Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பல்லவ ராஜ்யத்தில் த்ரில் பயணம்!

“பல்லவ மன்னர்களான மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் வாழ்ந்த ஏழாம் நூற்றாண்டுக்கு உங்களை கூட்டிட்டுப் போறேன். யாரெல்லாம் வர்றீங்க?” என த்ரில் பயணத்துக்கு அழைத்தார் சி.எஸ்.எஸ்.பாரதி.

“எப்படி... டைம் மெஷின் வெச்சிருக்கீங்களா?” எனக் கேட்டான் குரு ஆனந்த்.

“ஆமா. ஒவ்வொருத்தருக்கும் ஒரு மெஷின். அந்த மெஷின், மேலேயும் கீழேயும் ஆடும். முன்னாடி, பின்னாடி சாயும். கதவுகள் இல்லாத ஓப்பன் டைம் மெஷின். போற வழியில், மழையில் நனைவீங்க; அனல் வீசும். எல்லாத்துக்கும் ரெடினு சொன்னால், கூட்டிட்டுப்போறோம்” என திகில் கிளப்பினார் முல்லைக்கொடி.

“அதெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம். சஸ்பென்ஸ் வைக்காமல் சீக்கிரம் கூட்டிட்டுப்போங்க” என்றாள் கல்பனா.

அது, மாமல்லபுரத்தில் இருக்கும் ‘கிரானிக்கல்ஸ் இந்தியா 7-D தியேட்டர்’ (Chronicles India - 7DX Theatre). சென்னை, நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சுட்டிகளுக்கான ஸ்பெஷல் ஷோ.

“ ‘முப்பரிமாணம்’ என்கிற 3D சினிமாக்களை நீங்க பார்த்திருப்பீங்க. இது, அதுக்கும் ரொம்ப மேலே. நுகர்வு உணர்வு, தொடு உணர்வு, அதிர்வு உணர்வு மற்றும் எதிரொலி ஆகியவற்றை உண்டாக்கி, காட்சி நடக்கும் இடத்துக்கே கூட்டிட்டுப்போகும். படத்தைப் பார்த்து முடிச்சதும், சில கேள்விகள் கேட்பேன். சரியாச் சொல்றவங்களுக்குப் பரிசு” என்றார் பாரதி. இவர்தான், இந்த தியேட்டரின் நிறுவனர்.

அனைவரும் தியேட்டருக்குள் நுழைந்து, இருக்கைகளில் அமர்ந்தார்கள். “இதுதான் ஓப்பன் டைம் மெஷினா... நல்லா    கொடுத்தீங்க பில்டப்” என்றான் அசோக்.

விளக்குகள் அணைக்கப்பட்டு, ‘பல்லவ ராஜ்யம்’ என்ற படம் ஆரம்பித்தது. மாமல்லபுரத்தின் கடற்கரைக் கோயில், கண்களுக்கு மிக அருகில் வந்தது. சீறும் அலைகளின் ஓசை, ஈர மண்ணின் நறுமணத்தைத் தொடர்ந்து, கடல் அலையின் சாரல் முகத்தைத் தாக்க, “ஹேய்ய்ய்” என  உற்சாகக் குரல் எழுந்தது.

அதன் பிறகு வந்த ஒவ்வொரு நிமிடமும்... உற்சாகக் கூச்சலும் திகில் அலறலுமாக இருந்தன. நரசிம்மவர்மன் குதிரையில் வரும்போது,நாம் அமர்ந்திருக்கும் இருக்கையும் குதித்தது. அவர் வரும் வழியில்  உள்ள தோட்டத்துப் பூக்களின் மணம், நமக்கும் வீசியது. மலை மீது ஏறும்போது, நமது இருக்கை பின்னோக்கிச் சாய்ந்தது. மழை பெய்யும்போது, நம் மீதும் சாரல் துளிகள்.

மகேந்திரவர்மன் மற்றும் நரசிம்ம வர்மனின் சிறப்பான ஆட்சி, தமிழ்நாடு முழுவதும் பரவிய பல்லவ ராஜ்யம், மல்யுத்தம் மற்றும் நாட்டியத்துக்கு அளித்த சிறப்பு, சீனாவோடு ஏற்பட்ட வணிகத் தொடர்பு எல்லாவற்றையும் கண் எதிரே கொண்டுவந்து நிறுத்தின. கடற்கரைக் கோயில், புலிக் குகை, பஞ்ச பாண்டவ ரதங்கள் ஆகியவற்றின் வரலாற்றை அழகாகச் சொன்னது, ‘பல்லவ ராஜ்யம்’ திரைப்படம்.

அந்தப் படம் முடிந்ததும், மற்றொரு படமும் திரையிடப்பட்டது. மாய உலகத்தில் நுழையும் ஒரு சிறுமி, நம்மையும் அழைத்துச் சென்று சந்திக்கும் ஆபத்துகளும் சாகசங்களும் சிலிர்க்கவைத்தன.

படம் முடிந்ததும், “சூப்பர் அங்கிள், நிஜமாவே டைம் மெஷினில் போய்ட்டு வந்த மாதிரி இருக்கு” என்றான் ஜீவா.

“சரி, கேள்விகளைக் கேட்கிறேன். பஞ்ச பாண்டவ ரதங்களை யார் ஆட்சியில் செதுக்கினாங்க?” எனக் கேட்டார் பாரதி.

“முதலாம் நசிம்ம வர்மன் ஆட்சியில்” என்று தொடங்கி, பல கேள்விகளுக்குப் பதில் அளித்து அசத்தினார்கள் சுட்டிகள்.

“வெரிகுட்! இந்தப் படத்தை உருவாக்கிய நோக்கமே இதுதான். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு வரலாறு இருக்கும். தன்னுடைய முன்னோர்கள் பற்றி ஒவ்வொருவரும் தெரிஞ்சுக்கிறது ரொம்ப முக்கியம். அறிவியல் பாடத்தை செய்முறையில் உணர்ந்து பார்க்க, சயின்ஸ் லேப் இருக்கு. ஆனா, வரலாற்றை செய்முறையாக எப்படி உணர முடியும். பாடப் புத்தகத்தில் பக்கம் பக்கமாகப் படிப்பதைவிட, காட்சிகளாகப் பார்க்கும்போது, நமது மனதில் சுலபமாகப் பதியும். அதிலும், இந்த மாதிரி ஸ்பெஷல் சினிமாக்கள் மூலம் பார்க்கும்போது, மறக்கவே மறக்காது” என்றார் பாரதி.

“ஆமா அங்கிள், இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, பல்லவர்கள் பற்றி இன்னும் நிறையத் தெரிஞ்சுக்க ஆர்வம் வந்திருக்கு” என்றான் சுரேஷ்.

“வெரிகுட்! இந்தப் படத்தைப் பார்த்துட்டு,  இங்கே இருக்கிற கடற்கரைக் கோயில், புலிக் குகை, பஞ்ச பாண்டவர் ரதங்கள் ஆகியவற்றைப் பார்க்கப் போனால், இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். நீங்களும் போய்ப் பாருங்க” என்றார் முல்லைக்கொடி.

“பார்த்துட்டு வர்றோம். எங்களுக்கு, திரும்பவும் ஒரு ஷோ போட்டுக் காட்டுங்க” என்றவர்களின் குரலில் உற்சாகம்.

மாமல்லபுரம் பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கிறது, இந்த 7D சினிமா தியேட்டர்.

காலை 10 முதல் இரவு 9 மணி வரை திரையிடப்படுகிறது.

தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் திரையிடப்படுகிறது.

காட்சி நேரம் 30 நிமிடங்கள்.

கட்டணம்: பெரியவர்களுக்கு ரூ.300, சிறியவர்களுக்கு  ரூ.200. பள்ளிகளுக்கு 50% சிறப்பு சலுகை உண்டு.

கே.யுவராஜன்

கே.ராஜசேகரன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
சுட்டி சம்மர் கேம்ஸ்!
உற்சாகமாக ஓய்வு எடுப்போம்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close