உயிர் பறிக்கும் இயற்கைப் பேரழிவு!

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக இருந்த நேபாளம் நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், உலக மக்களைக் கலங்கவைத்தது. அடுத்தடுத்தும் சிறுசிறு நில நடுக்கங்கள் உருவாகி வருகின்றன. இயற்கையின் பேரழிவுகளில் ஒன்றாக இருக்கும் நிலநடுக்கம் பற்றியும், இதுவரை உலக அளவில் நிகழ்ந்த சில நிலநடுக்கங்கள் பற்றியும் தெரிந்துகொள்வது அவசியம்.

பூமியின் மேற்பரப்பு (Lithosphere), பெரும் பாறைத் தட்டுகளால் ஆனது. நிலம் மற்றும் நீரின் அடிப்பகுதியில் உள்ள இந்த நகரும் பாறைத் தட்டுகள்தான், உலகின் ஏழு கண்டங்களையும் இணைக்கின்றன. இந்தப் பாறைத் தட்டுகள்  உராய்வதால் ஏற்படுவதே, நிலநடுக்கம் எனப்படுகிறது. குலுங்கிய பூமி சரியாகப் படியும் வரை மீண்டும் மீண்டும் ஏற்படுவது ‘பின்தொடர் நிலநடுக்கம்’ எனப்படும். சில நேரங்களில் ஒரு வருடம்கூட பின்தொடர் நிலநடுக்கம் நீடிக்கலாம்.

இந்த நிலநடுக்கத்தை ‘ரிக்டர்’ என்ற கணக்கில் அளவீடு செய்கிறார்கள். 2.9 ரிக்டருக்கும்  குறைவான வீரியமுள்ள நிலநடுக்கம், நிமிடத்துக்கு இரண்டு வீதம் உலகம் முழுக்க ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. ரிக்டர் அளவில் மூன்றுக்குக் குறைவான நிலநடுக்கத்தை நம்மால் உணர முடியாது. ஆறுக்கும் அதிகமான நிலநடுக்கமே, பாதிப்புகளை ஏற்படுத்தும்.

8.0 அல்லது அதற்கும் அதிகமான வீரியமுள்ள நிலநடுக்கம், ஆண்டுதோறும் சராசரியாக, 8,000 உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது. 1960-ல் சிலி நாட்டில் ஏற்பட்ட 9.5 ரிக்டர்கொண்ட வல்டிவியா (Valdivia) என்ற நிலநடுக்கம்தான், இதுவரை பதிவான நிலநடுக்கங்களிலேயே பெரியது. 1964-ம் ஆண்டு, அலாஸ்காவில் பதிவான 9.2 ரிக்டர் நிலநடுக்கம், இரண்டாவது வலிமை மிக்க நிலநடுக்கம் ஆகும்.

2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம், தமிழகம் மற்றும் இலங்கைப் பகுதிகளில் சுனாமியைத் தோற்றுவித்து, பெரும் அழிவை ஏற்படுத்தியது. இதுவே, மூன்றாவது வீரியமிக்க நிலநடுக்கம். சுமார் 10 நிமிடங்கள் நீடித்த இந்த நிலநடுக்கமே, மிக நீண்ட நேரம் நீடித்த நிலநடுக்கம் ஆகும். இந்த நிலநடுக்கம்  வெளிப்படுத்திய ஆற்றலில், இந்தியா முழுமைக்கும் 15 நாட்களுக்கு வேண்டிய எல்லா மின் தேவைகளையும் பூர்த்திசெய்திருக்கலாம் என்பார்கள்.

பூமியின் தென் கோளத்தைக் காட்டிலும் வட கோளத்தில் அதிகமான நிலநடுக்கம் ஏற்படுகின்றன. 80% பெரும் நிலநடுக்கங்கள், குதிரை லாடம் போன்ற வடிவில், பசிபிக் கடல் பகுதியில் உள்ள ‘தீ வளைவு’ (Ring of Fire) எனும் பகுதியில் ஏற்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக, ஈரான்-பாகிஸ்தான்- இந்தியா வழியாகச் செல்லும் ‘அல்பைடு பெல்ட்’ (Alpide Belt) என்ற பகுதியில் ஏற்பட்டுள்ளன.

கி.மு 1831-ல், சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்தான் இதுவரை பதியப்பட்டதில் தொன்மையானது. சீனாவில் கி.பி 78-139-ல் வாழ்ந்த, ழாங் ஹெங் (Zhang Heng) என்பவர், முதல் நிலநடுக்கமானியை  உருவாக்கினார். 1880-ல் ஆங்கிலேய விஞ்ஞானி, ஜான் மில்னே (John Milne), நவீன நிலநடுக்க மானியை உருவாக்கினார். அமெரிக்க விஞ்ஞானி சார்லஸ் ரிக்டர் (Charles Richter), நிலநடுக்கத்தை அளவிடும் அலகை, 1935-ம் ஆண்டு உருவாக்கினார்.

ஒன்று தெரியுமா? நிலவிலும் நடுக்கம் ஏற்படும். அங்கு சென்ற விண்கலங்கள் இதனை ஆராய்ந்துள்ளன. பூமியின் நடுக்கத்தைவிட இவை மிகவும் வலிமை குறைந்தவையாம்.

நிலநடுக்கம் ஏற்பட்டால், செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை!

திறந்தவெளிக்கு ஓடிவிடுங்கள். கட்டடம், விளக்குக் கம்பம் போன்று கீழே விழுந்து நம்மை நசுக்கக்கூடிய இடங்களுக்கு அருகே ஒதுங்கக் கூடாது.

பல மாடிக் கட்டடத்தில் நீங்கள் இருந்தால், லிஃப்ட் பயன்படுத்த வேண்டாம். படிகளில் வர முடியமா எனப் பார்க்கவும். கீழே இறங்கி வெட்டவெளிக்குச் செல்ல கால அவகாசம் இல்லையென்றால், மேசை போன்ற பொருள்களின் அடியில் ஒதுங்கவும். அறையின் மூலையில், குந்திய நிலையிலும் ஒதுங்கலாம். கூரை உடைந்து சாய்ந்தால், தலை மீது விழாமல் இருக்க, இந்த எச்சரிக்கை நடவடிக்கை.

நிலநடுக்கம் வாய்ப்புள்ள பகுதிகளில், பல மாடிக் கட்டடங்களில் நிலநடுக்கப் பாதுகாப்பு முறையில் கட்டுமானம் செய்வது மிக முக்கியம்.

த.வி.வெங்கடேஸ்வரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick