சிக்கன விலையிலே சூப்பர் காற்று!

டபுள் டக்கர் மின்விசிறி!

''டபுள் டக்கர் பஸ் பார்த்திருப்பீங்க... டிரெய்ன் பார்த்திருப்பீங்க, ஃபேன் பார்த்திருக்கீங்களா? எங்க ஸ்கூலுக்கு வந்தா, காற்று வாங்கியபடியே பார்க்கலாம்' என்று உற்சாகமாக அழைக்கிறார்கள், சேலம் மாவட்டம், திப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள்.

இந்தப் பள்ளியின் ஆசிரியர் விஜயகுமார், மாணவர் தமிழ்ச்செல்வன் இருவரும் சேர்ந்து உருவாக்கிய  இரண்டு பக்க மின்விசிறி, இந்திய அளவில் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புக்காக  வழங்கப்படும் 'ஐ கேன்’ (I Can) போட்டியில், ஜீனியஸ் விருதை வென்றுள்ளது.

மின்விசிறியின் ஜில் காற்றை வாங்கியவாறு,  கண்டுபிடிப்பின் ஆரம்ப அத்தியாயத்தைச் சொன்னார்  தமிழ்ச்செல்வன். ''நான் ஏழாம் வகுப்பு படிக்கிறேன். எங்க அறிவியல் ஆசிரியர் விஜயகுமார், உலகத்தில் நடக்கும் ஓர் அறிவியல் புதுமையைப் பற்றி சொல்லிட்டுதான் தினமும் பாடம் நடத்துவார். அதனால், புதுமையா ஏதாவது கண்டுபிடிக்கணும் என்ற ஆசை எங்க எல்லோருக்கும் வந்தது. ஒரு நாள், பள்ளி நூலகத்தில், நண்பர்களோடு படிச்சுட்டு இருந்தேன். அங்கே, டேபிள் மின்விசிறி ஹால் நடுவில் இருக்கும். எதிர்ப் பக்கம் இருந்தவங்களுக்கு காற்று வராததால், தங்கள் பக்கம்  திருப்பினாங்க. அதனால, ரெண்டு குரூப்புக்கு இடையே சின்னதா தகராறு வந்துடுச்சு.' என்றார்.

அப்போது, அங்கே வந்த விஜயகுமார், '' 'இந்த ஒரு பக்க மின்விசிறி 180 டிகிரிதான் சுழலும். நீங்க வேணும்னா 360 டிகிரி சுழலும் மின்விசிறியைக் கண்டுபிடிங்க’ என்று இவர்களிடம் சொன்னேன். உடனே தமிழ்ச்செல்வன், 'சார், நான்  இரண்டு பக்கமும் சுற்றும் மின்விசிறியைக் கண்டுபிடிக்கிறேன்’ என்றார். அவருடைய ஆர்வத்தைப் பாராட்டி, அதுக்கு என்னால் முடிஞ்ச உதவியைச் செய்வதாகவும் சொன்னேன்' என்றார் விஜயகுமார்.

இரண்டு பக்கமும் இறக்கைகளைப் பொருத்துவதால், மின்சாரம் இரண்டு மடங்கு செலவாகுமா?

''ஆகாது. ஒரு சாதாரண மின்விசிறி, ஒரு மணி நேரம் இயங்க எடுத்துக்கொள்ளும் மின்சாரம், 0.0391 யூனிட். தனித்தனியாக இருக்கும் இரண்டு மின்விசிறிகள், ஒரு மணி நேரம் இயங்க எடுத்துக்கொள்ளும் மின்சாரம், 0.0782 யூனிட். ஆனால், இந்த இருபுற மின்விசிறி, ஒரு மணி நேரத்தில் எடுத்துக்கொள்ளும் மின்சாரம், 0.0391 யூனிட்தான். சாதாரணமாக, ஒரு டேபிள் மின்விசிறியின் விலை 2,000 ரூபாய். இதுக்கு 390 ரூபாய்தான் கூடுதலாக ஆகும். 2,390 ரூபாயில் இரண்டு பக்கமும் காற்று வாங்கலாம்' என்று பக்கா புள்ளிவிவரம் சொன்னார் தமிழ்ச்செல்வன்.

''இந்தக் கண்டுபிடிப்பை, பள்ளியிலும் வீட்டிலும் பல மாதங்களாகச் செய்து, பல முறை தோற்று, இறுதியாக உருவாக்கினோம். அதைப் பள்ளிக்கு எடுத்துவந்து, முதன்முதலில் இயக்கிய நாளை மறக்கவே முடியாது' என்கிறார் விஜயகுமார்.

''அகமதாபாத்தில் நடந்த 'ஐ கேன்’ போட்டியில், செயல்படுத்திக் காட்டி, சிறந்த கண்டுபிடிப்புக்கான ஜீனியஸ் விருதை வாங்கினோம். மின்சாரத் தட்டுப்பாடு அதிகம் உள்ள தமிழகத்தில், வீடுகளிலும் அலுவலகங்களிலும் இந்த மின்விசிறியைப் பயன்படுத்துவதன் மூலம் நிறைய மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்' என்ற தமிழ்ச்செல்வனின் குரலில் சந்தோஷத்தோடு சமூக அக்கறையும் எதிரொலித்தன.

கு.ஆனந்தராஜ்

க.தனசேகரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick