கிறார் லட்சியா மதியழகி.

சுட்டி விகடனின் ‘பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்’ திட்டத்தில் கடந்த ஆண்டு தேர்வாகி, கலக்கிவரும் சுட்டி ஸ்டார்களில் இவரும் ஒருவர். புதுச்சேரி, செயின்ட் பேட்ரிக்ஸ் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவி. ஜூன் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை புதுச்சேரி, செகா ஆர்ட் கேலரியில் இவரது ஓவியங்கள், பார்வையாளர்களைக் கவர்ந்தன.

மூன்றாம் வகுப்பு படிக்கும்போது,  மத்திய மின் அமைச்சகம் சார்பில் ‘ஆற்றல் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் மாநில அளவில் நடந்த ஓவியப் போட்டியில் முதல் பரிசு;  மத்திய நீர்வள அமைச்சகத்தின் சார்பில் நடந்த ‘எதிர்கால நீர் பாதுகாப்பு’ என்ற போட்டியில், மாநில அளவில் முதல் பரிசு   பெற்றபோது, இவர் நான்காம் வகுப்பு மாணவி... என இவரது சாதனைகள் அசரவைக்கின்றன.

‘‘என் அப்பா சரவணகுமார் ஓவிய ஆசிரியர். அவரிடம் இருந்துதான் எனக்கும் ஓவிய ஆர்வம் வந்தது. ஆனால், ‘என்னைவிட வேறு ஆசிரியரிடம் கத்துக்கிட்டாதான் உனக்கு முழுமையான அக்கறையும் ஓவியத்தின் மதிப்பும் புரியும்’னு சொல்லி, வேறு ஆசிரியரிடம் சேர்த்துவிட்டார். 10 வயதில், 29 ஓவியங்களைக் கொண்டு தனி நபர் கண்காட்சியாக நடத்தினேன். மூன்று வருடங்களுக்குப் பிறகு, இப்போ நடத்துகிறேன். நான் எங்கே போனாலும் என்னைச் சுற்றி இருக்கும் மனிதர்களைக் கவனிச்சுட்டே இருப்பேன். ஒருத்தரின் முகத்தை,  சாதாரணமாப் பார்க்கும்போது மாதக் கணக்கில், ஆண்டுக்கணக்கில் மாறாதது மாதிரி தெரியும். ஆனால், நிமிஷத்துக்கு நிமிஷம் சின்னச் சின்ன மாற்றங்களை நம் முகம் சந்திக்குது” என முகங்கள் பற்றி பேச ஆரம்பித்தால், லட்சியா மதியழகி முகத்தில் அத்தனை பரவசம்.

பல்வேறு மனிதர்கள், அவர்களின் முகங்களில் தெறிக்கும் உணர்வுகள் என அசத்துகின்றன இவரது ஓவியங்கள். நீர்வண்ணம், பென்சில், அக்ரிலிக், ஆயில் என அனைத்து வகைகளையும் ஓவியங்களில் கையாள்கிறார்.

‘‘ஆனாலும் எனக்கு ரொம்பப் பிடிச்சது வாட்டர் கலரிங்.  இதுவரை ஓவியத்தில், யாரும் தொடாத பகுதியைத் தொடணும் என்பது ஆசை. அது என்ன பகுதினு இதுவரைக்கும் தெரியலை. அதைத்தான் தேடிட்டிருக்கேன். சீக்கிரமே கண்டுபிடிச்சுருவேன்” என்கிறார் முகம் ஜொலிக்க.

ஜெ.முருகன்

அ.குரூஸ்தனம்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
வரிக்குதிரையும் சாலைவிதியும்!
ரியல் டு காமிக்ஸ் ஹீரோக்கள்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்
Advertisement
[X] Close