"சுத்தமான இந்தியா உருவாக வேண்டும்!"

‘‘தினமும் ஸ்கூலுக்கு வரும்போது, தெருவெல்லாம் குப்பையா இருக்கிறதைப் பார்ப்பேன்.  நம்மால் ஊர் முழுக்க சுத்தம் செய்ய முடியலைனாலும், நம்ம ஸ்கூலை, நம்ம தெருவையாவது சுத்தம் செய்ய ஒரு கருவியைக் கண்டுபிடிக்கலாமேனு நினைச்சேன். அப்படி உருவானதுதான் இந்த குப்பை சேகரிக்கும் வண்டி” என்கிறார் வடிவழகன்.

திருவாரூர் மாவட்டம், தென்குவளவேலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார் வடிவழகன். இந்தக் கண்டுபிடிப்புக்காக, மாநில அளவிலான இன்ஸ்பயர் போட்டியில் தங்கப் பதக்கம் வாங்கி இருக்கிறார். அக்டோபர் மாதம்  புது டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ள, இவரது குப்பை சேகரிக்கும் வண்டி தகுதி பெற்றிருக்கிறது.

தனது கண்டுபிடிப்பைக் காண்பித்து விளக்கினார் வடிவழகன். ‘‘மணல் பகுதியில் இருக்கும் குப்பைகளைச் சேகரிக்கும் வகையில்  இதை உருவாக்கி இருக்கேன். ஆணிகள் பொருத்தப்பட்ட  உருளையின் மீது, கனமான சாக்கு ஒன்று விரிப்பானாக இருக்கும். முன்பகுதியில் சக்கரங்கள் பொருத்தப்பட்ட தகரத் தட்டு இருக்கும். உருளையின் மேல் பகுதியில், தகரத்தால் ஆன வலை இருக்கும். உருளையின் பின்பகுதியில், சைக்கிள் ஹாண்டில் பார் மாதிரி கைப்பிடி இருக்கும். இந்தக் கைப்பிடியைப் பிடித்து வண்டியை உருட்டணும். மணலில் இருக்கும் காகிதக் குப்பைகள் ஆணியில் குத்தப்பட்டு, எஸ்கலேட்டரில் வருவது மாதிரி சாக்கு விரிப்பான் மூலம் வந்து, தகரத் தட்டில் விழும். குப்பையில் இரும்புப் பொருள்கள் ஏதாவது இருந்தால், அதனை தனியாகப் பிரித்து எடுக்கவும், தகரத் தட்டின் கீழ்ப் பகுதியில் காந்தம் பொருத்தி இருக்கேன். அதனால், இரும்புகள் தட்டிலேயே ஒட்டிக்கும்” என்கிறார்.

எளிய பொருட்கள் மூலம் அரிய கண்டுபிடிப்புகள் என்பதுதான் வடிவழகன் ஃபார்முலா. இவரது மற்ற இரண்டு கண்டுபிடிப்புகளும் சுத்தம் சம்பந்தப்பட்டவையே.

‘‘ஆசிரியர், கரும்பலகையில் பாடங்களை எழுதிவிட்டு அழிக்கும்போது, சாக்பீஸ் தூசிகள் ஆசிரியர் முகத்திலும் சுற்றுப்புறத்திலும் பறந்து சுகாதாரச் சீர்கேட்டை உருவாக்குது. இதைச் சரிசெய்ய கண்டுபிடிச்சதுதான் சுகாதாரத் துடைப்பான்.  சோப்பு டப்பாவின் அடிப்பகுதியை வெட்டி எடுத்து, அதில் சாக்குப் பை துண்டை ஃபெவிக்கால் போட்டு ஒட்டினேன். சோப்பு டப்பாவின் மேல் மூடியை மூடிவிட்டு டஸ்டராகப் பயன்படுத்தினேன். இந்த டஸ்டர் மூலம் அழிக்கும்போது சாக்பீஸ் தூசிகள், சாக்குப்பை துளைகள் வழியே டப்பாவுக்குள் சேர்ந்துவிடும். அதை, வெளியே கொண்டுபோய் கொட்டிவிடலாம்” என்றவர், தான் வடிவமைத்த டஸ்டரால் துடைத்துக் காட்டி அசரவைத்தார்.

இவரது மற்றொரு கண்டுபிடிப்பு, கீழே சிந்தாத நகவெட்டி. ஒரு பிளாஸ்டிக் டப்பாவின் அடிப்பகுதியில் துளையிட்டு, அதற்குள் நகவெட்டியை விட வேண்டும். வாய்ப் பகுதித் துளையில் விரல்களை விட்டு நகம் வெட்டும்போது, நகத்துண்டு வெளியே விழாமல் டப்பாவில் தங்கிவிடும்.

‘‘வயதானவர்கள் இதை உபயோகிக்கும்போது டப்பாவுக்குள் இருக்கும் விரல்கள் கண்ணுக்குத் தெரியணும் இல்லியா? அதற்காக, டப்பாவின் மேல் பகுதியில் ஒரு சிறு துண்டை வெட்டி எடுத்துவிட்டு, அங்கே குவிலென்ஸ் பொருத்தி இருக்கேன். அதில் பார்த்துக்கொண்டு தெளிவாக வெட்டிக்கலாம். இந்த மாதிரி இன்னும் நிறையக் கண்டுபிடிக்கணும். உலக அளவில் இந்தியாதான் தூய்மையான நாடு எனப் பெயர் வாங்கணும். அதுதான் என் ஆசை” என்று சிரிக்கிறார் வடிவழகன்.

- த.க.தமிழ் பாரதன்
படங்கள்: க.சதீஸ்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick