Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

36 வருடங்கள் 36ஆயிரம் பாம்புகள்

-பாம்புகளின் தோழன் பூனம் சந்த்

டலூரின் பிரபலங்களைப் பட்டியல் போட்டால், அதில் பூனம் சந்த் பெயரும் இருக்கும். வீடுகள், பள்ளிகள், தொழிற்சாலைகள் என கடலூரைச் சுற்றி எங்கே பாம்பு நுழைந்தாலும், அவருக்கு அழைப்புகள் பறக்கும். அவரைப் பேட்டி எடுக்க செல்போனில் அழைத்தால், ‘‘இப்ப முதுநகரில் ஒரு பாம்பைப் பிடிக்க வந்திருக்கேன். இங்கேயே வாங்களேன்” என்றார்.

நாங்கள் அடிச்சுப்பிடிச்சு அங்கே போனோம். போரில் ஜெயித்த வீரன், வெற்றிவாளை உயர்த்துவது போல பாம்புடன் நின்றிருந்தார். இனி, அவரோடு ஒரு ‘ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்மால் பேட்டி...

 ‘‘நீங்க எத்தனை வருஷமா பாம்பு பிடிக்கிறீங்க?’’

 ‘‘ம்ம்... நான்காம் வகுப்பு படிக்கும்போதே பிடிக்க ஆரம்பிச்சேன். 36 வருஷம் ஆயிடுச்சு. கிட்டத்தட்ட 36,000 பாம்புகளைப் பிடிச்சிருக்கேன்.’’

‘பிடிக்கிற பாம்புகளை என்ன செய்வீங்க?’’

‘‘என் வீட்டுக்குக் கொண்டுபோய், அதுக்கான இரையைக் கொடுத்துவெச்சிருப்பேன். 60 பாம்புகள் சேர்ந்தவுடனே வனத்துறை அனுமதி வாங்கி, வேப்பூர் காட்டுக்குள்ள விட்டுருவேன். இது வரைக்கும் எந்தப் பாம்பையும் கொன்றது இல்லை.”

‘‘பாம்பு ஏன் நம்மளைக் கடிக்குது?’’

‘‘பாம்புகள், நம்மைத் துன்புறுத்தும் நோக்கத்துல கடிக்கிறது இல்லை. தனக்கு ஆபத்து வந்துருமோங்கிற பயத்துல தற்காத்துக்கொள்ளவே கடிக்குது.’’

‘‘பாம்பு கடிச்சா உடனடியாக என்ன செய்யணும்?’’

‘‘பாம்புக் கடியால் விஷம் ஏறி இறப்பவர்களைவிட, பதற்றமும் பயமும் உண்டாகி இறப்பவர்களே அதிகம். அதனால், பதற்றப்படக் கூடாது. காயத்தை சோப் போட்டு ஓடும் நீரில் கழுவணும். காயம் பட்ட இடத்தைக் கூரிய ஆயுதங்களால் கிழிப்பது,  வாய்வைத்து உறிஞ்சுவது தவறு. கடிபட்ட பாகத்தை அசையாது வைத்திருந்தால், ரத்த ஓட்டத்தைத் தாமதப்படுத்த உதவும். கடிவாயின் மேல் கட்டுப் போடுவதன் மூலம், விஷம் ஓர் இடத்திலேயே தங்கும். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். பாம்புக் கடிக்கு அரசு மருத்துவமனைகளில் மட்டும்தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தாமதிக்காமல் செல்வது நல்லது.’’

‘‘பாம்பு விஷத்தில் இருந்தே, விஷமுறிவு மருந்து தயாரிக்கிறார்களாமே, அது எப்படி?”

‘‘பாம்பின் விஷத்தைக் கக்கவைத்து, அதில் குதிரை ரத்தத்தைக் கலந்து விஷமுறிவு மருந்தைத் தயாரிப்பார்கள்.’’

‘‘மிகவும் விஷம் உள்ள பாம்புகள் எவை?’’

‘‘கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், சுருட்டைப் பாம்பு, நல்ல பாம்பு, ஆகியவை.’’

‘‘நாகங்களில் பல வகை இருக்கிறதாமே...’’

‘‘ஆமாம். மஞ்சள், கறுப்பு, வெள்ளை, செம்மண், கோதுமை நிறங்களில் உள்ளன.’’

‘‘மகுடி ஊதினால் பாம்பு ஆடுமா?’’

‘‘சினிமாவில் காட்டுவது போல மகுடிச் சத்தம் கேட்டு பாம்பு வராது. பாம்புக்கு காது கிடையாது. அதன் எதிரே உள்ள பொருள் அசைவதைப் பார்த்து, அதற்கு ஏற்ப அசைகிறது.’’

‘‘பாம்புகளால் நன்மை உண்டா?’’

‘‘பாம்பு, விவசாயிகளின் நண்பன். பயிர்களை அழிக்கும் எலி, அணில் போன்ற விலங்குகளைப் பிடித்துச் சாப்பிடும். இந்த உலகில் நன்மை செய்யாத உயிரினங்கள்னு எதுவும் இல்லை. ஒவ்வோர் உயிரினமும் ஏதாவது ஒரு வகையில் உதவியா இருக்கு.’’

‘‘பாம்பின் நண்பனா இருப்பது எப்படி?’’

‘‘தெருவில் போகும் நாயைக் கல்லெடுத்து அடித்தால், அது பகைவன். நான்கு பிஸ்கட் போட்டால் பின்னால் வரும். அதுபோலத்தான், நாம் தொல்லை கொடுக்காத வரை எந்த உயிரினமும் நமது எதிரி இல்லை. எல்லோரும் நண்பர்கள்தான்.’’

- எம்.ஸ்ரீனிவாசன், என்.லோகேஷ்வரன், பி.எம்.லஷ்மிநாராயணன், எம்.சுபிக்‌ஷா, ஆர்.மோனிகா, எஸ்.ஆதீஸ்வரன், வி.ஹரிஹரன். 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
படிக்காதீங்க...படிக்காதீங்க!
ஜோக்ஸ்
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close