ஊர்ந்து செல்லும் உலோகத் தோழன்!

‘‘உலக விஞ்ஞானிகள் உருவாக்கும் ரோபோக்களை வியந்து பார்க்கும் காலம் மலையேறியாச்சு. இனி, ரோபோட்டிக் துறையில் நாமும் கில்லிதான்” என்று சிரிக்கிறார் செந்தில் மாதவன்.

சென்னை, மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் 11-வது படித்து வரும் செந்தில் மாதவன், வெல்டிங் துறைக்காக புதிதாக ரோபோ ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்.

‘‘என் அப்பா ஒரு இன்ஜினீயர். ஒரு நாள், வெளிநாட்டுல இருந்து அவரோட கம்பெனிக்கு ஆய்வுக்கு வந்தாங்க. அப்போ ஒரு சின்ன பிரச்னை. பாய்லருக்குள்ளே சின்னதா விரிசல். யாரும் உள்ளே இறங்க முடியாது. விரிசல் எங்கே இருக்குனு கண்டுபிடிக்கணும். கேமராவை உள்ளே இறக்கிப் பார்க்கலாமேனு சொன்னேன். அதுதான் இந்த வெல்டிங் ரோபோவுக்கான ஆரம்பம்” என்கிறார் செந்தில் மாதவன்.

Y வடிவத்தில் இருக்கும் இந்த வெல்டிங் ரோபோவின் மூன்று பக்கங்களிலும் சக்கரங்கள் உள்ளன.

‘‘பெரிய பாய்லர், குழாய்களில் என எதற்குள்ளும்  எப்படியும் திரும்பிப் போகிற மாதிரி வடிவமைச்சு இருக்கேன். இதன் முன் பகுதியில், ஒரு HD கேமரா இருக்கும். குழாய்க்குள்ளே இருக்கிற விஷயங்களைப் படம் பிடிக்கும். அதை, நம்மிடம் இருக்கும் மானிட்டரில் பார்க்கலாம். இருட்டான பகுதியில் போகும்போது இதில் இருக்கும் LED விளக்கு தானாக எரியும்.   கேமரா பக்கத்திலேயே ஒரு சென்சார் இருக்கு. அந்த சென்சார், இயந்திரம் போகும் பாதையில் இருக்கும் விரிசலைக் கண்டுபிடிச்சுக் காட்டும். குழாயில் தண்ணீர் இருந்தாலும் ரோபோவுக்கு எந்தப் பிரச்னையும் வராது” என்ற செந்தில் மாதவன், தனது செல்ல ரோபோவை ஒரு குழாய்க்குள் இயக்கிக் காட்டினார்.

தொழிற்சாலைகளின் பெரிய உலைகளுக்குள் விரிசல் வந்தால், மனிதர்கள் இறங்குவது மிகப் பெரிய ஆபத்து. அவர்களுக்கு உதவும் தோழனாக இந்த ரோபோ இருக்கும். இதில் இன்னும் சில முன்னேற்றங்களைச் சேர்த்து, ரோபோவே விரிசலைச் சரிசெய்யும் வகையில் உருவாக்கிவருகிறார்.

‘‘அறிவியல் கண்காட்சிகள், ரோபோட்டிக் போட்டிகள்  எனப் பல இடங்களில் என்னோட வெல்டிங் ரோபோவை இயக்கிக் காட்டி, பரிசுகள் வாங்கி இருக்கேன். ‘இது, அவசியம் தேவையான ரோபோ. இன்னும் நல்லா சிறப்பாக உருவாக்குங்க’னு பாராட்டினாங்க” என்கிறார்  மலர்ச்சியுடன்.

இந்த மெருகேற்றல் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கும்போதே, ஒரு பெரிய கனவுக்கான விதையையும் போட்டிருக்கிறார் செந்தில் மாதவன்.  

‘‘மனிதனிடம் உரையாடவும் நண்பன்போல பழகவும் ஒரு ரோபோவை உருவாக்கும் ஆய்வில், ஸ்காட்லாந்தில் உள்ள அபெர்டீன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முயற்சி செய்துட்டு இருக்கிறதா படிச்சேன். அது மாதிரி ஒரு பக்கா ரோபோவைக் கண்டுபிடிச்சு, தமிழனின் பெயரை உலகத்துக்கு உரக்கச் சொல்லணும்” என்கிறார் நம்பிக்கைக் குரலில்.

பி.எஸ்.முத்து

ப.சரவணகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick