ஐலன் குர்தியின் கலைந்த கனவு!

‘‘நான் படித்து முடித்து டாக்டர் ஆகப்போகிறேன். எல்லாருக்கும் உதவப்போகிறேன்’’எனப் பெருமையுடன் அறிவிக்கும் அந்தச் சிறுவனின் வயது 10.

‘‘நான் டீச்சர் ஆகப்போகிறேன்’’ எனப்  புன்னகைக்கிறார் ஒரு குட்டிப் பெண்.

ஒரு நொடிகூட யோசிக்காமல் பளிச்சென பதில் அளிக்கிறார் இன்னொரு மாணவர். ‘‘நான் பெரியவன் ஆனதும், அப்பாவைப் போல தொழிற்சாலையில் சேர்ந்து டிட்டெர்ஜென்ட் சோப் தயாரிப்பேன்.’’

இப்படி பிபிசி தொலைக் காட்சியில் பேட்டி கொடுத்த இந்தச் சிறார்கள், அனைவரும் சிரியாவில் இருந்து தப்பி வந்தவர்கள். இவர்களுடைய பெயர்கள் நம் வாயில் நுழையாது. இவர்களுடைய மொழி, ஊர், பாடப் புத்தகங்கள், பாடல்கள், உணவு வகைகள் எதுவுமே நமக்குப் பரிச்சயம் இல்லாதவை. இவர்கள் வாழும் நாட்டின் அரசியல், வரலாறு ஆகியவை இன்னும் சிக்கலானவை.

இருந்தாலும், இவர்களும் நம்மைப் போலத்தான். நண்பர்களுடன் விளையாடுகிறார்கள். இவர்களுக்கு ஜாலியாக கதை பேசவும், கதை கேட்கவும் பிடித்திருக்கிறது. ஸ்கூல் பிடித்திருக்கிறது. அம்மா, அப்பா, தம்பி, தங்கை எல்லோரையும் பிடித்திருக்கிறது. நம்மைப் போலவே இவர்களுக்கும் பல கனவுகள் இருக்கின்றன. அந்தக் கனவுகள் நிஜமாக வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

ஆனால், அது அவ்வளவு சுலபம் அல்ல. நமக்கும் அவர்களுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. வீடு, ஸ்கூல், விளையாட்டு மைதானம் என தங்களுக்குப் பிடித்த அனைத்தையும் விட்டுவிட்டு, புதிய இடத்துக்கு வந்திருக்கிறார்கள். இவர்களுடைய நண்பர்கள், ஆளுக்கொரு மூலைக்குச் சென்றுவிட்டார்கள். இவர்களுக்கு இனி ‘தாய் நாடு’ என்று எதுவும் இல்லை. வீடு இல்லை, சொந்தம் இல்லை, ஆசை ஆசையாகச் சேகரித்துவைத்த விளையாட்டுச் சாமான்கள், பொம்மைகள் அனைத்தையும் போட்டது போட்டபடி வெளியேறிவிட்டார்கள். இப்படி, சிரியாவைவிட்டு வெளியேறி வந்தவர்கள் 40 லட்சம் பேர்.

இவர்கள் அனைவருக்கும் ஒரே பெயர், அகதிகள். இவர்களுடைய தாய் நாடான சிரியா, மிகப் பெரிய உள்நாட்டுப் போரைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ‘ஐஎஸ்ஐஎஸ்’ என்னும் தீவிரவாத அமைப்பு, சிரியாவைக் கைப்பற்றும் நோக்கத்துடன் தாக்குகிறது. பலம் வாய்ந்த இந்த அமைப்பை சிரியா அரசாங்கத்தால் வீழ்த்த முடியவில்லை. அவர்களுக்கு உதவி செய்யவும் யாரும் முன்வரவில்லை.

சிரியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. கம்பெனிகள் இயங்கவில்லை. பல பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் மூடப்பட்டன. வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை பெருகியது. மருத்துவமனைக்குச் செல்ல கையில் காசு இல்லை. காசு கொடுத்தாலும் மருத்துவம் செய்ய டாக்டர் இல்லை.

இதனால், கோபத்துடன் பலர் வீதிகளில் திரண்டு வந்து கண்ணில் பட்ட கடைகளை உடைக்க ஆரம்பித்தார்கள். அரசாங்க அலுவலகங்கள் மூடப்பட்டன. இந்தக் குழப்பமான சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு திருட்டு, கொலை, கொள்ளைகள் அதிகரிக்கத் தொடங்கின. மற்றொரு பக்கம், அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சிகள். சிக்கல் மேல் சிக்கல்.

இப்படி மாட்டித் தவிப்பது சிரியா மட்டுமல்ல. ஈராக், ஆப்கானிஸ்தான், லெபனான், லிபியா, பாலஸ்தீ்னம் எனப் பல நாடுகள் ஆபத்தான நிலையில் இருக்கின்றன. இப்படியொரு நிலைமையில் எப்படிப் படிக்க முடியும்? எப்படி ஹோம்வொர்க் செய்ய முடியும்? எப்படி டாக்டராகவோ, டீச்சராகவோ ஆக முடியும்?

அதனால்தான், பெற்றோர்கள் தங்கள் உயிரைப் பணயம்வைத்து சிரியாவைவிட்டு வெளியேறத் துடிக்கிறார்கள். குழந்தைகளின் எதிர்காலமாவது நன்றாக இருக்கட்டும் என வீட்டையும் நாட்டையும் விட்டு ஓடுகிறார்கள்.

மூன்று வயது ஐலன் குர்தியின் குடும்பமும் இப்படித்தான்  சிரியாவில் இருந்து வெளியேறியது. பக்கத்தில் உள்ள துருக்கிக்குச் சென்று, அங்கிருந்து கிரீஸ், இறுதியாக கனடாவில் வேலை தேடிப் பிழைத்துக்கொள்ளலாம் என்பது ஐலன் குர்தி அப்பாவின் நம்பிக்கை. சிரியாவில் இருந்து கிளம்பி துருக்கிக்குப் போனார்கள். ஆனால், அங்கிருந்து மேற்கொண்டு நகர முடியவில்லை.

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்குப் போக பாஸ்போர்ட் தேவை. சிரியாவில் இருந்து தப்பி துருக்கி வந்தாகிவிட்டது. ஆனால், துருக்கியில் இருந்து கனடா போக, துருக்கி நாடு அனுமதிக்க வேண்டும் அல்லவா? துருக்கி, ‘தனது நாட்டு மக்களுக்குத்தான் பாஸ்போர்ட் கொடுப்போம். சிரியாவில் இருந்து வந்த அகதிகளுக்கு எங்களால் அனுமதி கொடுக்க முடியாது’ என்று மறுத்துவிட்டது.

‘முறையான அனுமதி இல்லாமல் நாங்கள் யாரையும் உள்ளே சேர்க்க மாட்டோம்’ என்று கதவை இறுக்க மூடிவிட்டது கனடா.

ஏதாவதொரு மாயம் நடக்கும் என்று ஐலன் குர்தியின் குடும்பம் மூன்று ஆண்டுகள் துருக்கியில் காத்திருந்தது. பிறகு, வெறுத்துப்போய் ரகசியமாக கிரீஸ் நாட்டுக்கு தப்பித்துச் சென்றுவிட முடிவெடுத்தார்கள். செப்டம்பர் 2, 2015 அன்று ஒரு சிறிய படகில் பயணப்பட்டார்கள். எட்டு பேர் போகவேண்டிய அந்தப் படகில், 16 பேர் நெருக்கமாக உட்கார்ந்துகொண்டார்கள். இதற்காக, மிக அதிகமான கட்டணத்தையும் கொடுத்தார்கள்.

படகுப் பயணம் தொடங்கியது. திடீரென, பாதி வழியில் கவிழ்ந்துவிட்டது. ஐலன் குர்தி, அவன் சகோதரன், அவர்கள் அம்மா மூவரும் கடலில் மூழ்கி இறந்துபோனார்கள். ஐலன் குர்தியின் உடல், துருக்கி கரையில் ஒதுங்கியது. ஒரு பொம்மையைப் போல தலைகுப்புறக்கிடந்த அந்தக் குழந்தையின் படம் வெளிவந்ததும் உலகமே அதிர்ந்துபோனது.

சிரியா பிரச்னை, எவ்வளவு தீவிரமானது என்பது பிறகுதான் தெரியவந்தது. உள்நாட்டுப் போர் ஆரம்பித்து, இது வரை 40 லட்சம் பேர் அகதிகளாகி இருக்கிறார்கள். அவர்களில் பாதி பேர் ஐலன் குர்தியைப் போன்ற குழந்தைகள். அதிகம் பேர் பெண்கள். எங்கெல்லாம் அமைதி பறிபோகிறதோ, அங்கெல்லாம் அதிகம் பாதிக்கப்படுவது இவர்கள்தான்.

பிரிட்டன் தொடங்கி பல நாடுகள்  அகதிகளைத்தான் குறைகூறின. ‘இப்படித் திடீர் திடீரென்று கிளம்பி வந்தால், நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்வது’ என்று, தங்கள் எல்லைக்குள் காவல் படையை நிறுத்தி, வருபவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள் அல்லது சிறையில் அடைத்தார்கள்.

ஐலன் குர்தியின் சம்பவத்துக்குப் பிறகு இந்த நிலை சற்றே மாறியது. அதற்குக் காரணம், அகதிகளை ஆதரித்து ஐரோப்பிய மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்கள்.

‘நாடு, எல்லை, மொழி, மதம், இனம் அனைத்தையும் கடந்து, மனிதர்களை, மனிதர்களாக நடத்த வேண்டும். எங்கே, யார் பாதிக்கப்பட்டாலும் ஆதரிக்க வேண்டும். இன்னொரு ஐலன் குர்தி இறக்கக் கூடாது. இன்னொரு குழந்தையின் கனவு கலையக் கூடாது’ என்ற  முழக்கங்கள் எழுந்தன. பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் நிலையை மாற்றிக்கொண்டு அகதிகளை ஏற்க முன்வந்துள்ளன.

அப்படியானால் சிரியாவின் பிரச்னை தீர்ந்துவிட்டதா? இல்லை. பிபிசிக்கு பேட்டி கொடுத்த அந்த மாணவர்கள் இறுதியாகச் சொன்ன விஷயம் முக்கியமானது.

‘‘எங்களுக்கு சிரியா பிடித்திருக்கிறது. அங்கிருந்து வெளியேற வேண்டும் என நாங்கள் விரும்பவே இல்லை. போர் மட்டும் வராமல் இருந்திருந்தால், எங்கள் நண்பர்களை இழந்திருக்க மாட்டோம். எங்கள் குடும்பத்தினரை இழந்திருக்க மாட்டோம். நாங்கள் போரை வெறுக்கிறோம். இனி, சிரியாவில் மட்டுமல்ல, உலகில் எங்குமே போர் வரக் கூடாது’’ என்கிறார்கள்.

 அமைதி மற்றும் அன்பை விரும்பும் நம் ஒவ்வொருவரின் கனவும் அதுதான்.

 சிரியா, மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு.

 சிரியாவின் தலைநகரம்: டமாஸ்கஸ்

 லெபனான், துருக்கி, ஈராக், ஜோர்டன், இஸ்ரேல் ஆகியவை சிரியாவின் அண்டை நாடுகள்.

 சிரியாவின் அதிபர், பஷார் அல் ஆசாத் (Bashar al-Assad)

 உள்நாட்டுப் பிரச்னை 2011ல் ஆரம்பமானது.

 கிட்டத்தட்ட 2 லட்சம் சிரியர்கள் இது வரை மோதல்களில் இறந்துபோயிருக்கிறார்கள்.

                               - மருதன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick