சுத்த சைவம் மிஸ்டர் நரியார்!

ந்தக் காட்டில் பெரிய ஆலமரம் இருந்தது. அந்த மரத்தில் ஏகப்பட்ட குரங்குகள், அணில்கள், பறவைகள் வசித்து வந்தன. அந்த மரத்தின் கீழே இருந்த பெரிய பொந்தில், ஒரு முயல் தனது குட்டிகளோடு சுகமாக வாழ்ந்து வந்தது.

ஒரு நாள், அந்த வழியாக வந்த நரி ஒன்று, முயல் குட்டிகளைக் கண்டது. ‘‘ஆஹா, ஒவ்வொரு குட்டியும் கொழுகொழு என இருக்கு. ஒரு குட்டியைப் பிடித்தால்,  மற்றவை தப்பிவிடும். மொத்தக் குட்டிகளையும் வேட்டையாடணும்” என்று முடிவு செய்தது.

‘‘என்ன நரியாரே, இங்கே என்ன வேலை?” என்று பொந்துக்குள் இருந்தவாறே முறைத்தது தாய் முயல்.

‘‘தப்பா நினைக்காதே முயலம்மா. உன் குட்டிகளின் அழகை ரசிச்சேன். நானும் என் குட்டிகளும் எப்பவோ சைவத்துக்கு மாறிட்டோம்’’ என்றது நரி.

‘‘என்னது, சைவத்துக்கு மாறிட்டீங்களா?” என்று நம்பாமல் பார்த்தது முயல்.

‘‘அது ஒரு கதை. ஆற்றங்கரையில் ஒரு முனிவர் இருக்கிறாரே பார்த்திருக்கியா? ஒரு நாள் பசியோடு அங்கே போனேன். முனிவரின் குழந்தை தொட்டிலில் தூங்கிட்டு இருந்துச்சு. அந்தக் குழந்தையைத் தூக்கிட்டு ஓடப் பார்த்தேன். முனிவர் சும்மா விடுவாரா? ‘இன்று முதல் நீயும் உன் குட்டிகளும் அருகம்புல் சாப்பிடும் சைவப் பிராணிகள் ஆவீர்களாக?’னு சாபம் கொடுத்துட்டார். இப்போ, வேறு நரிக்குட்டிகள் என் குட்டிகளை விளையாட சேர்த்துக்கிறது இல்லை’’ என்றது நரி.

‘‘அடடா... உன் கதையைக் கேட்கவே வருத்தமா இருக்கு. நாளைக்கே உன் குட்டிகளைக் கூட்டிட்டு வா. என் குட்டிகளோடு விளையாடட்டும்” என்றது தாய் முயல்.

“ரொம்ப நன்றி” எனச் சொல்லிவிட்டு குஷியோடு சென்றது நரி.

இதையெல்லாம் மரத்தின் மீது இருந்து கவனித்துக்கொண்டிருந்த குரங்கு ஒன்று, கீழே இறங்கி வந்து, ‘‘என்ன முயலம்மா, நரியோடு ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தீங்க போல” என்றது.

‘‘ஆமாம். முனிவர் கொடுத்த சாபத்தால்...” என்று தாய் முயல் சொல்ல வர, குறுக்கிட்டது குரங்கு.

‘‘எல்லாத்தையும் கேட்டேன். நரியின் தந்திரபுத்தி பற்றித் தெரியாதா உனக்கு? இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கு. தந்திரத்தை தந்திரத்தால் ஜெயிப்போம். எங்கள் கூட்டமும் அணில், பறவைகள் கூட்டமும் உனக்கு உதவும். நான் சொல்றபடி செய்யணும்” என குரங்கு கிசுகிசுத்தது.

மறுநாள்... நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு ஆலமரம் நோக்கி வந்தது நரி. ‘என் குட்டிகள் இங்கே வரத் தயங்குதுங்க. நீங்க சேர்த்துக்க மாட்டீங்கனு நினைக்குதுங்க. இன்னிக்கு மட்டும் உன் குட்டிகளை என் இடத்துக்கு அனுப்பி வை. என் குட்டிகளுக்கு நம்பிக்கை வரும். அப்புறம், இங்கே வந்து விளையாடும்’ என்று சொல்லி அழைத்துச் செல்வதுதான் நரியின் திட்டம்.

ஆலமரத்தை நெருங்கிய நரி, பொந்தின் வாசலில் ஒரு குட்டி முயல் பரபரப்போடு இருப்பதைக் கண்டது.

‘‘என்ன குட்டிப் பயலே, என்ன வேடிக்கை? உன் அம்மா எங்கே?’’ எனக் கேட்டது நரி.

‘‘மாமா, உனக்கு விஷயம் தெரியாதா? இந்த இடத்தில் பூகம்பம் வரப்போகுதாம். பாதுகாப்பான வேறு இடத்தைப் பார்த்துட்டு வர்றதுக்காக அம்மா போய் இருக்காங்க” என்றது குட்டி முயல்.

‘‘பூகம்பமா... யார் சொன்னது?” எனக் கேட்டது நரி.

‘‘உங்களுக்கு சாபம் கொடுத்து சைவத்துக்கு மாற்றிய அதே முனிவர்தான்” என்றது குட்டி முயல்.

அப்போது, மரத்தில் மறைந்திருந்த குரங்குகள், கிளைகளை வேகவேகமாக ஆட்டின. பறவைகள் நான்கு திசைகளிலும் பறந்தன. அணில்கள் குதித்து ஓட்டம்பிடித்தன.

‘‘என்ன குட்டிப் பயலே... உங்க அம்மா இன்னும் வரலையா? சீக்கிரம் இந்த இடத்தை விட்டு ஓடுங்க. ஆலமரம் வேரோடு சாய்ஞ்சுரும் போலிருக்கு” என்றபடி ஒரு அணில் ஓடியது.

‘ஆகா... இது என்னடா சோதனை’ என நினைத்த நரி, எல்லோருக்கும் முன்னதாக ஓட்டம் பிடித்தது.

உடனே மற்ற விலங்குகள் நின்றுவிட்டன. ‘‘பயல் ஓடுற வேகத்தைப் பார்த்தால், எதிர்ல சுனாமி வந்தாலும் தெரியாதுபோல” என்றது குரங்கு.

எல்லா விலங்குகளும் சிரித்தன.

- வர்தினி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick