இன்னிக்கு சிங்கர்... நாளைக்கு ஆக்டர்!

கோடை விடுமுறையில் வெளியாகி, சுட்டிகளை தியேட்டருக்கு சுண்டி இழுத்திருக்கும் ‘காஞ்சனா- 2’ படத்தில், ‘மொட மொடவென வெடவெடக்கும்’ பாடல் செம ஹிட்.

‘‘ராகவா லாரன்ஸ் அங்கிள், குழந்தை கெட்டப் போட்டு ஆட, பின்னணியில் ஒலிக்கும் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரன்  நான்தான்” எனச் சிரிக்கிறார், 10 வயது ஸ்ரீமன் ரோஷன்.

‘‘பாடுறதுன்னா அவ்வளவு பிடிக்குமா?’’

‘‘இல்லே அண்ணா. எனக்கு விளையாட்டும்   டான்ஸூம்தான் பிடிக்கும். அப்பாதான், இந்தப் பாட்டை ட்ரை பண்ணச் சொன்னார். நான், பாட்டு கிளாஸ் பக்கம்கூட போனது கிடையாது’’ என்றார்.

ஸ்ரீமன் ரோஷனின்  தந்தையான அஸ்வமித்ரா,  அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர்.

‘‘நான், நிறையப் படங்களில்  சவுண்டு இன்ஜினியரா வேலை செய்திருக்கேன். தெலுங்கில், ‘ரிபெல்’ என்ற  படத்தில் வேலை செய்தபோது, லாரன்ஸ் சார் பழக்கம் ஏற்பட்டது.  ‘காஞ்சனா-2’ படத்தில்,  இந்தப் பாட்டுக்கு இசையமைக்க வாய்ப்பு  தந்தார். படத்தின் காட்சிப்படி, ஒரு குழந்தையோட வாய்ஸ் வேணும்கிறதுனால, என் மூத்த மகன் கவின் ரோஷனையும், ஸ்ரீமன் ரோஷனையும் பாட வெச்சேன். ஸ்ரீமன் வாய்ஸ் செட் ஆச்சு. என் மகன் மூலமா நானும் இசையமைப்பாளர் ஆகியிருக்கேன்” என மகிழ்ச்சியுடன் சொன்னார், அஸ்வமித்ரா.

‘‘அப்பா, அவர் என்னை பேட்டி எடுக்க வந்திருக்கார். உங்களுக்கு இந்த ஒரு சான்ஸ்தான்” என்று மீண்டும் உள்ளே நுழைந்தார் ஸ்ரீமன் ரோஷன்.

‘‘ஸ்ரீமன், நீங்க பாடினது மட்டும் படத்துல வந்திடுச்சே... உங்க அண்ணன் கோவிச்சுக்கிட்டாரா?”

‘‘அண்ணா, என்னுடைய பெஸ்ட்  ஃப்ரெண்டு. அதுக்கு எல்லாம் கோவிச்சுக்க மாட்டான். இந்தப் பாட்டுக்கு முதல்ல வாழ்த்து சொன்னதே என் அண்ணாதான்’’ என்று அண்ணன் கழுத்தைக் அன்புடன் கட்டிக்கொண்டார் ஸ்ரீமன் ரோஷன்.

‘‘ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் என்ன சொன்னாங்க?’’

‘‘நான் பாடின பாட்டு படத்தில் வருதுன்னு தெரிஞ்சதும், வீட்டுக்கு வந்து  ஆட்டோகிராஃப் வாங்கி, பயங்கர கலாட்டா பண்ணிட்டாங்க” என்று சிரிக்கிறார்.

‘‘உனக்குப் பிடிச்ச பாட்டு எது?’’

‘‘எனக்கு, ‘டங்கா மாரி’ பாட்டு ரொம்பப் பிடிக்கும். தனுஷ் அங்கிளையும் ரொம்பப் பிடிக்கும். அவர் மாதிரி பெஸ்ட் நடிகர் ஆகணும்னு ஆசை இருக்கு. இப்போ சிங்கர், அப்புறமா ஆக்டர். சூப்பர்ல”  என்கிறார், மலரும் புன்னகையோடு.

பா.ஜான்ஸன்

ஜெ.வேங்கடராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick