திறமையை வளர்க்கலாம்...மதிப்பை உயர்த்தலாம்!

கல்வி இணைச்செயல்பாடுகள்

மிழ்நாட்டில், ஒன்பதாம் வகுப்பு வரை தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை  (CCE - Continuous and Comprehensive Evaluation) சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த மதிப்பீட்டு முறை, பாடக் கல்வியோடு கல்வி இணைச் செயல்பாடுகளையும் உள்ளடக்கியது. கல்வி இணைச் செயல்பாடுகள், (Co-Scholastic Activities) நான்கு தலைப்புகளின் கீழ் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

வாழ்க்கைத் திறன்கள்(Life Skils) மனப்பான்மை மற்றும் மதிப்புக் கல்வி (Attitudes and values activities) மற்றும் பாட இணைச் செயல்பாடுகள் (Co-curricular activities) ஆகியன. இவற்றின் கீழ் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து இந்த இணைப்பில் முழுமையாகப் பார்ப்போம்.

தனித்திறன் வளர்த்து தன்னம்பிக்கை பெறுவோம்!

 ஒருவரின் தனித்திறனே மற்றவர்களிடமிருந்து அவரை மேன்மையாகக் காட்டும்.

கல்வி என்பது பாடப் படிப்பில் சிறந்து விளங்குவது மட்டுமல்ல, தனித்திறன்களை வளர்த்துக்கொண்டு எல்லோரது பாராட்டுகளைப் பெறுவதும்தான்.

தனித்திறன்கள்:

ஓவியம், கதை, கவிதை எழுதுதல், தோட்டம் அமைத்தல், பாடல் பாடுதல், நகைச்சுவை, கட்டுரை எழுதுதல், பேச்சாற்றல் முதலியன.

அனைவரிடமும் ஏதாவது ஒரு தனித்திறன் இருக்கும். அது அவர்களின் சூழ்நிலை, நேரம், வயதுக்கு ஏற்ப வெளிப்படும்.

தனித்திறன் வளர்த்தலின் பயன்கள்:

புதியன படைக்கும் திறன் வளரும்.

எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை பிறக்கும்.

சிக்கல் ஏற்பட்டால், அதற்கு எளிய வழியில் தீர்வு காணலாம்.

நன்றாகப் பழகும் திறன் மேலோங்கும், பகுத்து அறியும் திறன் வளரும்.

கூர்ந்து கவனித்தல், கற்பனைத் திறன், நினைவாற்றல் வளரும்.

பள்ளிப் பாடத்திலும் நம் தனித்திறன் செறிவைக் காட்டலாம்.

நம் மனதில் காற்றாக தனித்திறனை வளர்ப்போம். தேவைப்படும்போது தென்றலாக வெளிப்படுத்துவோம்.

மூ.சங்கீதா, அ.மே.நி.பள்ளி,

ஒண்ணுபுரம், திருவண்னாமலை.

நம்மை அறிந்தால்...

உலகிலேயே அதிக விஷயங்கள் அறிந்தவர் யார் தெரியுமா?

தன்னைப் பற்றி முழுமையாக அறிந்தவர்தான்.

ஒவ்வொருவரும் தம்மைப் பற்றி அறிந்துகொள்வது   அவசியம். நம்மைப் பற்றி பிறர் அறிந்து வைத்திருப்பதைவிட நாம் அதிகம் அறிந்திருக்க வேண்டும்.

நம்மிடம் உள்ள நிறை குறைகளை நாமே பட்டியலிட்டு, நிறைகளை வளர்த்துக்கொண்டு, குறைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

நம்மிடம் இருப்பதாகக் கருதும் பலவீனங்களை ஒவ்வொன்றாக நீக்கி, பலங்களாக மாற்ற வேண்டும்.

'நேற்று ஆசிரியர் பாடம் நடத்தும்போது, ஒரு சந்தேகம் வந்தது. அதைக் கேள்வியாகக் கேட்டோம். ஆசிரியரும் பதில் சொன்னார். ஆனால், எனக்கு சந்தேகம் தீரவில்லை'

இப்படி உங்களுக்கு என்றேனும் தோன்றி இருக்கிறதா? ஆமாம் என்றால், எங்கு தவறு நிகழ்ந்திருக்கிறது என்று யோசியுங்கள். ஆசிரியர் பாடம் நடத்தியபோது நன்றாகக் கவனித்தீர்களா? உங்களுக்கு என்ன சந்தேகம் என்பதைத் தெளிவாக ஆசிரியருக்கு விளக்கினீர்களா? அதை அவர் புரிந்துகொண்டாரா? அது தொடர்பான விளக்கத்தை அளித்தாரா? முழுதாகச் சந்தேகம் தீர, அடுத்த கேள்வி கேட்கத் தயங்கினீர்களா?

இதில், எங்கு தவறு நடந்திருக்கிறது என்று கண்டறிந்து சரிசெய்யுங்கள். மீண்டும் அவற்றை செய்யாமலிருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். நாம் செய்யும்  தவறுகளுக்கு பிறரைக் குறை கூறக் கூடாது. 'தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பதை உணர்வதே சரியானது.

ஒவ்வொரு நாளும் நாம் செய்த நற்செயல்களை மனதுக்குள் பட்டியலிட வேண்டும். நம்மால் பிறருக்கு ஏதேனும் உதவி செய்ய இயலும் எனில், அந்த உதவியை உடனடியாகச் செய்ய வேண்டும்.

நம்மை அறிந்துகொள்வதில், நம் உடலை அறிந்துகொள்ளுதலும் மிக முக்கியம். உடலைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சுத்தமாக வைத்திருந்தும் உடல்நிலை அடிக்கடி சரியில்லாமல் போகிறதா?

ஏன் என்று யோசியுங்கள். சமீப காலமாக, புதிதாக என்ன சாப்பிடுகிறோம்? புதிதாக எந்த இடங்களுக்குச் செல்கிறோம் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். அப்படியும் காரணம் புரியவில்லை என்றால், தயங்காமல் பெற்றோர், ஆசிரியர் உதவியை நாடுங்கள்.

உடல் தூய்மை மட்டும் போதாது. உள்ளத்தையும்  தூய்மையாகவைத்திருக்கப் பழக்க வேண்டும். எதிர்மறையான சிந்தனைகளைத் தவிர்த்து, நம்பிக்கை ஊட்டும் நேர்மறையான சிந்தனைகளை நோக்கியே உங்கள் பயணம் இருக்க வேண்டும்.

ஆசிரியர்கள் இது போன்ற செய்திகளைக் கூறி, மாணவர்களைத் தயார்படுத்த வேண்டும்.

                   இரத்தின புகழேந்தி,

                     அரசு உயர்நிலைப் பள்ளி,

                              மன்னம்பாடி.

வாழ்க்கைத் திறன்களை வசப்படுத்துவோம்!

வாழ்க்கை பற்றி பேசும் அளவுக்கு நாம் வளர்ந்துவிட்டோமா என்று நினைக்காதீர்கள். இப்போதே  வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்தினால், எதிர்காலம் ஒளிவீசும்.

தெளிவாகப் பேசுதல்:

தன் கருத்துக்களை அடுத்தவர்களுக்குப் புரியும்படி தெளிவாகப் பேச வேண்டும்.

நாம் கூறவேண்டிய செய்திகளுக்குத் தேவையான சொற்களைத் தெளிவாக உச்சரிக்க வேண்டும்.

நயம்படப் பேசுதல்:

நாம் பேசும்போது, அடுத்தவர் மனதைப் புண்படுத்தாத  வார்த்தைகளாக இருக்க வேண்டும். நண்பரின் கருத்துக்கு எதிரான கருத்துக்களைக்கூட மிகவும் அன்பாகக் கூறி புரியவைக்க வேண்டும். இது, குழுச் செயல்பாடு செய்யும்போது, மாற்றுக் கருத்துக்களை ஏற்று செயல்பட உதவியாக இருக்கும்.

நேர்கொண்ட பார்வை:

சரியான பதிலோ, தவறான பதிலோ முணுமுணுப்பாக இருக்கக் கூடாது. நேராக நிமிர்ந்து, சத்தமாகச் சொல்ல வேண்டும். கேள்வி கேட்டவரின் முகம் பார்த்துப் பேசுதல், பொது நிகழ்ச்சியில் பேசும்போதும் நேர்முகத் தேர்விலும் உதவும். நேர்முகத் தேர்வில், அடுத்தவர் முகம் பார்த்துத் தெளிவாகப் பேசுதல், நம் மீது நம்பிக்கையை வரவழைக்கும்.

கூச்சப்படாமல் பேசுதல்:

தனது தோழிகளிடம் பேசும்போது இருக்கும் தைரியம், வகுப்பறை முன்னால் நின்று எல்லோரிடமும் கூறும்போது இருக்காது. தனது ஆசிரியரைத் தவிர வேறு உயர் அதிகாரிகள் வந்தால், நன்கு தெரிந்த பதிலைக்கூட சொல்லத் தயங்குவர்.

இதைப் போக்க நாடகம், தனி நடிப்பு, அறிக்கை வாசித்தல், செய்திகள் வாசித்தல் ஆகியவற்றை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களிடம் இருக்கும் கூச்சம்  விடைபெறும்.

வகுப்பறைக்கு வெளியே:

தெளிவாகப் பேசுதல், நிமிர்ந்து முகம் பார்த்துப் பேசுதல், சத்தமாக, தைரியமாகப் பேசுதல் போன்ற பண்புகளை வகுப்பறையில் வளர்த்துக்கொள்ளும்போது, உங்களுக்கு ஒரு தன்னம்பிக்கை வரும். இந்தப் பண்புகளே வெளி  உலகத்தில் கெட்ட எண்ணங்களுடனும், நயவஞ்சகமாகவும் பேசி, தவறான வழியைப் பயன்படுத்த நினைப்பவருக்கும் ஒரு பயத்தைக் கொடுக்கும்.

அந்நியரின் பரிசுப் பொருள் வேண்டாம்:

எந்த உறவினரும், அந்நியரும் உங்கள் பெற்றோருக்குத் தெரியாமல் கொடுக்கும் பரிசுப் பொருட்களை வேண்டாம் என்று தெளிவாக மறுத்துவிடுங்கள்.

மாணவர்கள், தம் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்திக்கொள்ள, ஆசிரியர்களும் பெற்றோர்களும் உதவ வேண்டும்.

                       நா.கிருஷ்ணவேணி,

ஊ.ஒ.ந.நி.பள்ளி, நல்லம்பாக்கம்.

கோடி நன்மை தரும் குழு மனப்பான்மை!

'ஒற்றுமையே பலம்’ என்பதை மாணவர்கள் உணர, குழுச் செயல்பாடு சிறந்த வழியாகும்.

குழுவாகச் செயல் படுவதால் விளையும் நன்மைகள் பற்றி, ஆசிரியர் கதைகளோடு கலந்து சுவையாகக் கூறலாம். இதனால், குழுச் செயல்பாடுகளில்  மாணவர்கள் ஆர்வமுடன் ஈடுபடுவர்.

வகுப்பறைச் செயல்பாடுகளில், குழுவாகச் செயல்பட வைக்கலாம்.

பாடம் சம்பந்தமான நேரங்களில் மட்டுமன்றி, விளையாட்டு வேளைகளிலும் குழுவாகச் செயல்படும் வகையில் சந்தர்ப்பங்களை அமைத்துத் தரலாம்.

மாணவர்களைக் குழுவாகப் பிரித்து, ஏதாவது ஒரு தலைப்பு கொடுத்து, அதைப் பற்றி விவாதிக்கவைக்கலாம்.  சமுதாயத்தில், எதிர்மறையாக அணுகப்படும் விஷயங்கள்  பற்றிய விவாதங்களையும் அமைக்கலாம்.

மாணவர்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பில் வாதிட, தேவையானவற்றை எண்கள் இட்டு, ஒன்றன் பின் ஒன்றாக எழுத வேண்டும். அதை, குழுவின் அத்தனை உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களால் தொகுக்க வேண்டும். பிறகு, அதைப் பற்றி விவாதிக்க வேண்டும். இப்படிச் செய்வதால், அனைவருக்கும் விவாதத்தில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும்.

பள்ளிகளில், அடிக்கடி சிறு விழாக்கள் நடத்துவதன் மூலம், மாணவர்களின் குழு மனப்பான்மையை வளர்க்கலாம். சமீபத்தில், ஆறாம் வகுப்பு மாணவர்கள் சிலர் குழுவாக இணைந்து, பொங்கல் சமைத்து, பள்ளியில் அனைவருக்கும் கொடுத்தனர். அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

டி.விஜயலட்சுமி, அ.ஆ.மே.நி.பள்ளி,

கண்ணமங்கலம்.

பாராட்டு எனும் விருது!

பிறரைப் பாராட்டுவது போல உங்களையே பாராட்டிக்கொள்ளுங்கள். உதாரணமாக, இன்று செய்த செயல்களில் பெருமைப்படக்கூடிய செயல் எது? நாளை எந்தச் செயலை சிறப்பாகச் செய்யலாம் போன்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

ஒருவரைப் பாராட்டும்போது, அவர்களிடம் புத்துணர்ச்சி ஏற்படும். செயல்களில் ஈடுபாட்டுடன் பங்கேற்க உதவும். நமது பாராட்டு,   அவர்களுடைய செயலுக்குக் கிடைத்த அங்கீகாரமாக  அவர்களுக்குத் தோன்றும்.

கேள்வி கேட்கும் மாணவர்களை, ஆசிரியர்கள் பாராட்ட வேண்டும். அப்போதுதான் அவர்களிடம் உள்ள கூச்சம், பயம் போன்றவை விலகும்.

மாணவர்கள் சிறிய செயல் செய்திருந்தாலும், ஆசிரியர் அதைப் பாராட்டும்போது தன்னம்பிக்கை அதிகரிக்கும். சின்னச் செயலுக்கான பாராட்டுதான் அவர்களை சாதனை நிகழ்த்துபவர்களாக மாற்றும்.

சக நண்பர்களைப் பாராட்டும்போது, உங்கள் மீது மிகுந்த மரியாதை ஏற்படும். நட்பும் விரிவடையும். நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களைக் கூர்ந்து கவனிக்கும் ஆற்றலும் வளரும்.

குழுச் செயல்பாட்டின்போது, தங்களுக்குள் பாராட்டிக்கொள்வதால், ஒற்றுமை வலுக்கும். அந்தக் குழு செய்துகொண்டிருக்கும் செயல்பாடு, உற்சாகத்துடன் தொடரும்.

சக மாணவர்களைப் பாராட்டும்போது, நாம் எப்போதாவது தெரியாமல் செய்த தவறுகளையும் அவர்கள் மறந்துவிடுவர்.

பாராட்டு என்பது புகழக்கூடிய வார்த்தைகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது இல்லை. ஒரு சிறிய புன்னகையும்கூட பிறரின் முகத்தில் மலர்ச்சியை ஏற்படுத்தும்.

ஒருவரை நீங்கள் பாராட்டுவதை மற்றவர்கள் பார்க்கும்போது, உங்களிடம் இருந்து இந்த நல்ல பண்பைக் கற்றுக்கொள்வர். உங்கள் மீதும் நல்ல மதிப்பு வரும். பாராட்டு என்பது இதயங்களை வெல்லும் சக்தி.

பிறரைப் பாராட்டும்போது, அதைத் தக்கவைத்துக்கொள்ள அவர்கள் மேலும் கடுமையாக உழைப்பர். நேர்மையாகச் செயல்படுவர்.

ஆசிரியரின் பாராட்டு, ஒரு மாணவனின் மிகப் பெரிய விருது. சக நண்பர்களைப் பாராட்டுவது, அவர்களுக்கான விருது. அந்த விருதைப்  பெறவும் விருதைக் கொடுக்கவும் என்றும் தயங்காதீர்கள்.

 ஜி.கிறிஸ்டோபர்   மாநகராட்சி ஆரம்பப் பள்ளி,

ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.

தொடர்புகொள்ளும் திறன்!

ஒரு மாணவர், மற்றவரிடம் தொடர்புகொள்ளும்போது செய்ய வேண்டியவை:

முதலில், தொடர்புகொள்ளும் நபரை வரவேற்க வேண்டும். வயதில் மூத்தவராக இருந்தாலும் இளையவராக இருந்தாலும் எழுந்து நின்று வரவேற்க வேண்டும். கை கூப்பி வணக்கம் சொல்ல வேண்டும்.

சந்திப்பவரின் நலம் விசாரிக்க வேண்டும்.

தொடர்புகொள்ளும் நபரை, பெயரைக் குறிப்பிடாமல் 'வாங்க’ 'போங்க’ என்ற மரியாதையான வார்த்தைகளில் அழைக்க வேண்டும்.

தொடர்புகொள்ளும் நபர் கூறும் விஷயத்தை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். அவரது பேச்சைக் கேட்காமல் அலட்சியப்படுத்துவது நல்லதல்ல.

தொடர்புகொள்ளும் நபர் கேட்கும் கேள்விகளுக்கு,  சரியான பதிலைத் தெளிவாகக் கூற வேண்டும். தேவை இல்லாமல் சுற்றி வளைக்கவோ, அலட்சியத்துடனோ பதில் அளிக்கக் கூடாது.

அவர் பேசும்போது, அவரது கண்களைப் பார்ப்பது  நல்ல பழக்கம். வேடிக்கை பார்த்துக்கொண்டோ, தரையைப் பார்த்துக்கொண்டோ இருக்கக் கூடாது.

மரியாதை தரும் வார்த்தைகளை மட்டுமே பேச வேண்டும்.

இடையிடையே தேவைப்படும் இடங்களில், 'நன்றி’ (Thank you), தயவுசெய்து (Please) போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும்.

தொடர்புகொள்ளும் நபர் கூறவந்த கருத்தை முழுமையாகக் கேட்ட பின் பதில் கூற வேண்டும். கூறும் தகவலைக்  காதில் வாங்காதது போல இருக்கக் கூடாது.

இடையிடையே குறுக்கிட்டுப் பேசுதல் கூடாது.

கோபமாகப் பேசுதல் கூடாது. நயமான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பொய்யான தகவல்களைக் கூறுவதை  முற்றிலும் தவிர்க்கவும்.

மற்றவர் கூறும் தகவல் சரி என்றால், ஏற்றுக்கொள்ள வேண்டும். நமது கருத்துதான் சரி என்று பேசக் கூடாது. அவர் கூறும் தகவல் பிழையானது என்றால், அதைப் பண்புடன் மறுத்துக் கூற வேண்டும்.

வயதில் இளையவரிடம் பேசும்போது, அவர்களுக்குப் புரியும் விதமாகப் பேச வேண்டும்.

உரையாடும்போது, முக பாவனை மற்றும் உடல் அசைவுகள் அவசியம். ஒருவரின் தோற்றத்தையோ, அவர் பேசும் குரல் பாவனையையோ பழித்துப் பேசக் கூடாது.

விடைபெறும்போது, 'நன்றி, மீண்டும் சந்திப்போம்’ என்று அன்பான வார்த்தைகளில் பேசுதல் வேண்டும்.

தி.ஆனந்த்,

ஊ.ஒ.ந.நி.பள்ளி,

காளாச்சேரி மேற்கு, நீடாமங்கலம்.

 நூலகத்தை எவ்வாறு பயன்படுத்தலாம்?

அறிஞர்கள் சந்திக்கும்போது, என்ன புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டுக்கொள்வார்கள்.

ஒவ்வொரு புத்தகமும் எண்ணற்ற பாதைகள்கொண்டது. அந்தப் பாதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் அறிவு. ஓர் உணர்ச்சி தருபவை.

மரத்தைப் பாருங்கள். ஒரு கிளை இன்னொரு கிளைக்கு அழைத்துச்செல்லும். அந்தக் கிளை, இன்னொரு கிளைக்கு அழைத்துச்செல்லும்.  அது போல ஒவ்வொரு புத்தகத்திலும் உள்ள ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு கிளை. அதன் மீது பயணப்பட்டால், அந்தப் புதையலை அடைந்துவிடலாம்.

புதையலா? என்ன அது என்று ஆச்சர்யப்பட வேண்டாம். புதிதாக ஒன்றை நாம் கற்றுக்கொள்வதே புதையல்தான்.

ஒருவர் வழியாக இன்னொருவரைத் தெரிந்துகொள்ள முடியும். ஒரு சொல், ஒரு வரலாற்றை, வாழ்வைக் காட்டிவிடும். எப்படி?

'தில்லையாடி வள்ளியம்மை’ பாடம் நடத்தினேன். அந்தப் பாடத்தில் சில வார்த்தைகள் வருகின்றன. அதாவது, கிளைகள் வருகின்றன.  

தில்லையாடி, நெசவுத் தொழில், தென்னாப்பிரிக்கா, ஜோகன்ஸ்பர்க், வால்க்ஸ்ரஸ்ட், இந்தியன் ஒப்பீனியன் இதழ், சத்தியாகிரகம், நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கடையூர், தில்லையாடி வள்ளியம்மை மாளிகை, தில்லையாடியில் சிலை ஆகிய வார்த்தைகள் வருகின்றன.  இந்த வார்த்தைகளைப் பற்றி எழுதி வர மாணவர்களை நூலகத்துக்கு  அனுப்பினேன்.

நூலகத்தில், வாழ்க்கை வரலாறு அடுக்கில், தில்லையாடி வள்ளியம்மை பற்றிய செய்தி கிடைத்தது. வரலாறு அடுக்கில், தென்னாப்பிரிக்கா பற்றியும், வரைபடம் அடுக்கில் தென்னாப்பிரிக்காவின் வரைபடம், ஜோகன்ஸ்பர்க், வால்க்ஸ்ரஸ்ட் போன்ற இடங்களை அறிந்தார்கள். அதே அடுக்கில், தமிழ்நாடு பற்றிய புத்தகத்தில், நாகப்பட்டினம் பற்றிய வரலாற்றையும், பரிகாரத் தலங்கள் புத்தகத்தில், திருக்கடையூர் பற்றியும் மாணவர்கள் அறிந்தனர். இதில், தில்லையாடியைப் பற்றியும் சிலையைப் பற்றியும் வாசித்தார்கள்.

வாழ்க்கைப் பயன்பாடு பகுதியில், நெசவுத் தொழில் பற்றிய நூலும் கிடைத்தது. மொழிபெயர்ப்புப் பகுதியில், தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம் என்னும் நூலும் கிடைத்தது.  நூலகத்தில் உள்ள இணையத்தின் வழியாக, வால்க்ஸ்ரஸ்ட் ஊரின் மொழி, பரப்பளவு, மக்கள் தொகை, ஊராட்சிகள், இனப் பாகுபாடு, ஊரின் அமைப்பு ஆகியவற்றையும் பார்க்க முடிந்தது.  ஒவ்வொரு மாணவர் குழுவுக்கும் கொடுக்கப்பட்ட செயல்பாட்டை அவர்கள் செம்மையாகச் செய்து முடித்தார்கள்.

மாணவர்களே, நூலகம் என்பது புத்தகங்களின் வைப்பு அறை அன்று. அது, நீங்கள் சுவைக்கக் காத்திருக்கும் தேன் அடை. வெவ்வேறு துறைகள் பற்றிய நூல்களின் அணிவகுப்பு. உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது.

ரா.தாமோதரன்,

அ.மே.நி.பள்ளி, மெலட்டூர், தஞ்சாவூர் மாவட்டம்.

மாணவர் கடமைகள்!

பள்ளிக்கு உரிய நேரத்தில் வருதல், சீருடை அணிந்து வருதல், விடுப்பு எடுக்காமல் வருதல், காலை வணக்கம் தெரிவித்தல், ஆசிரியருக்கு கீழ்ப்படிந்து நடத்தல் போன்ற தினமும் கடைப்பிடிக்கும் கடமைகளைப் போலவே, இன்னும் சில கடமைகளை உணர்ந்து பின்பற்றினால்,  நாம் உயர்வதுடனும் நாடும் வளம் பெறும்.

காலைச் செயல்பாட்டில், இயற்கையை உற்றுக் கவனித்து, பதிவேட்டில் பதிய வேண்டும். தான் பார்த்ததில் புதிய விஷயங்கள் அல்லது மாற்றங்களை ஆசிரியர், நண்பர்களுடன் விவாதிக்கலாம். மாற்றங்களுக்கான காரணங்களை ஆராய்ந்து, இயற்கையின் சமன் குலையாமல் பாதுகாக்க, தேவையான விஷயங்களைப் பின்பற்றலாம். உதாரணம்: பாலித்தீன் இல்லாத பள்ளி வளாகம், இயற்கை உரம் தயாரித்தல், தூய்மையான பள்ளி வளாகம்.

ஆசிரியர்கள் கொடுக்கும் புராஜெக்ட் எனும் செயல்திட்டத்தை மாணவர்கள் தாங்களாகவோ, நண்பர்களுடன் இணைந்தோ தயாரிக்க வேண்டும். இது, உங்களின் தனித்தன்மையை வெளிப்படுத்துவதற்கும் சுயசிந்தனை வளர்வதற்கும் ஊக்க மருந்தாக இருக்கும்.

மாணவர்கள் குழுவாக இணைந்து செயல்படும்போது, ஒவ்வொருவரும் தம் கருத்துக்களை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுக்க வேண்டும். பிறர் கூறுவதை ஏற்றுக் கொள்வதால், நம் தவறைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் கூறும் கருத்து தவறானதாக இருந்தால், அதைச்  சுட்டிக்காட்டி, பொருத்தமான கருத்தை எடுத்துரைக்க வேண்டும். குழுவில் செயல்படாமல், பெயர் அளவில் இருப்பதால், நம் சிந்தனை வளராது. தயக்கம் ஏற்பட்டு, துணிந்து பேசும் திறன் அற்று, போட்டியான உலகத்தில்  புறக்கணிக்கப் படுவோம். எடுத்துரைக்கும் பண்பு, நாளடைவில் மேடை பயத்தை நீக்கும். குழுவில் இணைந்து செயல்படுவதால், பாராட்டத்தக்க பண்பு வளரும்.

மாணவர்கள், அனைத்து விதமான திறன்களையும் முழுமையாக அடையும் வகையில் செயல்வழிக் கற்றல் கல்வி உள்ளது. ஆகவே, பிறர் கருத்துக்கு மதிப்பளித்தல், இணைந்து கற்றல், குழுவில் கற்றல், தானே கற்றல், விதிகளை மதித்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது கடமையாகும்.

க.சரவணன்,

டாக்டர் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி, மதுரை.

தொழில்நுட்பமா...தொல்லை நுட்பமா?

ஒவ்வொரு காலகட்டத்திலும் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, பிரமிப்பையே தருகின்றன. அதில், நன்மையும் தீமையும் இணைந்தே வருகின்றன.

நன்மைகள்:

1. பள்ளியில் தரப்படும் செயல்பாடுகளுக்கு, நூலகங்களில் கிடைக்காத தகவல்களை இணையம் மூலம் பெறுகின்றனர்.

2. தேர்வு முடிவுகளை உடனுக்குடன் பெறுகின்றனர்.

3. பாடப் புத்தகத்தில் பக்கங்கள் கிழிந்துவிட்டால், நண்பர்களிடம் போன் மூலம் பாடத்தைத் தெரிந்துகொள்கின்றனர்.

4. பாடம் அல்லாத பொதுஅறிவுத் தகவல்களை, படத்துடன் தெரிந்துகொள்கின்றனர்.

5. கணினி மூலம் புதிய முறையில் ஓவியம் வரையக் கற்றுக்கொள்கின்றனர்.

தீமைகள்:

1. எப்போதும் கணினி முன்பு அமர்ந்து இருப்பதால், ஓடி ஆட முடியாமல் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. சிறு வயதிலேயே கண் கோளாறு, அதிக உடல் எடை போன்றவையால் அவதிப்படுகின்றனர்.

2. நண்பர்களுடன் பேசும் பழக்கம் குறைந்துவிடுவதால், நெருக்கமான நண்பர்கள் கிடைக்காமல் போய்விடுகின்றனர்.

3. பாடப் புத்தகம் அல்லாமல் வேறு புத்தகங்கள் படிக்கும் பழக்கமும் இல்லாமல் போய்விடுகிறது.

4. கணினி மற்றும் செல்போனில் மாணவர்களுக்குத் தேவையற்ற செய்திகள் மற்றும் படங்கள் வருவதால், மனரீதியாகப் பாதிக்கப்படுகின்றனர்.

5. தொழில்நுட்பம் தெரியாத பெரியவர்களிடம் இவர்கள் காட்டும் மரியாதை குறைகிறது.

6. எல்லாவற்றையும் இணையத்தில் தேடிக் கொள்ளலாம் என்ற மனப்போக்கால், ஞாபகசக்தி குறைந்துவிடுகிறது.

7.அறிமுகம் இல்லா நபர்களுடன் பழக நேர்வதால், அவர்களுக்கு பல சிக்கல்கள் வருகின்றன.

நன்மைகளை அதிகரித்து, தீமைகளை இல்லாமல் செய்யும் விதத்தில்  தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதே மாணவர்களின் வளர்ச்சிக்கு நல்லது.

டி.விஜயலட்சுமி,

அ.ஆ.மே.நி.பள்ளி,

கண்ணமங்கலம்.

உடலைக் காப்போம்!

ப்ரேயர் நடைபெறும்போதே, சில மாணவர்கள் மயங்கி விழுவதைப் பார்த்திருப்பீர்கள். நாம் என்னதான் கரைத்துக் குடித்து பள்ளிக்குச் சென்றாலும், நம் உடல் ஆரோக்கியமாக இல்லையென்றால் என்ன பயன்?

நாம் உண்ணும் உணவு, நிறைய இருக்க வேண்டும் என்பதைவிட, சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிக கலோரிகள் உள்ள உணவுகளைத் தவிர்க்க  வேண்டும். பச்சையாகச் சாப்பிடக்கூடிய காய்கறிகளை அடிக்கடி சாப்பிடலாம்.

நண்பர்கள் விளையாடக் கூப்பிடுகிறார்கள் என்று, அவசரம் அவசரமாக சாப்பிடக் கூடாது. மெள்ள மென்று தின்ன வேண்டும். ஃபாஸ்ட்ஃபுட் உணவை அறவே ஒதுக்குங்கள். சாப்பிட ஆசையாக இருக்கும். ஆனால், மனதைக் கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள்.

உணவைப் போல நமது பழக்கங்கள் உடல்நலத்தைக் காக்கக்கூடியதே. விடியற்காலையில் எழுந்துவிடுவதே உடலுக்கு நாம் செய்யும் முதல் நல்ல விஷயம்.

தேர்வுக்குச் செல்லும் மாணவர்களிடம், தேர்வுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு பயம், பதற்றம் போன்றவை ஏற்படும். அதைத் தவிர்க்க, 15 நிமிடங்கள் யோகா,  எளிய உடற்பயிற்சி செய்து, மனதை ஒருமுகப்படுத்தி, பயத்தைப் போக்கிக்கொள்ளலாம்.

தேர்வுக்குச் செல்லும் கடைசி நேரம் வரை படித்துவிட்டு, சாப்பிடாமல் அவசர அவசரமாகச் செல்வது உண்டு. அதைத் தவிர்க்க, தேர்வுக்குச் செல்வதற்கு 30 நிமிடங் களுக்கு முன்பு, எளிதில் செரிமானம் ஆகும் உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆவியில் வேகவைத்த உணவு வகைகள் நல்லது. எண்ணெய் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

தேர்வு நேரங்களில் அதிக நேரம் கண் விழித்துப் படிப்பதால், செரிமான சக்தி குறைந்துவிடும். ஆகையால், எளிதில் ஜீரணிக்கும்  உணவே சிறந்தது.

பழங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும். பழங்கள் அதிகமாக வாங்க முடியாதவர்கள், காலை உணவுக்கு முன்பு ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம்.

பள்ளியில் நடைபெறும் சுகாதார விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபெற வேண்டும். மனமும் உடலும் ஆரோக்கியமாக இருந்தால்தான் எதையும் வெற்றிகொள்ள முடியும்.

தி.முத்துமீனாள்,

சேர்மன் மாணிக்கவாசகம் ந.நி.பள்ளி,

தேவகோட்டை.

தேசிய பசுமைப் படை!

'தேசிய பசுமைப் படை’ என்ற அமைப்பு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் திட்டம். ஆங்கிலத்தில் National Green Corps என அழைக்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் 1,20,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பசுமைப் படையின் சுற்றுச்சூழல் மன்றத்தில், 30 முதல் 50 மாணவ, மாணவியர்கள் இருப்பார்கள். பல்லுயிர் பாதுகாப்பு, தண்ணீர் பாதுகாப்பு, ஆற்றல் பாதுகாப்பு, கழிவுகள் மேலாண்மை, திட்டமிட்ட நிலப் பயன்பாடு, இயற்கை வள மேலாண்மை போன்றவற்றில் மாணவர்களின் பங்கு முதன்மையானது. பொதுமக்கள் கூடும் இடங்களில் இந்தப் படையில் உள்ள மாணவர்கள், நீரைத் தகுந்த முறையில் பயன்படுத்துதல், தாவர வளர்ப்பு, உயிரி மட்கும் பொருள்களை உருவாக்குதல் போன்றவற்றை எடுத்துரைப்பார்கள்.

குறிக்கோள்கள்:

பாலித்தீன் உபயோகத்தால் ஏற்படும் பிரச்னைகள், காற்று மண்டலம் மாசு அடைவதைத் தடுக்க மரக்கன்றுகள் நடுதல், மட்கும் மட்காத குப்பைகள் நிர்வாகம், குண்டு பல்புக்குப் பதிலாக சுருள் பல்பு மற்றும் LED பல்புகளைப் பயன்படுத்தி மின்சாரம் சேமித்தல், மின்சாரக் கட்டணத்தைக் குறைத்தல் உள்ளிட்ட விழிப்புஉணர்வை மக்களிடம் கொண்டுசேர்த்தல்.

சுற்றுச்சூழலை உற்றுநோக்கல், களப்பயணம் செய்தல், உயிர்கள் கணக்கெடுப்பு, ஆராய்தல், பாதுகாப்பு போன்றவற்றில் மாணவர்கள் ஈடுபடுதல். திட்டச் செயல்பாடுகள் மூலம் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில்  ஆர்வம் உண்டாக்குதல்.

மாணவர்கள், இந்த இணைச் செயல்பாட்டின் மூலம் சமுதாயத்துக்கு  நன்மை செய்ய முடியும்.

ப.குணசேகரன், ஊ.ஒ.ந.நி.பள்ளி,

பள்ளப்பட்டி, தருமபுரி.

சாரணர் இயக்கம்!

சாரணர், சாரணியர் இயக்கம், கல்வி இணைச் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது,  'பேடன் பவுல்’ என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. சமயப்பற்று, நாட்டுப்பற்று, உலக சகோதரத்துவம், பொதுச்சேவை, விதிகளை மதித்து நடத்தல், சமூக மேம்பாட்டுக்கு உழைத்தல், நாட்டுக்குத் தகுந்த நல்ல குடிமகனாகத் தன்னை உருவாக்கிக்கொள்ளல் போன்றவையே சாரண அமைப்பின் அடிப்படைக் கொள்கைகள்.

சாரணிய இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடு 'எதற்கும் தயாராக இரு’ என்பதாகும்.

ஒரு சாரணர், தனது வாக்குறுதியினை எடுக்கும் முறையே வித்தியாசமானது. தனது கட்டை விரலையும் சுண்டு விரலையும் மடித்து, மற்ற மூன்று விரல்களையும் விரித்து (நேராக நிமிர்த்தி ஒட்டியவாறு), வாக்குறுதி எடுப்பார்கள்.  

''என் சமூகத்துக்கும் நாட்டுக்கும் என் கடமையைச் செய்வேன் எனவும், எந்தக் காலத்திலும் பிறருக்கு உதவி புரியவும், சாரண விதிகளுக்குப் பணிந்து நடப்பேன் எனவும், என் கௌரவத்தின் மீது சத்தியம் செய்கிறேன்'' என வாக்குறுதி பெறுவர்.

மாணவர்களை, சமூகத்தின் நலனே தனது நலன் எனக் கருதித் தொண்டுசெய்வதற்கு, சாரண இயக்கம் அர்ப்பணித்துள்ளது.

சாரணிய இயக்கத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டு, உயர் பதவிகளில் வரலாறு படைத்தவர்கள் பலர். நீல் ஆம்ஸ்ட்ராங்க் மற்றும் பில்கேட்ஸ் போன்றவர்கள் சாரணர் இயக்கத்தில் இருந்தவர்களே.

இளம் செஞ்சிலுவைச் சங்கம்

மாணவர்களுக்கு மனிதநேயத்தை வளர்க்கும் கல்வி இணைச்செயல்பாடு இது.

நாடு, இனம், மதம், வகுப்பு, நிறம், அரசியல் மற்றும் கருத்து அடிப்படையில் வேறுபாடு காட்டாமல், மனித உயிர்களையும் உடல் நலத்தையும் பாதுகாத்தல், மனிதர்களுக்கு மதிப்பு அளித்தலை உறுதிப்படுத்துதல், மனிதர்களின் துன்பங்களைத் தடுத்தல் ஆகிய கொள்கைகளை மாணவர்கள் மத்தியில் உருவாக்கவே இந்தச் சங்கம் செயல்பட்டுவருகிறது.

பள்ளித் தலைமையாசிரியரின் மேற்பார்வையில் செஞ்சிலுவைச் சங்கத்தில் ஈடுபாடு உடைய பள்ளி ஆசிரியர் ஒருவரால் குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

1863-ம் ஆண்டு ஜெனிவாவில், பன்னாட்டு செஞ்சிலுவை இயக்கமாக 'ஜீன் ஹென்றி டூனான்ட்’(Jean Henri Dunant) என்ற சுவிட்சர்லாந்து வர்த்தகரால் தோற்றுவிக்கப்பட்ட இந்தச் சங்கம், 97 மில்லியனுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களால் வளர்ந்து நிற்கிறது.

பன்னாட்டு செஞ்சிலுவை இயக்கம், 1917, 1944 மற்றும் 1963 என மூன்று முறை அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ளது.

சங்கத்தின் அதிகாரப்பூர்வக் கோட்பாடுகளாக 1986-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டவை...

மனிதாபிமானம், பாரபட்சமின்மை, நடுநிலைமை, சுதந்திரத்தன்மை, தொண்டு புரிதல், ஒற்றுமை, பரந்த மனப்பான்மை ஆகியன.

சமூகக் கடமையும் மனிதநேயத்தையும் வளர்க்கும் இந்த இணைச் செயல்பாடுகளில் மாணவர்கள் பங்கேற்பதால், மேலும் சிறப்பு பெறுவார்கள்.

ஜெ.திருமுருகன்,

ஊ.ஒ.ந.நி.பள்ளி, மூலத்துறை, காரமடை.

மன்றங்களின் வழியே இணைச் செயல்பாடு!

இணைச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, மன்றச் செயல்பாடுகளை பள்ளியில் ஊக்குவிக்கலாம்.

இலக்கிய மன்றம்: தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே இலக்கிய மன்றங்களைத் தொடங்கி, மாணவர்களின் தொடர்புகொள்ளும் திறனை வளர்க்கலாம். இது, வாழ்வியல் திறனில் முக்கியமானது. மாணவர்களின் கவிதை, கட்டுரை, பேச்சுத் திறன்களை வளர்க்கலாம். நாடகத் திறன், இசைத் திறன் ஆகியவற்றை வளர்த்தலும்  அவசியமாகும்.

கணிதம் மற்றும் அறிவியல் மன்றங்கள்:

கணித மன்றங்களின் மூலம், வாழ்வியல் கணிதத்தை செயல்பாடுகளின் மூலம் மாணவர்களுக்கு கண்காட்சி நடத்தி விளக்கலாம். எளிய கணித ஆய்வகங்களை, குறைந்த செலவில் மாணவர்களே உருவாக்கச் செய்யலாம்.

அறிவியல் பாடத்தை எளிமையாக்க, கற்றல் உபகரணங்களைக் குறைந்த செலவில் மாணவர்களே உருவாக்குதல் (No cost and low cost material), புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆர்வத்தை ஊக்குவித்தல். உதாரணமாக, விவசாயத் தொழிலை ஊக்குவிக்க என்னென்ன கருவிகளை நீ கண்டுபிடிப்பாய்? மிதிவண்டிப் பயன்பாட்டை அதிகரிக்க என்ன செய்யலாம்? போன்ற கேள்விகள் மூலம் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திடலாம்.

தங்கள் படைப்புகளை பவர்பாய்ன்ட் (Powerpoint) மூலம் தயார்செய்து விளக்கலாம்.

கலாசார விழாக்கள் மற்றும் தேசிய விழாக்கள்:

பள்ளிகளில், தேசிய விழாக்கள் மற்றும் கலாசார விழாக்கள் கொண்டாட, ஊக்குவிக்க வேன்டும்.  தேசப்பற்றை வளர்த்தல், தேசத் தலைவர்களின் வரலாற்றை அறியச் செய்தல், தேசத் தலைவர்களாக மாறுவேடப் போட்டிகள் நடத்தி மாணவர்களுக்குள் தன்னம்பிக்கையை வளர்க்கலாம். விழா ஒருங்கிணைப்பு, விழாக் குழு அமைத்தல், விழாவுக்கான வேலைகளை மாணவர்கள் தாமாக பிரித்துக்கொள்ளுதல் சிறப்பு. விழா தொகுப்புரையும் ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் செய்யும்போது, மாணவர்களுக்குள் ஒருங்கிணைக்கும் திறன், சுயமதிப்பு மற்றும் தொடர்புகொள்ளும் திறனை வளர்க்கலாம்.

கலாசார விழாக்கள்:

பள்ளிகளில், மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், விழாக்களைக் கொண்டாடலாம். உதாரணமாக, சமத்துவப் பொங்கல். தீபாவளி, கிறிஸ்துமஸ், பக்ரீத் ஆகிய பண்டிகை சமயங்களில், ஆசிரியர்களுக்கும் உறவினர்களுக்கும் வாழ்த்து அட்டை தயாரிக்கச்சொல்லி வழங்கலாம்.

விழிப்புஉணர்வு தினங்கள்:

தேசிய தினங்கள், மாநில தினங்களை சிறப்பாகக் கொண்டாடுதல், ஆசிரியர் தினம், மாணவர்கள் தினம், தியாகிகள் தினம், கல்வி வளர்ச்சி நாள், அன்னையர் தினம், மருத்துவ விழிப்பு உணர்வு தினங்களின் அவசியத்தை மாணவர்கள் இறை வணக்கக் கூட்டத்தில் பேசலாம்.

இந்த விழாக்களைக் கொண்டாடுவதன் மூலம், மாணவர்களின் தனித்திறன்கள் வளர்க்கப்படுவதுடன், நாளைய சமூகத்தில் ஒழுக்கத்துடன் வாழ வழிவகைசெய்யலாம்.

  ஸ்ரீதிலீப்,

அ.உ.நி.பள்ளி, சத்தியமங்கலம்ச்ர்

கலைகளும் விளையாட்டுகளும்!

நாட்டுப்புறக் கலைகள்:

நாட்டுப்புறக் கலைகள் பொதுவாக, நிகழ்த்துக் கலைகள் மற்றும் கைவினைக் கலைகள் என இரு வகைப்படும். இந்தக் கலைகளில் விருப்பம், திறமை ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்களை மதிப்பிடலாம்.

நிகழ்த்துக் கலைகள்:

கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், சிலம்பாட்டம், வில்லுப்பாட்டு, தெருக்கூத்து, தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், புலியாட்டம் என வட்டாரத்துக்கு ஏற்ற ஆட்டங்களை உரிய ஒப்பனையுடன் நிகழ்த்திக் காண்பிக்கச் செய்து, மதிப்பீடு செய்யலாம். இது, நிகழ்த்துபவருக்கு மட்டுமின்றி ஆசிரியர், பிற மாணவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும்.

நடிக்க விரும்பாத மாணவர் களுக்கு, நிகழ்த்துக் கலைகளில் உள்ள பாடல்களைச் சேகரிக்கும் பணி, படங்கள் மற்றும் செய்திகளைத் தொகுக்கும்  பணியை வழங்கலாம். இவற்றைக் கட்டாயப்படுத்தாமல், மாணவர் களின் விருப்பத்தோடு  செய்ய வேண்டும்.

கைவினைக் கலைகள்:

களிமண் பொம்மைகள் செய்தல், கூடை முடைதல், ஒருமுறை மட்டும் பயன்படுத்தி எறியும் பொருள்களில்  கலைப் பொருள்கள் செய்தல். (தேநீர் கப், ஸ்ட்ரா, மருந்து பாட்டில்கள், பேஸ்ட் குழாய் போன்றவை).

கோரை, பிரம்பு, கம்மந்தட்டை, சோளத்தட்டை, நாணல், இலைகள், பூக்கள், தென்னை ஓலை போன்ற இயற்கைப் பொருள்களில், கைவினைப் பொருள்கள் செய்யலாம். இதை, கிராமத்து மாணவர்கள் மிக எளிதாகச் செய்துவிடுவர். பூவரச இலையில் ஊதல், தென்னை ஓலையில் பாம்பு உருவம், கைக்கடிகாரம்,  அலங்காரப் பூ போன்ற கைவினைப் பொருள்களும் செய்யலாம். கம்மந்தட்டையில் அழகான சிறு கூடை, சோளத்தட்டையில் பொம்மைகள் செய்து, வகுப்பறையில் காட்சிப்படுத்தி மதிப்பிடலாம்.

நகரத்து மாணவர்களுக்கு, களிமண்ணுக்குப் பதில், கோதுமை மாவினால் பொம்மைகள் செய்யக் கூறலாம். மெழுகுவத்தியை உருக்கி, வார்ப்பு உருவங்கள் செய்தல், ஒயர் கூடை, மணிகளால் செய்யும் கலைப்பொருள்கள் என மாணவர்களின் திறமை, ஆர்வத்துக்கு ஏற்ப   செய்யச் சொல்லலாம். கலைக்கழகப் போட்டிகளின்போது, இத்தகைய படைப்புகளை சிறப்பாகச் செய்தவர்களை போட்டியில் பங்கேற்க ஊக்கப்படுத்தலாம்.

மரபு விளையாட்டுகள்:

மரபு விளையாட்டுகள் மூலம் குழந்தைகளிடம் தோழமை உணர்வு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, அச்சமின்மை, நெருக்கடிகளை எதிர்கொள்ளும் திறன், சமயோசித அறிவு போன்ற நற்பண்புகள் வளரும். அவரவர் விரும்பும் மரபு விளையாட்டுகளை விளையாடவைத்து மதிப்பிடலாம்.

சடுகுடு, கள்ளன் காவலன், பம்பரம், கோலி போன்ற விளையாட்டுகள் மாணவர்களுக்கு ஏற்றது. ஏழாங்காய், திம்பி, ஒரு குடம் தண்ணி ஊற்றி, கிச்சுக்கிச்சு தாம்பாளம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளை மாணவிகள் விளையாடலாம்.  விளையாட்டுப் பாடல்களை பாடக் கேட்டும் மதிப்பிடலாம். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அவர்களின் திறமைக்கு ஏற்ற செயல்பாடுகளைச் செய்யச் சொல்லி, மதிப்பிடலாம். விளையாட்டுப் பாடல்களைச் சேகரிக்கும் பொறுப்பையும் அளிக்கலாம்.

                         இரத்தின புகழேந்தி

அரசு உயர்நிலைப் பள்ளி,

அன்பு மாணவர்களே...

வணக்கம்...

தமிழ்நாட்டுப் பள்ளிகளில், சிறப்பான நடைமுறையில் இருக்கும் சி.சி.இ.எஃப்.ஏ பாடத் திட்டத்துக்கு, சுட்டி விகடன் தொடர்ந்து உறுதுணையாக இருந்துவருகிறது. இதோ, சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்த இணைப்பின் மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.

ஒவ்வொரு மாணவரின் திறமை, தனித்தன்மை, கற்பனைத் திறனுக்கு வகை செய்யும் கல்வி இணைச் செயல்பாடுகள் இதில் உள்ளன. ஆசிரியர்களுக்கு சிறந்த கையேடாகவும் இந்த இணைப்பு இருக்கும். இதன் உருவாக்கத்தில் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி.

மாணவர்களுக்கு ஒரு தகவல். எஃப்.ஏ மற்றும் எஸ்.ஏ பகுதிகளை உள்ளடக்கிய கல்விசார் செயல்பாடுகளில், ஒரு மாணவர் பெறும் கிரேடுக்கும், கல்வி இணைச் செயல்பாடுகளில் அந்த மாணவர் பெறும் கிரேடுக்கும் வேறுபாடு உண்டு. அதாவது, ஒரு மாணவர் வழக்கமான தேர்வுகளில் அசத்த முடியாவிட்டாலும், கல்வி இணைச் செயல்பாடுகளில் 'ஏ’ கிரேடு வாங்கி அசத்த முடியும்.

கல்வி இணைச் செயல்பாடுகளை மாணவர்கள் முழுமையாகத் தெரிந்துகொண்டு, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், ஆசிரியர்கள் கூடுதல் 'டிப்ஸ்’ பெறவும் வாழ்த்துகள்.

                                              அன்புடன்,

                                               ஆசிரியர்.

தொகுப்பு: வி.எஸ்.சரவணன்.

படங்கள்: பா.அருண், சி.தினேஷ்குமார், அ.பார்த்திபன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick