வரார்... வரார்... அவதார்!

சினிமா பிரியர்களை பிரமிக்கவைத்த திரைப்படம் ‘அவதார்’. 2009-ல் வெளியான இந்தப் படத்தை எழுதி, இயக்கி, படத்தொகுப்பும் செய்து தயாரித்தவர், ஜேம்ஸ் கேமரூன். படம் ஆஸ்கர் உட்பட பல விருதுகளை அள்ளியது. 

அவதார் வெளியாகும்போதே, அடுத்தடுத்த ஐந்து பாகங்களுக்கான கதையையும் எழுதிவிட்டாராம் ஜேம்ஸ் கேமரூன். அவதார் வசூல் சாதனை படைக்க, அடுத்த பாகங்கள், அதற்கும் மேல் சம்திங் ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்று நினைத்த கேமரூன், ஐந்து பாகங்களாக எழுதிய கதையைச் சுருக்கி, நான்கு பாகங்களாக மாற்றி இருக்கிறார்.

அவதாரின் முக்கிய கதாபாத்திரமான ஜேக் மற்றும் நேத்ரி இருவருமே அடுத்த பாகத்திலும் வருகிறார்கள். இந்த இருவரும் பண்டோரா கிரகத்தில் இருந்து வெவ்வேறு கிரகங்களுக்குச் செல்வதுதான் ‘அவதார் 2’. சென்ற பாகத்தில், டாக்டர் கிரேஸ் அகஸ்டின் மற்றும் வில்லனாக நடித்த கார்னல் மில்ஸ் இருவருமே இறந்துவிடுவார்கள். ஆனால், அவர்களே முக்கிய எதிரிகளாக அடுத்த பாகத்திலும் நடிக்க இருக்கிறார்கள்.

நியூயார்க் நகரிலேயே படப்பிடிப்பையும் தொடங்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள். ‘அவதார் 2’ 2017-ல் வெளியாகும். மூன்றாவது, நான்காவது பாகங்கள், 2018 மற்றும் 2019-ல் வெளியாகும். ஜேம்ஸ் கேமரூனின் சொந்த ஊரான நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரில், அவதார் படத்தின் பிரீமியர் காட்சியைத் திரையிட இருக்கிறார்.

முதல் பாகம் வெளியாகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டதால், அவதாரின் கிரகமான பண்டோரா மற்றும் அவதார்களான நிவி மக்களைப் பற்றி, உலகின் முக்கிய நகரங்களில் பண்டோரா மினி கிரத்தை உருவாக்கி, பார்வைக்கு வைக்கப்போகிறார்கள். அங்கே  சென்றால், பண்டோரா கிரகத்துக்கே சென்ற அனுபவம் கிடைக்குமாம்.

‘அவதார்’ படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர்’ “அடுத்த மூன்று பாகங்களுக்கான கதையும் தயார்.  அவை, குழந்தைகளை அதிகமாகக் கவரும். மூன்று பாகங்களுக்கான படப்பிடிப்பும் ஒன்றுபோலவே நடக்க இருக்கிறது” என்கிறார்.

பண்டோரா கிரகத்துக்கு அடுத்தடுத்து ட்ரிப் அடிக்கத் தயாரா இருங்க நண்பர்களே!

பி.எஸ்.முத்து

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick