சின்னச்சின்ன வண்ணங்கள்!

ஆந்தையும் கோழியும்!

முன்னொரு காலத்தில் கோழியும் ஆந்தையும் நட்பாக இருந்தன. வித்தியாசமான நண்பர்கள்தான். ஆனால், அது நட்புக்கு இடையூறாக இல்லை.

ஒருநாள் ஆந்தை, ''நாம் இருவரும் ஒரு தொழில் செய்யலாம். மலைக்கு அந்தப் பக்கம் இருக்கும் கழுகார் தோப்பில் இருந்து நிறையக் கொட்டைகள், பழங்கள் வாங்கி வந்து இங்கே விற்கலாம்' என்றது.

''என்னால் பறந்து வர முடியாதே' என்றது கோழி.

''அது பிரச்னை இல்லை. நான், உன்னைச் சுமந்து செல்வேன். பழங்கள், கொட்டைகள் வாங்குவதற்கு நம்மிடம் முதலீடாக எதுவும் இல்லை. அதற்குத்தான் என்ன செய்வது என யோசிக்கிறேன்' என்றது ஆந்தை.

''என்னிடம் ரத்தினக் கல் இருக்கிறது. அதை எடுத்துவருகிறேன்' என்றது கோழி.

அடுத்த நாள், கோழியைத் தனது முதுகில் சுமந்துகொண்டு, மலைப்பாதையில் பறக்கத் தொடங்கியது ஆந்தை. நீண்ட தூரம் பறந்ததால் களைப்பு ஏற்பட்டது. ஒரு பாறையில் அமர்ந்து, கொண்டுவந்த உணவைச் சாப்பிடத் தொடங்கினர். அப்போது, பலமாகக் காற்று வீசியது. மலை உச்சியில் இருந்து பாறை, மண் போன்றவை உருண்டு வந்தன. பயத்தில் ஆந்தை சட்டெனப் பறந்துவிட்டது. கோழியோ, பறக்க முடியாமல் ரத்தினக் கல்லை விட்டுவிட்டு, ஒரு பெரிய பாறையின் பின்னால் பதுங்கியது.

சில நிமிடங்களில் கீழே வந்த ஆந்தை ''மன்னித்துவிடு நண்பா, உயிர் பயத்தில் உன்னை மறந்து விட்டேன்' என்று வருத்தத்துடன் சொன்னது.

''உன் நட்புக்கு நன்றி. இனி, என் முகத்தில் விழிக்காதே'' என்ற கோழி, மண்ணைக் கிளறி தனது ரத்தினக் கல்லைத் தேடியது. அது கிடைக்கவில்லை.

'தன்னால்தான் கோழியின் ரத்தினக் கல் பறிபோயிற்று’ என வெட்கப்பட்டு, பகல் முழுதும் மரப்பொந்துகளில் இருந்துவிட்டு, இரவில் மட்டுமே வெளியில் வருகிறது ஆந்தை. கோழியோ, இன்று வரை ரத்தினக் கல்லைத் தேடித்தேடி மண்ணைக் கிளறிக்கொண்டே இருக்கிறது!

அ.பழ.அறிவுக்கனி

சாவறா வித்யா பவன் மெட்ரிக் மே.நி.பள்ளி,

கோயம்புத்தூர்.


ஆறும் கடலும்!

லையில் உற்பத்தி ஆகி, பலவிதமான பள்ளத்தாக்குகளில் விழுந்து, அணைகளில் பரந்து விரிந்து உற்சாகமாக ஓடிவந்த ஆறு, நிறைவாகக்  கடலை நெருங்கும்போது சோகமாக இருந்தது.

அதைக் கண்ட ஒரு மரம், ''ஏன் சோகமாக இருக்கிறாய்?'' என்று கேட்டது.

''நான், வானில் இருந்து தூய்மையாக வந்தவன்; மனிதர்கள் உட்பட பல உயிரினங்களின் தாகத்தைத் தீர்த்தவன்; வனங்களின் செழிப்புக்கு உதவியவன்; நல்ல நீரான என்னை, முழுவதும் உப்பு நீரான கடலுடன் சேர்க்கும் கடவுளை நினைத்தேன். ஏன் இப்படி செய்கிறார்?'' என்று வருத்தப்பட்டது ஆறு.

''நண்பா, கடலின் மேல் பகுதியை மட்டுமே கேள்விப்பட்டு, இப்படி நினைக்கிறாய். உன்னைப் போலவே கடலும் பல வகையில் உதவுகிறது. மண்ணில் வாழும் உயிரினங்களைவிட கடலை நம்பி வாழும் உயிரினங்கள் ஏராளம். மனிதர்களின் உணவுச் சுவைக்கு அடிப்படைத் தேவையான உப்பை, வாரி வழங்குகிறது. குறை என்னவென்றால், உன்னைச் சரியான முறையில் பயன்படுத்தாமல், மனிதர்களே கடலுடன் வீணாகக் கலக்கவிடுகிறார்கள்'' என்றது மரம்.

மரம் சொன்னதைக் கேட்ட ஆறு, ''மன்னித்துக்கொள் நண்பா. பெரிய உள்ளம் படைத்தவர்கள், தாங்கள் செய்யும் நல்லவற்றை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன்'' எனச் சொல்லிவிட்டு, மகிழ்ச்சியோடு கடலை நோக்கிச் சென்றது ஆறு.

எஸ்.அபிநயா, தேவனாங்குறிச்சி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick