நல்ல டைனோசரும் மாய உலகமும்!

‘தி குட் டைனோசர்’ (The Good Dinosaur)

டைனோசர்கள் 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இனம். திடீரென ஏற்பட்ட ஒரு பேரழிவின் காரணமாக மடிந்ததாகச் சொல்லப்படுகிறது. ‘ஒரு வேளை அந்தப் பேரழிவு நடக்காமல் போயிருந்தால்? வீட்டுக்குச் செல்ல வழி தேடி அலையும் டைனோசரும், ஒரு குகைச் சிறுவனும் நண்பர்களானால்?’

அதுதான், ‘தி குட் டைனோசர்’ (The Good Dinosaur). டைனோசர் இனம் அழிந்ததற்கான காரணமாக சொல்லப்படும் அந்தச் சிறு கோள், பூமியைத் தாக்காமல் திசை மாறிச் சென்றுவிடுகிறது. டைனோசர் இனமும் வழக்கம்போல வாழ்ந்து வருகிறது. ஒருமுறை, அந்தக் காட்டு வழியாகத் தன் தந்தையுடன் செல்கிறது ‘ஆர்லோ’ எனும் டைனோசர். விபத்து ஒன்றில் ஆர்லோவின் தந்தை இறந்துவிட, ஆர்லோ ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறது. பாறை ஒன்றால் தடுக்கப்பட்டு ஒதுங்கும் ஆர்லோ, தன் வீட்டை விட்டு வெகுதூரம் வந்துவிட்டதை அறிந்துகொள்கிறது. பிறகு, ‘ஸ்பாட்’ எனும் குகைச் சிறுவனைச் சந்திக்கிறது ஆர்லோ. இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள். ஸ்பாட்டுடன் சேர்ந்து ஆர்லோ தன் வீட்டை எப்படி அடைகிறது என்பது மீதிக் கதை.

என்ரிகோ மற்றும் பாப் எழுதிய கதையை, இயக்கி இருப்பவர், பீட்டர் சோன். மலை, காடு, புல்வெளி, மின்மினிப்பூச்சிகள், பெரிய பெரிய டைனோசர்கள் என கிராஃபிக்ஸ் கலக்கலாக நகைச்சுவை விருந்து படைக்கும் இந்தப் படம், நவம்பர் 25-ல் வெளிவருகிறது.

ஆலிஸ் த்ரூ தி லுக்கிங் கிளாஸ் (Alice Through the Looking Glass)

த்தனை முறை படித்தாலும் அலுக்காத, எத்தனை வடிவங்களில் பார்த்தாலும் சலிக்காத ‘ஆலிஸ் இன் தி வொண்டர்லேண்ட்’, திரை வடிவிலும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அதன் புது வரவாகத் தயாராகிவருகிறது, ‘ஆலிஸ் த்ரூ தி லுக்கிங் கிளாஸ்’ (Alice Through the Looking Glass).

தந்தையை இழந்த சிறுமி ஆலிஸ். விருப்பம் இல்லாத ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள உறவினர்கள் வற்புறுத்த, விசித்திரமான முயல் ஒன்றின் உதவியோடு மாய உலகுக்குள் சென்றுவிடுவாள். அங்கே நடக்கும் அதிசயங்களும், அதைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளுமே ‘ஆலிஸ் இன் தி வொண்டர்லேண்ட்’ படத்தின் கதை. அதன் இரண்டாம் பாகமே ‘ஆலிஸ் த்ரூ தி லுக்கிங் கிளாஸ்’.

ஆலிஸின் வீட்டுக்குள் ஒரு பட்டாம்பூச்சி நுழைகிறது. அது, அவள் வீட்டில் இருக்கும் கண்ணாடி வழியே நுழைந்து மறைகிறது. கண்ணாடிக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க ஆலிஸ் உள்ளே நுழைகிறாள். அங்கும் ஒரு மாய இடம் இருக்கிறது. அதில் அடங்கி இருக்கும் மர்மங்களைச் சந்திக்கும் ஆலிஸின் பயணமே படம்.

லூயிஸ் கரோல் எழுதிய நாவலின் அடிப்படையில்,  ஜேம்ஸ் பாபின் இயக்கி இருக்கிறார். கடலாக மாறும் வானம், மாயாஜால உயிரினங்கள் எனப் படம் முழுக்க கிராஃபிக்ஸ், திகில் அனுபவத்துடன் ஒரு ஜாலி ரைட் கொடுக்கும். அடுத்த வருடம் மே மாதம் வெளியாகப்போகும் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி, ஹிட் அடித்துள்ளது.

 - பா.ஜான்சன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick