"உங்கள் குழந்தைகளை நம்புங்க!'

 சியாவின் யங் சினிமா காஸ்ட்யூம் டிசைனர், ஆசியாவின் யங் கோரல் பெயின்டர் எனப் பெயருக்கு முன்னால் ஏகப்பட்ட ஆச்சர்யங்கள் கொடுக்கிறார், சென்னை, கோட்டூர்புரம் ஏ.எம்.எம் பள்ளியில்  10-ம் வகுப்புப் படிக்கும் வருணா ஸ்ரீதர்.
 
‘‘என் அப்பா ஸ்ரீதர், ஒரு ஆர்ட்டிஸ்ட். எனக்கு விவரம் தெரிஞ்ச நாளில் இருந்தே என்னைச் சுற்றி  ஓவியங்களா இருக்கும். அப்பா கையைப் பிடிச்சு நானும் ட்ராயிங் கத்துக்கிட்டேன். ஆறு வயசுல முதல் ஆர்ட் எக்ஸிபிஷன் நடத்தினேன். மும்பை, டெல்லி என இது வரை 13 எக்ஸிபிஷன் நடத்தி இருக்கேன். ஸ்பெயின் நாட்டின், பீஸ் பால்ஸ் ஃபவுண்டேஷன் (peace pals foundation) நடத்திய சர்வதேச ஓவியப் போட்டியில் முதல் பரிசு வாங்கி இருக்கேன். 25,000 பேர் கலந்துக்கிட்ட போட்டி அது’’ என்கிறார் வருணா ஸ்ரீதர்.

‘‘ஓவியத்தில் இருந்து சினிமா காஸ்ட்யூம் டிசைனர் ஆனது எப்படி?’’

‘‘என் அப்பா, ‘மய்யம்’ என்ற படத்தின்  தயாரிப்பாளர். ‘இந்தப் படத்துக்கு காஸ்ட்யூம் டிசைனர் நீதான்’னு சொன்னப்ப, காமெடி பண்றதா நினைச்சேன். ஆனா, ‘நிஜமாத்தான் சொல்றேன். உன்னால முடியும்’னு சொல்லி ஊக்கப்படுத்தினார். படத்துக்கு காஸ்ட்யூம் டிசைன் பண்ணியதோடு, கன்டினியூட்டி செக்கிங் வேலையும் செய்தேன். ஒவ்வொரு நாளும், ஹீரோயினியின் நெயில் பாலிஷ், முடி என எல்லாத்தையும் செக் பண்ணணும். ஒரு காட்சியைப் பாதியிலேயே நிறுத்தி, பேக்கப் சொல்லிடுவாங்க. அடுத்த நாள் அந்த சீனை எடுக்கும்போது, ஹீரோயின் தலைமுடி லேசா மாறியிருந்தாலும் சரி செய்யணும். பின்னி மில்லில் ஷூட்டிங் நடக்கும். கொசு, பூச்சிகள் தொல்லைகளையும் சமாளிச்சு, வீட்டுக்கு வர்றதுக்கு அதிகாலை நாலு மணி ஆகும். அப்புறம் ஸ்கூல். இப்படி நிறைய மறக்க முடியாத அனுபவம் கிடைச்சது”

‘‘மய்யம் படத்தின் வேற ஸ்பெஷல் விஷயங்கள்?’’

‘‘செம த்ரில் படம். ஒரு இரவு முழுக்க நடக்கும் கதை. விடியிறதுக்குள்ள தப்பிக்கணும். ஏன், எதுக்கு, என்னவெல்லாம் நடக்குதுங்கிறதுதான் படத்தோட கான்செப்ட். ஸாரி, இதுக்கு மேலே கதையைப் பற்றிச் சொல்ல முடியாது. படத்தின் டைரக்டர்,  இன்ஜினீயரிங் நான்காம் வருஷம் படிச்சுட்டு இருக்கிற ஆதித்யா பாஸ்கர்.  கமல் அங்கிளும் கவுதமி ஆன்டியும்தான் மியூசிக் ரிலீஸ் பண்ணாங்க. இந்தப் படத்தில், ரோபோ ஷங்கர் அங்கிளுக்கு ஒரு டிரெஸ் டிசைன் பண்ணி இருக்கேன். என்னோட ஓவியங்களை  கொலாஜ் பண்ணி உருவாக்கின அந்த டிரெஸ்,  என்னோட ஸ்பெஷல்னு சொல்லலாம்.’’

‘‘அடுத்து என்ன பண்ணப்போறீங்க?’’

‘‘ஃபேஷன், காஸ்ட்யூம் பத்தி இன்னும் தெரிஞ்சுக்கணும். ‘பரதேசி’, ‘பாகுபலி’ மாதிரியான படங்களுக்கு காஸ்ட்யூம் பண்ணணும். இங்கே ஃபேஷன் ஷோ எல்லாமே வெஸ்டர்ன் ஸ்டைல்ல இருக்கு. சம்பந்தமே இல்லாத டிசைன்ல, இது என்னப்பா டிரெஸ்னு சொல்ற மாதிரி வர்றாங்க. ஃபேஷன் ஷோவில் போட்டுக்கிட்டு வர்ற பெரிய பெரிய குடை கவுனோ அல்லது டாப்ஸையோ போட்டுக்கிட்டு வெளியே வர முடியுமா? அப்படி இருக்கிறப்ப, அதை டிசைன் செய்றதால என்ன யூஸ்? ஃபேஷன் ஷோவுலயும் பிராக்டிக்கல்  இருக்கணும். அதுதான் மக்கள்கிட்ட போய்ச் சேரும். அதுக்கு ஏற்ற மாதிரி என்னுடைய ஃபேஷன், மாடலிங் விஷயங்கள் இருக்கும்.

என்னோட டிசைனிங்ல நானே பொட்டிக் ஷோரூம், பக்கத்திலேயே ஒரு ஃபுட் ஷாப் வைக்க ஆசை. டிராயிங்ல இன்னும் நிறைய கோர்ஸ் முடிக்கணும். அதுக்கான டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ணிட்டு இருக்கேன். மலேசியா, சிங்கப்பூரில் ஸ்பெஷல் கோர்ஸ் இருக்கு. அங்கே போகணும். இப்படி ரொம்பப் பெரிய லிஸ்ட் இருக்கு. சின்னப் பொண்ணுனு நினைக்காம, என் அப்பா என்னை நம்பி காஸ்ட்யூம் டிசைன் வாய்ப்பு கொடுத்தார். அதே மாதிரி, ஒவ்வொரு பெற்றோரும் அவங்க குழந்தைகளை முழுமையா நம்பணும். ‘உன்னால முடியும். செய்து பார்’னு வாய்ப்பு கொடுக்கணும்.அது,அவங்களை உற்சாகப்படுத்தும்” என அழகான மெஸேஜ் சொல்லி புன்னகைக்கிறார் வருணா ஸ்ரீதர்.   


 
- ஷாலினி நியூட்டன்
படம்: க.பாலாஜி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick