என் பள்ளி என் சுட்டி

டலில் முத்து போல கடலூரின் முத்து, எங்கள் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. 6,000 மாணவப் பூக்களால் மணக்கும் நந்தவனம். 276 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

எங்கள் பள்ளியின் தாளாளர் டாக்டர் இராசேந்திரன், ‘‘1989-ம் ஆண்டு 27 மாணவர்களுடன் தொடங்கிய பள்ளி இது. இந்தப் பள்ளியில் படித்து, இன்று பல்வேறு துறைகளில் ஜொலிப்பவர்கள் பலர். புதுடெல்லியின் இந்திய மருத்துவ ஆய்வுக் கழக (AIMS) விரிவுரையாளர், டாக்டர் பழனிவேல் ராஜன், பெங்களூர் சர் சி.வி.ராமன் அறிவியல் ஆய்வகத்தின் விஞ்ஞானி, இயற்பியலாளர் மு.ராமநாதன், பிரமோஸ் ஏவுகணைத் (DRDA) திட்டத்தின் ஒரே பெண் விஞ்ஞானி, தேன்மொழி ஆகியோர் இங்கு படித்தவர்களே’’ என்றார்.

‘ஆயிஷா’ இரா.நடராசன் என்று சொன்னால் தெரியாதவர்கள் இல்லை. மிகச் சிறந்த குழந்தை எழுத்தாளர். ஏராளமான அறிவியல் புத்தகங்களை அழகுத் தமிழில் எழுதியவர். அவர்தான் எங்கள் பள்ளியின் முதல்வர் என்பதைச் சொல்வதில் பெருமைகொள்கிறோம்.

‘‘படைப்புத்திறனுடன் கூடிய கல்வியே ஒரு மாணவனை உயர்த்தும். ஒரு வகுப்பறையில் கேள்விகள் அதிகம் கேட்பவராக மாணவனும், பதில் சொல்பவராக ஆசிரியரும் இருக்கும்போது, அது சிறந்த கல்வியாக அமையும். அந்த வகையில் இந்தப் பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவரின் தனித்திறனைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துகிறோம்.மாணவர்களே தயாரித்திருக்கும் சுட்டி விகடனின் இந்தப் பள்ளி இதழ், அற்புத யோசனை. வகுப்பறையே வாழ்வாகக்கொண்ட மாணவர்கள் சற்று நேரம் வெளியே வந்து உற்சாகக் காற்றுவாங்கவும் பல திறன்களை வெளிக்கொணரவும் இது நல்ல வாய்ப்பு. இந்த அனுபவத்தை உங்களைப் போல ஒவ்வொரு பள்ளி மாணவர்களும் பெற வேண்டும். அதற்கு பள்ளிகள் துணை நிற்கும் என்று நம்புகிறேன்” எனப் புன்னகைத்தார்.

- நரேன் ரிச்சர்ட், ஆதீஸ்வரன், சுபிக்‌ஷா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick