ஸ்மார்ட் கிளாஸ்

Tom and Jerry Learn & Play Free:

டாம் மற்றும் ஜெர்ரியின் அட்டகாசத்தை  ரசிக்காதவர்களும் உண்டா? ஹாலிவுட் சினிமாவின் பயங்கர வில்லன்கள்கூட டாமையும் ஜெர்ரியையும் ரசிப்பார்கள். சுட்டிகள் முதல் தாத்தாக்கள் வரை கவர்ந்து இழுக்கும் டாம் அண்ட் ஜெர்ரி துரத்தல்களை, காமிக்ஸாக இந்த ஆப் மூலம் படிக்கலாம். படிக்கும்போதே, டாம் அண்ட் ஜெர்ரியின் வித்தியாசமான சப்தங்களையும் கேட்டு மகிழலாம். படித்து ரசிப்பதோடு, இந்த ஆப்பில் இருக்கும் டாம் அண்ட் ஜெர்ரி காமிக்ஸ் ஓவியங்களுக்கு நீங்கள் வண்ணம் தீட்டி  அட்டகாசப்படுத்தலாம். போனஸாக, டாமும் ஜெர்ரியும் உங்களுக்கு சின்னச்சின்னக் கணக்குகளையும் கற்றுத்தருவார்கள்.

Gozoa – The Key Quest:

கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தலை இப்போதுதான் கற்றுக்கொண்டவர்கள், தங்கள் கணிதத் திறமைகளை மேலும் கூர்மையாக்க உதவும் ஆப் இது. சூப்பர் மேரியோ போல, எண்களைக் கூட்டியும் கழித்தும் பெருக்கியும், ஒவ்வொரு எண்ணாகத் தாவிச் சென்று வில்லனிடம் மாட்டிக்கொண்டுள்ள நண்பர்களைக் காப்பாற்ற வேண்டும். விரைவாக எண்களுக்கான விடையைக் கண்டறிந்து, அடுத்த இடங்களுக்குத் தாவும்போது, உங்களுக்கு சில வைரங்கள் கிடைக்கும். இதனால், வேகமாக எண்களைக் கூட்டவும் கழிக்கவும் ஆர்வம் ஏற்படும். விளையாட்டாக உங்கள் கணிதத் திறமையை வளத்துக்கொள்ள உதவும் சிறந்த ஆப் இது.

3D Paper craft - Paper Chibi:

காகிதத்தில் கப்பல், விமானம் போன்றவற்றைச் செய்யும் ஆசை எல்லோருக்கும் இருக்கும். இந்த ஆப் மூலம்,  ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள மனிதப் பொம்மைகள், டைனோசர்கள், கார்கள் போன்றவற்றை போட்டோ பேப்பரில் பிரின்ட் செய்திருப்பார்கள். அவற்றை எங்கு வெட்ட வேண்டும், ஒட்ட வேண்டும் என்ற குறிப்புகள் இருக்கும். அதைப் பயன்படுத்தி, காகிதப் பொம்மைகளைச் செய்து அசத்தலாம். ஏற்கெனவே இருக்கும் வடிவங்கள் உங்களுக்குப் பிடிக்கவில்லையா? நீங்களே புதிதாக உருவங்களை உருவாக்கலாம். உங்கள் அம்மா, அப்பா, சகோதர, சகோதரி உருவங்களையும் உருவாக்கலாம். சுலபமான வேலைப்பாடுடன் கூடிய பொம்மைகள், அழகான உருவங்கள் என இரண்டு விதமான வசதிகள் இதில் இருப்பதால், எல்லா வயதுச் சுட்டிகளும் பயன்படுத்தலாம்.

Toca Pet Doctor:

பொம்மை ஸ்டெதாஸ்கோப், ஊசி ஆகியவற்றைவைத்துக் கொண்டு டாக்டர் விளையாட்டு ஆட ஜாலி ஆப் இது.

சிலந்தி, முயல், நத்தை, தவளை மற்றும் பறவைகளுக்கு காயங்கள் ஏற்பட்டு அல்லது உடல்நிலை சரியில்லாமல் போனால், அவற்றுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்.

சுட்டி மருத்துவரான உங்களைப் பார்க்க வந்திருக்கும் இந்த விலங்குகள், அறைக்கு வெளியே காத்திருக்கும். தங்களுடைய நோய்களையும் பயங்களையும் உங்களிடம் சொல்லும். அப்புறம் என்ன? அவற்றுக்கு நீங்கள் சிகிச்சை அளிக்க வேண்டியதுதான். கேட்கும்போதே செம ஜாலியாக இருக்கிறது அல்லவா? இந்த ஆப்ஸை டவுண்லோடு செய்யுங்கள். வெட்னரி டாக்டராகிக் கலக்குங்கள்.

- இனியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick