சீறும் கருந்துளை!

‘கிணற்றில் போட்ட கல் மேலே வராது’ என்பார்கள். அதுபோல, கருந்துளை (Block hole) மூலம் எதுவும் வெளியேறாது எனும் கருத்து உடைபட்டிருக்கிறது.

சமீபத்தில், எரிமலை சீறுவது போல ‘மர்கரியான் 335’ (Markarian 335) எனும் கருந்துளை, பெரும் ஆற்றலுடன் எக்ஸ் கதிர்களைத் துப்பியதை, நாசாவின் NuSTAR மற்றும் Swift விண்வெளித் தொலைநோக்கிகள் வெளிப்படுத்தி, ‘நான் வேற மாதிரி’ என்று சொல்லியிருக்கிறது.

பெரும்பாலான கோள்களின் மையத்தில் பெரும் நிறைகொண்ட ராட்சச ப்ளாக் ஹோல்கள் உள்ளன. இதில், 32.4 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது மர்கரியான் 335. இது, சூரியனைப் போல ஒரு கோடி மடங்கு நிறைகொண்டது. ஒளிகூட கருந்துளையில் இருந்து வெளிப்பட முடியாது என்பதால், அவை ஒளிர்வது இல்லை. எனினும், பெரும் ஈர்ப்பு ஆற்றலைச் செலுத்தி, அதனைச் சுற்றியுள்ள பொருட்களை கவர்ந்துகொள்கிறது. வெளியிலிருந்து பொருட்கள் சுற்றிச் சுற்றி கருந்துளையில் விழும்போது, அவை ஒளிரும். கூட்டை மொய்க்கும் தேனீக்கள் போல ராட்சச கருந்துளைகளைச் சுற்றி மீ ஆற்றல் துகள்கள், ‘கரோனா’ எனப்படும் மேலடுக்கு மண்டலத்தில் சுற்றிவருகின்றன. இவை, கருந்துளையின் ஆற்றலில் வெப்பம் அடைந்து, எக்ஸ் கதிர்களை வெளிப்படுத்தும்.

2007-ல், மர்கரியான் 335 கரோனாவின் பிரகாசம், முப்பதில் ஒன்றாகக் குறைந்துபோனது. அப்போது முதல் Mrk 335 கருந்துளையை, Swift விண்கலம் உற்றுநோக்கி வந்தது. செப்டம்பர்            2014-ல், Mrk 335-யின் கரோனா எக்ஸ் கதிர்கள் பிரகாசம் திடீரென என அதிகரித்தது. எனவே, இந்தக் கருந்துளையை NuSTAR மற்றும் Swift தொலைநோக்கிகள் மூலம் தொடர்ந்து கண்காணித்துவந்தனர். ஒரு சில நாட்களில், எக்ஸ் கதிர்கள் பிரகாசம் கூடியது. பிறகு, திடும் எனப் பொங்கி எழுந்து, பீய்ச்சி அடிப்பது போல பெரும் ஆற்றலுடன் எக்ஸ் கதிர்களை உமிழ்ந்தது. மிகுந்த ஆற்றல் துகள்கள், ஜெட் போல வெளிப்பட்டன. ஒளியின் ஐந்தில் ஒரு பகுதி வேகத்தில் இந்த துகள்கள் வெளிப்பட்டன. இப்படி, பெரும் ஆற்றலை, கருந்துளை ஒன்று உந்தித் தள்ளிய நிகழ்வைக் கண்டது இதுதான் முதல்முறை.

இயற்கை, இன்னும் எத்தகைய அதிசயங்களைத் தனக்குள் வைத்திருக்கிறதோ என விஞ்ஞானம் வியந்து பார்க்கிறது.

 - த.வி.வெங்கடேஸ்வரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick