Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கம்பும் சோளமும் ரேஷனில் கொடுக்கணும்!

''தமிழக அரசு நடத்தும் ரேஷன் கடைகளில் கம்பு, சோளம் போன்றவற்றையும் சிறுதானியங்களையும் கொடுக்கணும். அப்படி செய்தால், விவசாயிகள் வாழ்வும் செழிக்கும். நமது பாரம்பரிய உணவுகளும் மீட்கப்படும். மக்களும் ஆரோக்கியமாக இருப்பாங்க'என்று மிகப் பெரிய சமூக விஷயத்தைச் சொல்லும் மாரியப்பன், அரியலூர் மாவட்டம், தேவாமங்கலம் அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார். ஆண்டுதோறும் நடத்தப்படும் தேசிய அறிவியல் மாநாட்டில், 2014-ம் ஆண்டின் சிறந்த குழந்தை விஞ்ஞானிகள் பட்டத்தைத் தனது குழுவுடன் பெற்று வந்திருக்கிறார்.

''இந்தியாவில் உள்ள பிரச்னைகள், மாணவர்கள் பார்வையில் அவற்றுக்கான தீர்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் போட்டி நடக்கும். இதுக்காக,   'காலநிலை மற்றும் தட்பவெப்பநிலை மாறுபாட்டால் உள்ளூர் சாகுபடியில் ஏற்படும் மாற்றங்கள்’ என்ற தலைப்பில் கள ஆய்வில் இறங்கினோம். என்னோடு, லோகேஷ்வரன், கார்த்தி, புவனேஸ்வரி, ஷர்மிளா  ஆகி்யோர் இந்த ஆய்வுப் பணியில் ஈடுபட்டாங்க' என்றார் மாரியப்பன்.

''பாரம்பரியப் பயிர்களின் நன்மையும் தற்போதைய நிலையும், ரசாயன உரங்களால் ஏற்பட்டிருக்கும் விளைவுகள், இன்றைய கிராம மக்களின் ஆரோக்கியம் என, எங்கள் ஆய்வை மூன்று விஷயங்களாகப் பிரிச்சுக்கிட்டோம்' என்கிறார், இந்தக் குழுவைச் சேர்ந்த லோகேஷ்வரன்.

பள்ளியின் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்று, விவசாயிகள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.

ஆய்வில் ஈடுபட்ட மாணவர்களில் ஒருவரான கார்த்தி, ''நான் கிராமத்திலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும், இப்பதான் சார் முதன்முதலாக விவசாயத்தில் உள்ள கஷ்டங்களை உணர்ந்தேன். எங்கள் ஆய்வின்போது, பல கிராமங்களில் கர்ப்பிணிப் பெண்கள் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் இருப்பதைத்  தெரிஞ்சுக்கிட்டோம். அதனால், பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாகவும் நோய் எதிர்ப்புசக்தி இல்லாமலும் இருப்பதைப் புரிஞ்சுக்கிட்டோம். இதுக்கு, மாறிய உணவுப் பழக்கமே காரணம்னு  தெரிஞ்சது' என்கிறார்.

ஆய்வில் ஈடுபட்ட மாணவிகளில் ஒருவரான  ஷர்மிளா, ''ஒரு காலத்துல இந்தப் பகுதி முழுக்க கம்பு, சோளம், வரகு போன்றவை விளைஞ்சிருக்கு. இப்போ, பாதி இடம் கருவைக்காடா இருக்கு. இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைஞ்சு, கடுமையான வறட்சி உண்டாகுது. விவசாயிகளிடம் பேசும்போது, 'இப்போ என்ன பயிர் பண்றீங்க? 10 வருஷங்களுக்கு முன்னாடி விளைச்சல் எவ்வளவு? இப்போ எவ்வளவு போன்ற தகவல்களைச் சேகரிச்சோம். இதுக்காக 200 விவசாயிகளைச் சந்திச்சோம். விவசாய அலுவலகங்களுக்கும் விசிட் பண்ணினோம்' என்று பிரமிப்பூட்டுகிறார்.

தாங்கள் எடுத்த ஆய்வு மற்றும் புள்ளிவிவரங்களைக் காட்டினார்கள்.

1990-களில் தேவாமங்கலம் கிராமத்தில் மட்டும் கம்பு 100 குவின்டால், கேழ்வரகு 120 குவின்டால், வரகு 160 குவின்டால், பயறு வகைகள் 150 குவின்டால் விளைஞ்சிருக்கு. இப்ப 2014ல் ஒவ்வொன்றிலும் 20 குவின்டால் விளைவதே பெரிய சாதனையாக இருக்கிறது.

''இதுக்குக் காரணம், இயற்கைத் தொழுஉரம் பற்றிய விழிப்புஉணர்வு இல்லாமல், ரசாயன உரங்களை அளவுக்கு அதிகமாப் பயன்படுத்தி இருக்காங்க. அது எவ்வளவு தப்புனு சொன்னோம். ஏதோ சின்னப் பசங்க பேசுறாங்கனு அலட்சியப்படுத்தாமல் ரொம்ப அக்கறையோடு கேட்டுக்கிட்டாங்க. அதுவே, எங்களுக்கு விருது வாங்கின மாதிரி இருந்துச்சு' என்கிறார், குழுவின் மற்றொரு மாணவி புவனேஸ்வரி.

 

இவர்களின் ஆய்வுக்குத் துணையாக இருந்த ஆசிரியர் செங்குட்டுவன், ''வீடு விடாமல் போய் பொதுமக்களிடம் பேசினோம். சிறுதானியங்களைப் பயன்படுத்தும் குடும்பங்களில் சர்க்கரை நோய், லோ பிரஷர், ஹை பிரஷர், தைராய்டு  பிரச்னைகள் ரொம்பவே குறைவா இருக்கு. அரிசி சாதம் சாப்பிடும் குடும்பங்களில், ஒவ்வொருத்தருக்கும் ஒரு பிரச்னை இருப்பது தெரிஞ்சது' என்கிறார்.

இந்த ஆய்வுக்காக 500 குடும்பங்களைச் சந்தித்து, தகவல்களைத் திரட்டி இருக்கிறார்கள். சிறுதானியம் மற்றும் பாரம்பரிய உணவுகளைச் சாப்பிடச் சொல்லியும், பாரம்பரிய உணவுத் தானியங்களைப் பயிரிடச் சொல்லியும்  வலியுறுத்தி இருக்கிறார்கள்.

தங்கள் ஆய்வு மற்றும் புகைப்படங்களை, பெங்களூருவில் நடந்த தேசிய அறிவியல் மாநாட்டில் சமர்ப்பித்து, சிறந்த ஆய்வுக்கான குழந்தை விஞ்ஞானிகள் பட்டத்தை வாங்கியிருக்கிறார்கள்.

''நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பது விவசாயம்தான். அதை, இன்றைய மாணவர்கள் நன்கு உணர வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆய்வை நடத்தினோம். தேசிய அளவில் பரிசு கிடைத்தது என்பதைவிட, சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரியப் பயிர்களின் தேவையை எங்கள் மாணவர்கள் நன்கு உணர்ந்துகொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது' என்கிறார், பள்ளியின் தலைமை ஆசிரியர் வெற்றிச்செல்வி.

''போட்டிக்காக ஆய்வு செய்தோம், பரிசு வாங்கினோம்னு இதோடு விட்டுட மாட்டோம் சார். பாரம்பரிய உணவுகள் பற்றிய விழிப்பு உணர்வுப் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம். எதிர்கால இந்தியாவை ஆரோக்கியமாக மாற்ற எங்களால் முடிஞ்சதைச் செய்வோம்' என்றவர்களின் குரலில் நம்பிக்கை மிளிர்ந்தது.  

எம்.திலீபன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்!
மின்னும் தங்கம்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close