Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சோட்டா' பீமன், 'டோரா' பாஞ்சாலி, 'ஆங்ரி பேர்டு' அர்ஜுனன், 'சப்வே' சகுனி!

- இது சேட்டை பாரதம்

“பீஷ்மர் அண்ணா, சீக்கிரம் வாங்க. துச்சாதனன் செல்ஃபி எடுத்துட்டு இருக்கார்” என்று தருமன் குரல் கொடுக்க, வெள்ளைத் தாடியை அழுத்தமாகப் பிடித்தவாறு ஓடிவந்தார், பீஷ்மர். அவர் பின்னாலே அர்ஜுனன், நகுலன், நாக தேவதை, துரோணாச்சாரியார் என ஒரு பட்டாளமே உற்சாகமாக வந்தது.

‘‘ஏய், இருங்க நானும் வர்றேன்” என்று தூரத்தில் இருந்து குரல் கொடுத்தார், பீமன்.

“அவன் வந்ததும் எடுங்கப்பா. இல்லைன்னா, கதாயுதத்தால் அடிச்சிடப்போறான்” என்று மிரண்டார் கிருஷ்ணர்.

எல்லோரும் செல்ஃபிக்கு முண்டியடித்து முகம் காட்ட, “உலகத்தின் முதல் செல்ஃபி இதுதான்” என க்ளிக் செய்தார் துச்சாதனன்.

சென்னையில் உள்ள நாரத கான சபாவின் மேடைக்குப் பின்னால்தான் இந்தக் கூத்து. தாயக்கட்டையை உருட்டியவாறு ரிகர்சலில் சகுனியும் துரியோதனனும். நேற்று வரை டி.வி-யில், டோரா கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்த சிறுமி, இங்கே பாஞ்சாலியாக வசனங்களைப் பின்னி எடுக்கிறார். அவர் அருகே நின்றிருந்த அர்ஜுனன், மொபைலில் ‘ஆங்ரி பேர்டு’ விளையாட்டில் தீவிரமாக இருந்தார். கர்ணனும் காவலாளியும் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

“ஓடி விளையாடாதீங்க, மேக்கப் கலைஞ்சுடும். திருதராஷ்டிரன் எங்கே? போய் தாடியை ஒட்டிக்க” என்றவாறு வந்தவரை, “இயக்குநர் ஷண்முகநாதன் வர்றார்... வர்றார்... வர்றார்’’ எனக் குறும்பாக வரவேற்றான், காவலாளி வேடமிட்ட சிறுவன்.

“என் பேரு ஷண்முகநாதன் என்கிற ராஜா. என்னோட ‘பப்பெட் தியேட்டர்ஸ்’ சார்பாக, முழுக்க முழுக்க சிறுவர், சிறுமிகளே பங்குபெறும் ‘பால பாரதம்’ என்ற நாடகத்தை தமிழ்நாடு முழுக்க நடத்தப்போறேன். அதன் முதல் அரங்கேற்றம் இது. முழுக்க முழுக்க சிறுவர்களே நடிக்கும் புரஃபஷனலான ஒரு நாடகக் குழுவை உருவாக்க ஆசை. அதன் ஆரம்பம்தான் ‘பால பாரதம்’ நாடகம். இதில் நடிப்பவர்களில் பலர் நாடக மேடைக்குப் புதுசு. மூணு மாசத்துக்கு முன்னாடி அறிவிப்பு செஞ்சு, 85 மாணவர்கள் வந்தாங்க. அவர்களில் 27 பேரைத் தேர்வுசெய்து பயிற்சி கொடுத்திருக்கோம்” என்றார்.

ஆறாம் வகுப்பு படிக்கும் ஆகாஷ், “நான் செட்டிநாடு வித்யாஷ்ரம் ஸ்கூலில் படிக்கிறேன். இதுக்கு முன்னாடி ஸ்கூல் டிராமாவில்கூட நடிச்சது இல்லை. செலெக்ட் ஆன பிறகு ரொம்பப் பயமா இருந்துச்சு. ஆனா, ராஜா அங்கிள் பொறுமையா சொல்லிக்கொடுத்தார். டி.வி-யில், சோட்டா பீம் வரும்போதெல்லாம் விரும்பிப் பார்ப்பேன். இப்போ, ஐயாவே ஒரு சோட்டா பீமன்” என கதாயுதத்தை உயர்த்தினார்.

11-ம் வகுப்பு படிக்கும் தீபக் கார்த்திக், பால பாரதம் நாடகத்தில் துரியோதனன் வேடத்தில் நடிப்பவர். “நான் லயோலா மெட்ரிகுலேஷன் ஸ்கூலில் படிக்கிறேன்.       10 வருஷங்களா, டப்பிங் ஆர்ட்டிஸ்டா நிறைய ஆங்கிலப் படங்கள், கார்ட்டூன் கேரக்டர்களுக்குக் குரல் கொடுத்திருக்கேன். ஆனா, தூய தமிழில் பேசியது இல்லை. அதுக்காக, சிவாஜி கணேசன் தாத்தா நடிச்ச புராணப் படங்கள் நிறையப் பார்த்து டிரெய்னிங் எடுத்துக்கிட்டேன். தனித்தனியா வந்து சேர்ந்த நாங்க, இப்போ க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். ரிகர்சலில் ஒருத்தரை ஒருத்தர் கலாய்ச்சுக்கிட்டே இருப்போம். எங்களை சமாளிக்கிறதுக்குள்ளே, ராஜா சாரும் எங்களை ஒருங்கிணைச்சு வசனங்களைச் சொல்லித்தரும் சதீஷ் சாரும் லிட்டர் லிட்டரா தண்ணீர் குடிப்பாங்க” என்கிறார்.

“இந்தக் குழுவிலேயே சீனியர், சகுனியாக நடிக்கும் பாலாஜி. பிசியோதெரபி முதல் வருஷம் படிக்கிறார். எங்க எல்லோருக்கும் தல, தளபதி, சீயான், சூப்பர் ஸ்டார், பவர் ஸ்டார் எல்லாமே இவர்தான்” என்று பாலாஜியை முன்னாடி இழுத்து வந்து நிறுத்தினார்கள்.

“நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே ஆர்.எஸ்.மனோகர் சார் குழுவில் நடிச்சு இருக்கேன். அங்கே எல்லாம் அசால்ட்டா இருந்துட்டேன். ஆனா, இந்த வாண்டுங்ககிட்டே மாட்டிக்கிட்டு படுற அவஸ்தை இருக்கே... சகுனி கேரக்டர் வேறயா... ஓட்டு ஓட்டுனு ஓட்டுறாங்க” என்று சிரித்தார் பாலாஜி.

“ஒண்ணரை மணி நேர நாடகம். ‘இப்போ இருக்கிற பசங்களுக்கு சாதாரண தமிழ் பேசுறதே கஷ்டம். தூய தமிழில் மகாபாரதம் வசனங்களா? சான்ஸே இல்லை. ரொம்ப ரிஸ்க் எடுக்கறீங்க’னு நிறையப் பேர் பயமுறுத்தினாங்க. ஆனா, நான் நம்பிக்கையோடு இவங்களுக்குப் பயிற்சி கொடுத்திருக்கேன். என்னடா இவ்வளவு விளையாட்டா இருக்காங்களே, இவங்க எப்படி நடிப்பாங்கன்னு தோணும். சும்மா இருக்கிற நேரத்தில்தான் இந்த ஜாலி, கேலி எல்லாம். நாடகம் ஆரம்பிச்ச பிறகு பாருங்க. பசங்க பின்னி எடுப்பாங்க’’ என்றார் ஷண்முகநாதன் என்றார் ராஜா.

இந்தப் ‘பால பாரதம்’ தமிழ் நாடக உலகின் பாராட்டத்தக்க முயற்சி!

- கே.யுவராஜன், படங்கள்: கே.ராஜசேகரன்


சிறுவர்களாக, பாண்டவர்கள் தன் தந்தையை இழந்து பெரியப்பாவிடம் தஞ்சம் அடைவதில் தொடங்குகிறது நாடகம். அவர்களின் வருகையை விரும்பாத சகுனியும் துரியோதனனும் வெறுப்பை உமிழ்கிறார்கள். பல சதித் திட்டங்களைத் தீட்டி, பாண்டவர்களை அழிக்க நினைக்கிறார்கள். அதை முறியடிக்க பாண்டவர்கள் செய்யும் போராட்டங்களும், கிருஷ்ணர் செய்யும் உதவிகளும் விறுவிறுப்பாக செல்கிறது. தெளிவான உச்சரிப்பு, அசத்தலான நடிப்பு என ஒவ்வொரு சுட்டியும் அசரவைக்கிறார்கள்.  பெரிய தர்பார், குருகுலம், நாகலோகம், மந்திரவாதியின் குகை என அரங்க அமைப்புகளும் தந்திரக் காட்சிகளும் அசத்தவைக்கிறது. கிருஷ்ணனாக நடிக்கும் சிறுவன், அன்றைய சம்பவங்களுக்கு இன்றைய நாட்டு நடப்பையும் மறைமுகமாகச் சொல்லும் வசனங்கள், சிரிக்கவும் சிந்திக்கவும் செய்கின்றன. 100 கௌரவர்களின் பெயர்களை கடகட எனச் சொல்லும் சகுனி, நாகலோகத்தில் நடனம் ஆடும் நாக தேவதை என ஒண்ணரை மணி நேர நாடகத்தில், ஓர் இடத்தில்கூட தடுமாறாமல், அத்தனை பேரும் அசத்தலாக நடித்து, அப்ளாஸ் அள்ளினார்கள்.

- ஷாலினி நியூட்டன்  

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
கதைப் புதையல்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close