Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எங்கே இருந்து நமக்கு அரிசி வருது?

‘அரிசி எங்கிருந்து வருகிறது?’ என்று கேட்டால், ‘அண்ணாச்சி கடையிலிருந்து’ என்று சொல்லும் அளவுக்குத்தான் இன்றைக்குப் பலர் இருக்கிறார்கள். நாம் அன்றாடம் சாப்பிடும் அவசிய உணவுகளில் ஒன்று, சோறு. இது, எத்தனை பேரின் உழைப்பில், எவ்வளவு நிலைகளைக் கடந்து வருகிறது எனத் தெரிஞ்சுக்குவோமா?

1. ஒரு பெரிய குழியில், பல மாதங்களாகச் சேர்த்துவைத்த குப்பைகள், மாட்டின் சாணம், வைக்கோல், காய்கறிக் கழிவுகள் அனைத்தும் சேர்ந்து மட்கியதை எரு என்பார்கள். விவசாயம் தொடங்கும் முன், இந்த எருவை வயல்களில் பரவலாகப் போடுவார்கள்.

2.நெல் சாகுபடிக்கு போதுமான அளவு நீர் கிடைத்ததும் ஏர் பூட்டி வயலை நன்கு உழுவார்கள்.

3. வயலின் ஒரு பகுதியில், பக்குவப்படுத்திய விதைநெல்லை விதைத்து, நாற்று வளர்ப்பார்கள்.

4. 21 நாட்கள் கழித்து, வளர்ந்த நாற்றுகளைப் பிடுங்கி, வயல் முழுவதும் நடுவார்கள். இந்த நடவுக்கு முன், அடி உரம் இடுவார்கள். இந்த உரத்தில் மணிச்சத்து, தழைச்சத்து சாம்பல் சத்துக்கள் கலந்திருக்கும்.

5. 15 நாட்கள் கழித்து, மேல் உரம் இடுவார்கள். பூச்சித்தாக்குதல் இருந்தால், அதனைப் போக்க, திரவ மருந்துகளை அடிப்பார்கள். இப்போது வேப்பெண்ணெய், பூண்டு போன்றவற்றைக் கலந்து இயற்கைப் பூச்சிவிரட்டிகளும் தெளிக்கப்படுகிறது.

6. அடுத்து, பயிர்களோடு சேர்ந்து வளரும், பிற செடிகளைப் பிடுங்கும் பணி. இதனை, களை எடுத்தல் என்பார்கள்.

7. களை  எடுத்த பின், 15 நாட்கள் கழித்து மறுபடியும் உரம் இட வேண்டும்.

8. பயிர் வாடாமல் நீர் பாசனம் செய்ய வேண்டும்.

9. 90 அல்லது 105 நாட்களுக்குள் கதிர் முற்றிவிடும். முற்றிய கதிர்களை, கதிர் அறுக்கும் அரிவாளால் அறுத்து, கட்டுக்களாகக் கட்டி, களத்தில் கொண்டுபோய் சேர்ப்பார்கள். பிறகு, அவற்றைப் பெரிய கல் அல்லது மரக் கட்டையில் அடித்து, நெல்லை உதிர்ப்பார்கள். நெல் உதிர்ந்த தாள்தான் வைக்கோல்.

10. ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய, சுமார் 2500 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. 

11. குவியலாகச் சேர்ந்த நெல்லை, சாக்கு மூட்டைகளில் கட்டி வைப்பார்கள். பிறகு, வியாபாரிகளிடம் விற்பார்கள்.

12. வியாபாரிகள், நெல்லை வாங்கி, அரிசி ஆலைகளில்  அவித்துக் காயவைத்து, அரிசி ஆக்குவார்கள்.

13. அரிசியை சாக்குகளில் போட்டு மூட்டைகளாகவும், பாக்கெட் களாகவும் கடைகளுக்கு விற்பனை செய்வார்கள். இப்படிக் கடைக்கு வரும் அரிசியையே, நாம் வாங்கி வந்து சோறு சமைக்கிறோம். இட்லி, தோசை என விதவிதமான பலகாரங்கள் செய்து உண்டு             மகிழ்கிறோம்.

- கே.ஆர்.ராஜமாணிக்கம்

படங்கள்: எம்.விஜயகுமார்

Related Tags

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
பென்சில் பாக்ஸ்!
மை டியர் ஜீபா!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close