‘‘டிங் டாங்… பயணிகள் கவனிக்கவும். நாம் இப்போது மெட்ரோ ரயிலில் பறக்கப்போகிறோம்” என ஒரு சிறுவன் சொன்னதும், ரயிலுக்குள் ஆரவாரத்துடன் நுழைந்தார்கள் அந்தச் சுட்டிகள்.
கேம் சென்டர், ஷாப்பிங், தியேட்டர், சொகுசு பஸ் என எதுவுமே இல்லாத ஓர் இடத்தில் நீங்கள் இருப்பதுபோல கற்பனைசெய்ய முடிகிறதா? ஆனால், இவை எதையுமே பார்த்திராத சுட்டிகள் இவர்கள். ரயிலுக்குள்ளேயே பாட்டுப் பாடி நடனம் ஆடினார்கள். ‘‘இதான்டா ஏசி ரயில். எவ்வளவு ஜில்லுனு இருக்கு பாரு” என்றான் ஒருவன்.
‘‘என் பேரு அழகேசன். எட்டாவது படிக்கிறேன். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப் பகுதி மலைக் கிராமங்களில் இருந்து நாங்க வர்றோம். எங்க ஊர்ல பஸ் வசதி குறைவு. சாதாரண ரயிலையே போட்டோவுலதான் பார்த்திருக்கேன். இப்போ, மெட்ரோ ரயிலில் போறேன்னு நினைக்கிறப்ப நம்பவே முடியலை” என்று சொல்லும்போதே அழகேசன் முகத்தில் அத்தனை பரவசம்.
சத்தியமங்கலத்தில் இயங்கி வரும் சுடர் தொண்டு நிறுவனம், சென்னையைச் சுற்றிப்பார்க்க 35 மாணவர்களை அழைத்துவந்திருந்தது. கடற்கரை, கிண்டி உயிரியல் பூங்கா, எழும்பூர் அருங்காட்சியகம் என இரண்டு நாட்கள் உற்சாகமாகச் சுற்றினார்கள் சுட்டிகள்.
சுடர் அமைப்பின் இயக்குநர் நடராஜன், ‘‘மலைக் கிராமங்களில் இருக்கும் இவர்களில் பலர் கரும்பு வெட்டுவது, மூங்கில் வெட்டுவது போன்ற வேலைகளைச் செய்துட்டு இருந்தாங்க. இவங்களைப் பள்ளிக்கு வரவைத்து கல்வி கற்பிக்கும் நோக்கத்தோடு சுடர் அமைப்பை ஏற்படுத்தினோம். மாவட்ட ஆட்சித் தலைவர் உதவியோடு, 2009-ம் ஆண்டு தேசிய குழந்தைத் தொழிலாளர் சிறப்புக் கல்வித் திட்டம் மூலமா, சிறப்புப் பயிற்சிப் பள்ளிகளை ஆரம்பிச்சோம். கடந்த ஏழு வருடங்களில் 14 சிறப்புப் பயிற்சிப் பள்ளிகளை நடத்திட்டு வர்றோம். அதில் எட்டு பள்ளிகள், அரசு துவக்கப் பள்ளிகளாக மாறியிருக்கு. உலகில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள், தொழில்நுட்பங்கள் பற்றி தெரியவைக்கும் ஒரு சிறிய ஜாலி பயணம்தான் இந்தச் சுற்றுலா” என்கிறார் நடராஜன்.
சேதுபதி என்ற மாணவன், “சிறப்புப் பள்ளி மூலமா ரெண்டு வருஷமாதான் ஸ்கூலுக்கே போயிட்டு இருக்கேன். இப்போ, எட்டாவது படிக்கிறேன். சென்னைக்கு வந்தது ரொம்ப ஜாலியா இருக்கு. கடற்கரையில் எம்.ஜி.ஆர் சமாதியைப் பார்த்தேன். தூரத்தில் தெரிஞ்ச கப்பலையும் பார்த்தேன். அண்ணா லைப்ரரிக்குப் போனோம். ரெண்டு நாளும் விதவிதமான சாப்பாடு போட்டாங்க’’ என்றார் உற்சாகமாக.
மெட்ரோ ரயில் பயணம் முடிந்ததும், எழும்பூர் அரசு அருங்காட்சியகத்துக்குச் சென்றார்கள். உள்ளே நுழைந்ததும் ‘‘ஏய், டைனோசர்! அது நம்மளை துரத்தப்போகுது. ஓடுங்க... ஓடுங்க” எனக் கிண்டலாகச் சொன்னாள் ஒரு சிறுமி.
அங்கே பாடம் செய்திருந்த விலங்குகள், பறவைகளை கண்கள் விரியப் பார்த்து வியந்தார்கள். எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, அனைவரின் முகங்களிலும் காட்டுக்குள் சென்று வந்த உணர்வு.
இரண்டு நாள் சென்னைப் பயணம் முடிந்து கிளம்பும்போது ரோஜா என்ற மாணவி, ‘‘எனக்கு, படிச்சு டாக்டர் ஆகணும்னு ஆசை. எங்க ஊர்ல நிறையப் பேருக்கு உடம்பு சரியில்லாமல் போகுது. அவங்களுக்கு உதவி செய்யணும். ‘நீ நல்லா படிச்சு மார்க் எடு. இதே சென்னையில் டாக்டர் படிப்புப் படிக்க ஏற்பாடு பண்றேன்’னு சார் சொல்லி இருக்கார். மறுபடியும் சென்னைக்கு வருவேன்” என்றாள்.
இந்த சென்னைப் பயணம், ரோஜாவைப் போலவே ஒவ்வொரு மாணவர் மனதிலும் எதிர்காலம் பற்றிய கனவு சிறகை விரித்திருந்தது.
- பா.நரேஷ்
படங்கள்: க.சர்வின், ம.நவீன்