மைடியர் ஜீபா!

‘‘ஹாய் ஜீபா... வெள்ளியங்கிரி மலையைப் பற்றி கொஞ்சம் சொல்லேன்’’ 
 
- எஸ்.சக்திபாலன், வேலாண்டிபாளையம்.

‘‘கோயம்புத்தூரிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில், மேற்கு மலைத் தொடரில் வெள்ளியங்கிரி மலை அமைந்திருக்கிறது. இந்த மலையின் உச்சியில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. இது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 6,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அங்கு செல்ல, ஆறு மலைகள் ஏற வேண்டும். பூண்டி எனும் ஊரின் அடிவாரத்தில் இருந்து பயணம் தொடங்க வேண்டும். முதல் மலையில், பலவித மூலிகைச் செடிகள் இருக்கின்றன. இரண்டாம் மலையில், மரங்களிடையே புகுந்து செல்ல வேண்டும். இங்கு பாம்பாட்டிச் சுனை இருக்கிறது. மூன்றாம் மலையில், வழுக்குப் பாறைகள் அதிகம். இங்கு, கைதட்டிச் சுனை உள்ளது. நான்காம் மலை, வெண்மையான தரைப் பகுதிகொண்டது. சமவெளித் தோற்றம்தரும் ஐந்தாம் மலையில், கடுமையான குளிர் காற்று வீசும். இங்கு, குறிஞ்சிப் பூக்களைப் பார்க்கலாம். ஆறாவது மலையை, சந்தன மலை என அழைக்கிறார்கள். சந்தனம், வாசனைப் புற்கள், ஜவ்வாது, மிளகு போன்ற மருத்துவத் தாவரங்கள் நிறைந்திருக்கும். ஏழாவது மலையில்தான் கோயில் உள்ளது. இந்த மலை, சித்தர்கள் வாழ்ந்த இடம் என்பது குறிப்பிடத்தக்கது.’’

 ‘‘ஹாய் ஜீபா... வருமான வரி என்று சொல்கிறார்களே அது பற்றிய தகவல் ப்ளீஸ்...” 
 
- கா.அட்சயா. நீர்விளங்குளம்.

ரு நபர் சம்பாதிக்கும் வருமானத்துக்கு  வரி விதிப்பது என்பது, மன்னர்கள் காலத்திலிருந்தே இருக்கிறது. வயலில் விளையும் தானியங்களையே வரியாகச் செலுத்தும் முறைகளும் இருந்தன. சுதந்திரம் பெற்ற இந்தியாவில் வருமான வரிச் சட்டம், 1961-[1] இந்திய பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, 01-04-1962 முதல், இந்திய வருமான வரிச் சட்டம் செயல்பட ஆரம்பித்தது. வருமான வரித் துறை உருவாக்கப்பட்டு, வருமான வரியைச் சரி பார்த்தல் மற்றும் வசூல் செய்தல் ஆகிய பணிகளைச் செய்துவருகிறது. இந்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இந்த வருமான வரித் துறை இயங்கிவருகிறது.  ஒவ்வொருவரின் ஆண்டு வருமானத்தில் இருந்தும் வருமான வரி நிர்ணயிக்கப்படுகிறது.         60 வயதுக்கு உட்பட்டோர்க்கு 2,50,000 ரூபாய் வரையும் வரிகள் கிடையாது. அதற்கு மேல் வரும் வருமானத்துக்கு 10, 20, 30 சதவிகிதம் வரி வசூல் செய்யப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 3 லட்சமும், 80 வயதுக்கு மேற்பட்ட மிக மூத்த குடிமக்களுக்கு 5 லட்சம் வரையும் வருமான வரி கிடையாது. சேவை மனப்பான்மையுடன் நல்ல பணிகளுக்கு உதவுவதற்கு வரி விலக்கு பெறும் திட்டமும் உள்ளது.’’

‘‘டியர் ஜீபா... இப்போது அதிக அளவில் பயன்படுத்தப்படும் யூ டியூப், எப்போது தொடங்கப்பட்டது?”

- எஸ்.திலிப் குமார், ஈரோடு.

புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் உன் ஆர்வத்துக்கு வாழ்த்துகள் திலிப்.       யூ டியூப் என்பது, வீடியோக்களைப் பார்க்க உதவும் ஓர் இணையதளம். ஆறு மில்லியனுக்கும் அதிகமான வீடியோக்கள் இருக்கின்றன. நம்முடைய இதில் வீடியோக்களையும் இதில், இணைக்க முடியும். 2005-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அமெரிக்காவில் உள்ள பேபால் (paypal) எனும் நிறுவனத்தின் சாட் ஹர்லி, ஸ்டீவ் சென் மற்றும் ஜாவேத் கரீம் (Chad Hurley, Steve Chen, and Jawed Karim) இணைந்து தொடங்கியதுதான் யூ டியூப். அதே ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி, மீ அட் த ஜூ (Me at the zoo) எனும் தங்களின் முதல் வீடியோவைப் பதிவிட்டனர். (https://www.youtube.com/watch?v=jNQXAC9IVRw) அந்த வீடியோ, 2 கோடியே 66 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தை 2006-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் வாங்கியது. இதன் தலைமை இடம், கலிஃபோர்னியா மாகாணத்தின் சான்புரூனோவில் அமைந்துள்ளது.

சமையல் செய்வது முதல் அறிவியல் சோதனைகள் வரை அனைத்துக்கும் பயிற்சி முறை வீடியோக்கள் இதில் உள்ளன. யூ டியூப் கல்விச் சேவையிலும் ஈடுபடுகிறது. மாணவர்கள், பாடங்களை யூ டியூபில் வீடியோவாகப் பார்க்க முடியும். யூ டியூபில் வீடியோ பதிவேற்றம் செய்ய எந்தவிதக் கட்டணமும் இல்லை. பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் உதவியோடு மாணவர்கள்  இந்தத் தளங்களைப் பயன்படுத்தலாம்.’’

 ‘‘ஹாய் ஜீபா... கிட்டப்பார்வை, தூரப்பார்வைக் குறைபாடுகளை சத்துள்ள காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதால் சீர் செய்ய முடியுமா?” 
 
- செ.தாரகை, பூம்புகார்.

கிட்டப்பார்வை, தூரப்பார்வைக் குறைபாடு வருவதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, வயது அதிகமானதால் வருவது. மற்றொன்று, முறையான கண் பராமரிப்பு இல்லாததால் வருவது. குழந்தைகள்  மற்றும் இளைஞர்கள், செல்போன், டிவி, லேப்டாப் என டிஜிட்டல் சாதனங்களில் அதிக நேரம் பொழுதைப் போக்குபவர்களாக இருந்தால், நிச்சயம் கிட்டப்பார்வை, தூரப்பார்வைக் குறைபாடு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். வைட்டமின் ஏ சத்துள்ள காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்வதன் மூலமும், டிஜிட்டல் சாதனங்களை அளவோடு பயன்படுத்துவதன் மூலமும், கண் நோய்கள் வருவதை ஓரளவுக்குத் தடுக்க முடியும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற பிரச்னைகள் வந்த பிறகு காய்கறிகள், பழங்கள் மூலம் சரிசெய்ய வாய்ப்பு இல்லை. ஆனால், மேற்கொண்டு கண் பார்வை பாதிப்படைவதைத் தடுக்க முடியும். எனவே, வைட்டமின் ஏ சத்துள்ள கேரட், பப்பாளி, மாம்பழம், மீன், கீரை போன்றவற்றை அதிகம் உட்கொள்ளுங்கள். வயதானவர்களுக்கு கிட்டப்பார்வை, தூரப்பார்வை பிரச்னை இருந்தால், காட்ராக்ட் போன்ற பிரச்னைகள் வராமல் இருக்க, ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த வைட்டமின் சி, வைட்டமின் இ சத்துள்ள உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.’’

ஓவியம்:ஜெயசூர்யா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick