மயில் - சில குறிப்புகள்!

பார்க்கப் பார்க்க அலுக்காத ஆச்சர்யங்களில் ஒன்று மயில். தோகை விரித்து ஆடும் மயிலின் அழகுக்கு மயங்காதவர்கள் இல்லை. இந்தியாவின் தேசியப் பறவையைப் பற்றி சில துளிகள்...

 ஆங்கிலத்தில் மயிலின் பொதுப் பெயர் Peafowl. ஆண் மயிலின் பெயர் Peacock. பெண் மயிலின் பெயர் Peahen.

 இந்திய மயிலின் அறிவியல் பெயர், பாவோ க்ரிஸ்டாடஸ் (Pavo Cristatus).

 ஆண் மயிலுக்கு தமிழ் மொழியில், சேவல் என்ற பெயர் உண்டு.

 1972-ம் ஆண்டு இயற்றிய இந்தியச் சட்டப்படி, மயிலை வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

 அதிக ஒலியெழுப்பும் பறவைகளில் மயிலும் ஒன்று. சாதாரண நாட்களைவிட, மழைக் காலங்களில் அதிக முறை ஒலியெழுப்பும். காடுகளில் கேட்கும் மயிலின் குரல் மூலம், புலி போன்ற ஆபத்தான விலங்குகளின் இருப்பைத் தெரிந்துகொள்ளலாம்.


 பிறந்து ஒரு நாளே ஆன மயில் குஞ்சுகள், தாயின் உதவியின்றித் தானாகவே நடக்க ஆரம்பிக்கும். உணவு உண்ணவும், நீர் அருந்தவும் செய்யும்.

 ஆண் மயிலின் வண்ணமயமான தோகை, பெண் மயில்களை ஈர்க்கவும், பிற விலங்குகள் தாக்க வரும்போது, தனது தோகையை விரித்துக் காட்டி பயமுறுத்தவும் பயன்படுத்தும்.

 மயிலின் தோகை, நாம் பார்க்கும் கோணத்துக்கு ஏற்ப வெவ்வேறு நிறங்களை எதிரொளிக்கும்.

 அகவல், ஆலல், ஏங்கல் போன்ற பல சொற்களால் மயிலின் ஒலியைக்  குறிப்பிடுகிறார்கள்.

 மயில் தோகையின் வேறு பெயர்கள்... சரணம், சிகண்டம், கூந்தல், சந்திரகம், கலாபம், கூழை, பீலி, தொங்கல் மற்றும் தூவி.

 1963-ல் மயில், இந்தியாவின் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டது.

 மயிலினங்களைத் தேசியப் பறவையாகக் கொண்ட வேறு நாடுகள்: மியான்மர் மற்றும் காங்கோ.

 உலகின் பல்வேறு பகுதிகளில், வெள்ளை மற்றும் சாம்பல் நிற மயில்கள் காணப்படுகின்றன.

- கார்த்திகா முகுந்த்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick