Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்றைய ஸ்பெஷல்... என்றைக்கும் ஸ்பெஷல்!

ஹாய் குட்டி ஃப்ரெண்ட்ஸ்...

நான் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன் பேசுறேன். வளரும் பருவத்தில் இருக்கும் உங்களுக்கு, சத்தான சாப்பாடு அவசியம்.

கால்சியம் நிறைந்த உணவுகள்!

எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் மிக முக்கியம். உங்களுக்குப் பால் அல்லது பால் தயாரிப்புகளை சாப்பிடப் பிடிக்கலைன்னா பரவாயில்லை. கால்சியம் சத்து நிறைஞ்சிருக்கும் பிற உணவுகளில் அதைப் பெறலாம். முழு கறுப்பு உளுந்து, மீன், சிக்கன், முட்டை, இலைகளுடன் கூடிய காய்கறிகள், கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்றவையும் எல்லா சிறுதானியங்களும். இட்லியோடு எள்ளுப் பொடி சேர்த்துச் சாப்பிடலாம். சப்பாத்திக்கு சன்னா/ராஜ்மா மசாலா கறி, சுண்டல், சோயாமில்க் போன்றவற்றை உணவுகளைச் சேர்த்துக்கிட்டால், உங்களுக்குத் தேவையான கால்சியம் சத்து கிடைக்கும்.

கண்பார்வைக்கான உணவுகள்!

சின்ன வயசிலேயே நிறையப் பசங்க கண்ணாடி போடுற மாதிரி ஆயிடுது. அதைத் தவிர்க்க,  சாப்பிட வேண்டியது என்ன தெரியுமா?

முட்டைக்கோஸ் போன்ற பச்சை இலைக் காய்கறிகள், கலர்ஃபுல் பழங்கள் மற்றும் காய்கறிகள், புதினா இலைகள், கறிவேப்பிலை (பொடியாகவும் சேர்க்கலாம்), மாதுளை, குடமிளகாய், பப்பாளி, தர்பூசணி, தக்காளி, பர்ப்பிள் நிற முட்டைக்கோஸ் ஆகியவை.

இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்!

நீங்க ஸ்போர்ட்ஸில் கலந்துக்கிறதோ, டான்ஸ் ஆடுவதோ... உடம்புக்கு சவால்விடும் எல்லா செயல்பாடுகளுக்கும், உடலில் அதிக சக்தி தேவை. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, வயிற்றில் இருக்கும் பூச்சிகளை அழிக்க, `Deworming’ பண்ணிக்கிறது அவசியம். டீ, காபி போன்றவை இரும்புச்சத்தை உடல் கிரகிக்கும் செயல்பாட்டைத் தடுக்கும். அதனால், ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்ற ஏதேனும் ஒரு சிட்ரஸ் பழம் அல்லது நெல்லிக்காய் ஜூஸ்... இவற்றில் ஏதேனும் ஒன்றை, இரும்புச்சத்து நிறைந்த உணவோடு எடுத்துக்கிட்டீங்கன்னா, அந்தச் சத்தை உடம்பு நல்லா கிரகிச்சுக்கும். எதில் எல்லாம் இரும்புச்சத்து இருக்குனு கேட்கிறீங்களா?
அசைவ உணவுகள், முட்டை, பருப்பு, இலையுடன் கூடிய காய்கறிகள், உலர் பழங்கள், நட்ஸ், சிறுதானியங்கள், வெல்லம் போன்றவை இரும்புச்சத்து நிறைந்த உணவுகள். ரத்த அணுக்களை உருவாக்க, புரதமும் தேவை. பருப்பு, பால் தயாரிப்புகள் (பால், தயிர், மோர், சீஸ், வெண்ணெய், பனீர் போன்றவை), மஷ்ரூம், முட்டை மற்றும் அசைவ உணவுகளைச் சேர்த்துக்கணும். குறிப்பாக, ரத்தச் சோகை (அனீமியா) உள்ள பிள்ளைகள், சத்தான அசைவ உணவுகளை எடுத்துக்கணும்.

மலச்சிக்கலைத் தடுக்கும் உணவுகள்!

தினமும் காலைக் கடன்களை முடிச்சு, வயிற்றைச் சுத்தம் செய்யவேண்டியது முக்கியம். மலச்சிக்கல் பிரச்னை இல்லாமல் இருக்கிறதுக்கு, பச்சைக் காய்கறிகள் சேர்த்த சாலட் அல்லது ஆரஞ்சு, பப்பாளி, பேரிக்காய், கொய்யா, மாதுளை, வாழைப்பழம் போன்ற நார்ச்சத்துள்ள பழங்களில் ஒன்றைச் சாப்பிடணும். வாரம் ஒருமுறை கீரை சேர்த்துக்குங்க. முள்ளங்கிக் கீரை, முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, சிறுகீரை எல்லாமே ஊட்டச்சத்து நிரம்பியவை. அதோடு, குடலுக்குள் இருக்கும் கசடுகளை அப்புறப்படுத்தி, செரிமானத்தைச் சுலபமாக்கிடும். தினமும் ஒன்றரை லிட்டர் முதல் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பதன் மூலம் மலச் சிக்கல் நீங்கும்.

வளர்ச்சிக்கான உணவுகள்!

சில குழந்தைங்க, சாப்பிடுறதுக்கே ரொம்ப அலட்டிக்குவாங்க. அம்மா எவ்வளவுதான் கெஞ்சினாலும், கொஞ்சூண்டு சாப்பிட்டுட்டு, ஸ்கூலுக்கு ஓடிடுவாங்க. ஆனா, படிப்பிலும், விளையாட்டிலும், மத்த ஆக்டிவிட்டீஸிலும் நிறையக் கலோரிகளைச் செலவழிப்பாங்க. செயல்பாட்டுக்கு ஏற்ற கூடுதல் கலோரிகள் அவங்களுக்குக் கிடைக்கலைன்னா, உடல் வளர்ச்சி தடைபடும். அதனால், நீங்க உயரமாகவும் சதைப்பிடிப்போடும் வளர  என்னவெல்லாம் தேவைனு சொல்லவா...

பால், பால் சேர்ந்த மில்க் ஷேக்ஸ், நட்ஸ் வகைகளில் இருந்து எடுக்கப்படும் பால் (Nuts milk), தயிர், தயிரும் பழமும் சேர்ந்த ஷேக், உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, சோளம் போன்றவற்றை உங்க ரெகுலர் உணவுகளில் சேர்க்கணும்.
தினசரி உணவோடு ஏதாவது ஒரு ஜூஸ், பழம் சேர்த்த கஸ்டர்டு, மில்க் ஸ்வீட், பொட்டுக்கடலை உருண்டை, சத்துமாவு உருண்டை போன்ற ஒன்றைச் சேர்த்துக்கொண்டால், வளர்ச்சிக்கான எக்ஸ்ட்ரா கலோரிகள் கிடைக்கும்.

விளையாடி முடித்த பிறகு...

நீங்க விளையாடி முடித்து வர்றப்போ, உங்க தசைகள் எல்லாம் சக்தியை இழந்து காலியாகிடும். தசைகளில் திரும்பவும் சத்துக்களை நிரப்பினால்தான், இழந்த சக்தியை மீட்டெடுக்க முடியும். ஃப்ரெஷ் ஜூஸ், உலர் பழங்கள், மில்க் ஷேக் வகைகள், ஸ்வீட் லஸ்ஸி, பிரெட் ஜாம், ஃப்ரூட் பன், ஃப்ளேவர்டு மில்க், வாழைப்பழம் ஆகியவை, விளையாடி முடித்து வந்ததும் சாப்பிடலாம்.

புழுக்கமான காலநிலையில், வியர்வை அதிகமாக வெளியேறும்போது, உப்பு சேர்த்த உணவுகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுங்க. மீன், சிக்கன், மட்டன் மாதிரி அசைவ உணவுகள், அப்பளம், ஊறுகாய், வீட்டில் தயாரித்த பொடிகள் போன்றவற்றில் உப்பு உபரியாக இருக்கும். உப்பு, சர்க்கரை சேர்த்த எலுமிச்சம்பழச் சாறு, இளநீர் மாதிரி எடுத்துக்கிட்டீங்கன்னா, எலெக்ட்ரோலைட்களைத் தக்கவைக்கும்.

காலை உணவு கட்டாயம்!

காலை உணவு மிக முக்கியம்.   அன்றைய தினம் முழுதும் படிப்பு மற்ற செயல்பாடுகளை எதிர்கொள்ளும்  சக்தியையும் திறனையும் வழங்கும் உணவு அதுதான். நீங்க காலையில் இட்லி, தோசைதான் சாப்பிடணும்னு இல்லை. புரதச் சத்து, மாவுச் சத்து, உயிர்ச் சத்து, தாதுச் சத்து (மினரல்) ஆகியவை சேர்ந்ததுதான் `ஐடியல் பிரேக்ஃபாஸ்ட்’.

இட்லி அல்லது தோசையை, தேங்காய்ச் சட்னி அல்லது நிலக்கடலைச் சட்னியுடன் சாப்பிடுவது  ஆரோக்கியமான காலை உணவு. அவசர அவசரமாக ஓடுபவர்களுக்காக, சில `செமி ஸாலிட்’ மற்றும் `திரவ உணவு சாய்ஸ்களில் சில இதோ...

ராகிக் கஞ்சி அல்லது ஓட்ஸ் கஞ்சி அல்லது சத்து மாவுக் கஞ்சி.

ஒரு கிளாஸ் பால், ஒரு பழம்.

முட்டை மற்றும் ஒரு கிளாஸ் ஜூஸ்.

ஆப்பிள் அல்லது வாழைப்பழ மில்க் ஷேக்.

இதில் ஏதாவது ஒன்றை, காலையில் சாப்பிட்ட பிறகு ஸ்கூலுக்குக் கிளம்புங்க.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்!

அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போனால், வகுப்புகளைத் தவறவிடுவார்கள் அல்லது தேர்வுகளில்  தடுமாறிவிடுவார்கள். திடகாத்திரமான உடம்போடு, நோய் எதிர்ப்புச் சக்தியோடு இருந்தால்தான் தொற்று நோய்கள் நம்மை சுலபத்தில் அண்டாது. சிட்ரஸ் வகைப் பழங்கள், நெல்லிக்காய் ஜூஸ், தேங்காய்ப்பால், சீஸனில் வரும் பழங்கள், காய்கறிகள் எனச் சாப்பாட்டில் சேர்த்துக்கணும். ஏன்னா, எந்த உணவுமே தனியாக எல்லா வகை ஊட்டச் சத்துக்களையும் தந்துவிடாது. இரும்புச்சத்தும் புரதச்சத்தும் நிறைஞ்ச உணவுகள், உங்களை இன்ஃபெக்‌ஷனிலிருந்து பாதுகாக்க, ரொம்ப முக்கியமான தேவை.

வீட்டுக்குள்ளேயே அடைஞ்சுகிடக்காம, வெளியே விளையாடணும். சுறுசுறுப்பாக இருந்தாலே, நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும்.

பிரேமா நாராயணன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
எஸ்.ஏ-விலும் அசத்தலாம்...ஈஸியாக ஜெயிக்கலாம்!
சுட்டி மனசு!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close