பாதுகாப்பாக செல்வோம் பள்ளிக்கு!

ன்றாடம் செய்யும் சிறு சிறு வேலைகளில்கூட பாதுகாப்பு வழிகளைப் பின்பற்றவேண்டியது அவசியம். நாம் பாதுகாப்பாக இருப்பதோடு, நம் கவனக் குறைவால் அடுத்தவருக்கு ஏற்படக்கூடிய ஆபத்தையும் தவிர்க்கலாம். குறிப்பாக, வீட்டிலிருந்து பள்ளிக்கும், பள்ளியிலிருந்து வீட்டுக்கும் செல்லும்போது, கவனத்தில்கொள்ளவேண்டிய சின்னச் சின்ன டிப்ஸ்...

நடந்து செல்லும்போது...

 புத்தகம் வாசித்துக்கொண்டோ, பேசிக்கொண்டோ, நடக்கக் கூடாது. எப்போதும் நடைபாதையில் மட்டுமே நடக்க வேண்டும். நடைபாதை இல்லாத சாலைகளில், வலது ஓரமாக நடக்கவும்.

 சுரங்கப்பாதை, நடை மேம்பாலங்கள் உள்ள இடங்களில் அவற்றை மட்டுமே பயன்படுத்தவும்.

 சாலையைக் கடக்கவேண்டிய இடத்தில், சிக்னலைக் கவனித்து, வாகனங்கள் சென்ற பிறகு கடக்கவும்.

 கூட்டமாக இருக்கும் இடங்களில் நின்று வேடிக்கை பார்க்க வேண்டாம்.

சைக்கிளில் செல்லும்போது...

 

 எப்போதும் சாலையின் இடதுபுறத்திலேயே சைக்கிளை ஒட்டவும். சைக்கிளைத் திருப்பும்போது, நம் பின்னே வேறு வாகனங்கள் வருகிறதா எனப் பார்த்தும், சைகை காட்டிய பிறகும் திருப்பவும்.

 புத்தகப் பை, உணவுப் பை ஆகியவற்றை சைக்கிளில் மாட்டிச் செல்லும்போது கவனம். சிறுமிகள், துப்பட்டாவை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும்.

 சாலைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் கார் கதவுகள் திடீரென திறக்கப்படலாம். எனவே, மற்ற வாகனங்களிடம் இருந்து  தள்ளியே சைக்கிளை ஒட்ட வேண்டும்.

 மற்ற வாகனங்களை முந்த வேண்டும் என்ற எண்ணம் வேண்டவே வேண்டாம்.

பேருந்தில் செல்லும்போது...

 எந்தக் காரணத்தைக்கொண்டும் ஓடும் பேருந்தில் ஏறவோ, இறங்கவோ செய்யாதீர்கள். படிக்கட்டில் பயணம் செய்வது அறவே கூடாது.

 பேருந்துக்காகக் காத்திருக்கும்போது பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டும் நில்லுங்கள். பேருந்தை ஒட்டி நடப்பதைத் தவிருங்கள்.

 பேருந்தில் ஏறியதும் மையப் பகுதிக்குச் சென்றுவிடுங்கள். அடுத்த ஸ்டாப்பில்தான் பள்ளி என படிக்கட்டு அருகே நிற்பது ஆபத்து.

 பேருந்தில் பயணம் செய்யும்போது, தெரியாதவர்களிடம் பேச்சுக்கொடுப்பதைத் தவிருங்கள்.

 ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருக்கும்போது, கையை ஜன்னல் கம்பி மீது வைக்காதீர்கள். பக்கத்தில் செல்லும் பேருந்து உரசக்கூடும். ஜன்னல் கண்ணாடி திடீரென இறங்கிவிடலாம் ஜாக்கிரதை.

ஆட்டோக்களில் செல்லும்போது...

 கம்பிகளில் உட்கார்ந்து பயணிப்பது கூடவே கூடாது. ஆட்டோவுக்குள்தானே இருக்கிறோம் என அலட்சியம் கூடாது. ஆட்டோ சாலை திருப்பங்களில் திரும்பும்போதும், நிற்கும்போதும் கம்பியைப் பிடித்துக்கொள்ளுங்கள்.

 இன்னொருவர் மடியில் நீங்கள் உட்கார்ந்தோ,  இன்னொருவர் உங்கள் மேல் உட்கார்ந்தோ பயணம் செய்வதெல்லாம் வேண்டாம்.

 எந்த வகையில் பயணம் செய்தாலும், உங்கள் வீட்டு முகவரி மற்றும் பெற்றோரின் தொலைபேசி எண்ணை மனப்பாடமாக தெரிந்துகொள்ளுங்கள். இந்தப் பாதுகாப்பு முறைகளை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
 

 

- கோ.இராகவிஜயா
படம்: அ.குரூஸ்தனம்
ஓவியங்கள்: ராஜேஷ் ஆர்.வி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick