சுட்டி ஸ்டார் நியூஸ்!

டேபிள் திராட்சை!

டேபிள் ஸ்பூன், டேபிள் டென்னிஸ் தெரியும். இது என்ன டேபிள் திராட்சை?

திராட்சை வகைகளில் ஒன்றுதான் இந்த டேபிள் திராட்சை. இதில் இருந்து ஜூஸ் தயாரிக்க முடியாது. பறித்த உடன் ஃபிரெஷ் ஆக மட்டுமே சாப்பிட முடியும். டைனிங் டேபிளில் வைத்து சாப்பிடும் திராட்சை என்பதால், ‘டேபிள் திராட்சை’ எனப் பெயர்பெற்றது. இதில், சர்க்கரைச் சத்து குறைவு. சுல்தானா, மஸ்கட் என டேபிள் திராட்சையில் பல வகைகள் உள்ளன.

இரா.அனிதா
புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப் பள்ளி, சேலம்.

வெள்ளி விழா நாயகன்!

குழந்தைகளின் நகைச்சுவை நாயகனான ரோவன் அட்கின்ஸன் (Rowan Atkinson), மிஸ்டர் பீன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்து 25 வருடங்கள் ஆகின்றன. இந்த வெள்ளி விழா உற்சாகத்தை மக்களோடு கொண்டாட எண்ணிய ரோவன், இங்கிலாந்தின் பக்கிங்காம் அரண்மனை முன்பு, தனக்கு மிகவும் பிடித்த கார் மற்றும் டெடிபியர் பொம்மையுடன் தோன்றி, நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். 60 வயதாகும் ரோவனின் உற்சாகத் துள்ளலை அனைவரும் கண்டு ரசித்தனர்.

பா.பவன் சுப்பு
பெசன்ட் அருண்டேல் சீனியர் செகண்டரி ஸ்கூல், திருவான்மியூர், சென்னை-41.

26 வயதினிலே...

பூனைகள் பெரும்பாலும் 14 வயது வரைதான் உயிர் வாழும். ஆனால், ‘கார்டுராய்’ (Corduroy) என்கிற பூனை 26 வயது வரை வாழ்ந்து, கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ‘‘1989 ஆகஸ்ட் முதல் தேதி, எங்கள் கார்டுராய் பிறந்தது. அதன் 26 வயதின் பிறந்தநாள் பரிசாக, ஒரு எலியை வாங்கிவந்து சாப்பிடக் கொடுத்தோம்’’ எனச் சிரிக்கிறார், இதனை வளர்த்து வரும் ஆஷ்லீ ரீட்.

ஜெ.ஸ்ரீநிதி
P.S.B.B.மில்லெனியம் ஸ்கூல், கடலூர்.

மீன் பிடிக்கும் விமானம்!

ட்ரோன் எனப்படும் சிறிய விமானங்கள், புகைப்படம் எடுக்கவும், கொரியர் சேவை மற்றும் மருத்துவ முதலுதவிகள் செய்யப் பயன்படுகின்றன. இப்போது, அமெரிக்க நிறுவனம் ஒன்று புதிய வகை ட்ரோன் விமானத்தை வடிவமைத்திருக்கிறது. இந்த விமானம், ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளுக்கு மேலே பறந்துசென்று மீன்களைப் பிடிக்கும் தன்மையுள்ளது. ரேடார் வசதியுடன் தண்ணீரின் ஆழத்தில் உள்ள  மீன்களைத் தேடும் சோனார் தொழில்நுட்பமும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள ரேடார், 120 அடி ஆழத்தில் உள்ள மீன்களையும் கண்டுபிடிக்குமாம். மீன்கள் இருக்கும் இடத்தை துல்லியமாகக் கண்டறிந்த பிறகு, இந்த ட்ரோன் நம்மிடம் திரும்பி வந்துவிடும். உடனே, அதில் உள்ள சோனார் கருவியைக் கழற்றிவிட்டு, மீன்பிடிப் பொறி ஒன்றைப் பொருத்தி, மறுபடியும் அனுப்ப வேண்டும். மீனைக் கண்டுபிடித்த அதே இடத்துக்குச் சென்று, மீன் பொறியைப் போட்டு மீன்களைப் பிடிக்கும். பொழுதுபோக்குக்காக மீன் பிடிப்பவர்களுக்கு மகிழ்வைத் தரும் இந்த பறக்கும் ட்ரோன்களை, தொழில்முறை மீனவர்களும் உபயோகப்படுத்த முடியும் என்கிறார்கள்.

ச.மதுரவாணி,
ஜேப்பியார் பள்ளி, செம்மஞ்சேரி, சென்னை.

கறுப்புப் பெட்டி!

 விமான விபத்து என்றதும் நினைவுக்கு வருவது கறுப்புப் பெட்டி.  ஏனெனில், விபத்தின் காரணம் அதில்தான் பதிவாகும். அந்தக் கறுப்புப் பெட்டி பற்றிய சில துளிகள்...

 கறுப்புப் பெட்டியின் உண்மையான பெயர் FLIGHT DATA RECORDER.

 கறுப்புப் பெட்டி எனச் சொல்லப்பட்டாலும், பார்த்தவுடன் கண்டுபிடிக்க வசதியாக, இந்தப் பெட்டி ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

 விமானம், தரையிலிருந்து மேலெழுந்து பறக்கத் தொடங்கியதும்,  அதன் வேகம், விமானிகளின் உரையாடல், சீதோஷ்ண நிலை மற்றும் என்ஜினின் வெப்பநிலை போன்ற விவரங்களை கறுப்புப் பெட்டி பதிவுசெய்ய ஆரம்பிக்கும்.

 விமான விபத்து ஏற்பட்ட நேரத்தில் இருந்து, அதற்கு முந்தைய இரண்டு மணி நேரத்தில் பதியப்பட்ட தகவல்களை இந்தப் பெட்டியிலிருந்து பெறலாம்.

 விமான விபத்துகளுக்குப் பிறகு, பெரும்பாலும் கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுவிடும்.

எஸ்.ப்ரஸித்தா
வைரம்ஸ் மெட்ரிக் மே.நி.பள்ளி, புதுக்கோட்டை.

அருவி உணவகம்!

அருவிகளில் குளிப்பவர்களுக்கு, அடுத்த சில நிமிடங்களில் சுடச்சுட சுவையான சாப்பாடு சாப்பிடப் பிடிக்கும். அருவியை ஒட்டியே உணவகம் இருந்தால் வசதியாக இருக்கும்.  அப்படிப்பட்டவர்களைக் கவரும் நோக்கில், அருவியை ஒட்டிய உணவகம் ஒன்று பிலிப்பைன்ஸ் நாட்டில் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதுவும் எப்படி? நீர்வீழ்ச்சியில் இருந்து வெளிவரும் தண்ணீரின் மீது அமர்ந்தபடி சாப்பிடுவதற்கு இருக்கைகள் அமைத்திருப்பதுதான் இந்த உணவகத்தின் சிறப்பம்சம்.

இரா.விஷ்வா
தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளி, தேவகோட்டை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick