1098 - ஓடிவந்து உதவும் நண்பன்!

சிறுவர், சிறுமிகளின் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு வழங்கும் இலவச தொலைபேசி சேவைக்குரிய எண்: (Helpline) 1098. இதை எந்தெந்த வழிகளில் எல்லாம் பயன்படுத்தி நமக்கான உதவியைப் பெறலாம் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

1996-ம் ஆண்டு, குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் உதவியுடன் ஜெரூ பில்லிமோரியா (Jeroo Billimoria) என்பவரால் மும்பையில், இந்தத் தொலைபேசி சேவை தொடங்கப்பட்டது. முதல் ஆண்டே, மும்பையில் மட்டும் சுமார் 6,000 தொலைபேசி அழைப்புகள் உதவி கேட்டு வந்தன. பின்னர், மத்திய அரசின் தொழில்நுட்பத் துறை, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் பலவும் ஒன்றிணைந்து ‘சைல்டு லைன் இந்தியா ஃபவுண்டேஷன்’ (Childline India Foundation) என்ற அமைப்பு மூலமாக இந்தியா முழுவதற்கும் இந்தச் சேவை விரிந்தது.

2014-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை சுமார் 300 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு, மூன்று கோடி தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. இவற்றில், 60 சதவிகிதம் அழைப்புகளை, குழந்தைகளே பேசியிருக்கிறார்கள். 40 சதவிகித அழைப்புகள், குழந்தைகள் நலனில் அக்கறைகொண்டோர் மற்றும் பெரியவர்களால் செய்யப்பட்டு உள்ளன.

சிறுவர்களுக்கு அந்த நேரத்தில் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவதோடு, இந்த அமைப்பின் சேவை முடிந்துவிடுவது இல்லை;  நீண்ட காலக் கவனிப்பும் அரவணைப்பும் தேவைப்படும் சிறுவர்களுக்கு, அதற்குரிய அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி உதவும் பணியையும் செய்கிறது.

வீட்டில் தனியாக இருக்கும்போது திடீரென தேவைப்படும் மருத்துவ உதவிக்கு இந்த எண்ணில் தொடர்புகொள்ளலாம்.  உங்களுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல் பற்றியும் தயங்காமல் புகார் அளிக்கலாம்.

பள்ளிகளிலோ, வெளி வட்டாரங்களிலோ, உங்களுக்கு ஏற்படும் உளவியல் மற்றும் உடல்ரீதியான தொல்லைகள் பற்றிய புகார்களை இந்த எண்ணில் புகார் செய்யலாம்.

புதுக்கோட்டை, தஞ்சாவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரும்புத் தோட்டங்களில் கொத்தடிமைகளாக வேலை செய்துகொண்டிருந்த 32 சிறுவர்கள் இந்தத் தொலைபேசிச் சேவை மூலம் மீட்கப்பட்டனர்.

ஆதரவற்ற சிறுவர்கள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், மாற்றுத்திறனாளிக் குழந்தைகள், எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் இந்த 1098 உதவக் காத்திருக்கிறது. காணாமல்போன சிறுவர்கள், வீட்டைவிட்டு ஓடிவந்த சிறுவர்களை உங்கள் பகுதியில் காண நேரிட்டால், இந்த எண்ணுக்குத் தகவல் அளிக்கலாம். குழந்தைத் தொழிலாளர் முறை பற்றியும் புகார்  தெரிவிக்கலாம்.

பெங்களூரில் உள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றில் முறையான வசதிகள் இல்லாமல், சிறுவர்கள் துன்புறுத்தப்பட்டு வந்தார்கள். 1098 எண்ணுக்கு புகார் வந்ததை அடுத்து, உதவிக் குழுவினர் மூலமாக அங்கிருந்த 42 சிறுவர்கள் அந்தக் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்டு, முறையான காப்பகத்தில்   ஒப்படைக்கப்பட்டனர்.

வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள், சென்னையில் உள்ள பிரபல உணவகத்தில் கடுமையான வேலையில் ஈடுபடுத்தப்பட்டார்கள். 1098 எண்ணுக்குப் புகார் வந்ததும், அந்தச் சிறுவர்கள் மீட்கப்பட்டு, காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். இப்படி இந்தச் சேவையின் மூலம் நாடு முழுக்க லட்சக்கணக்கான சிறுவர்கள் மகிழ்ச்சியான மறுவாழ்வு பெற்றிருக்கிறார்கள்.

இந்தத் தொலைபேசிச் சேவையை அழைப்பது மிக எளிது. இந்த மையங்களில் பயிற்சி பெற்ற பணியாளர் குழு 24 மணி நேரமும் இயங்கும். நீங்கள் தொலைபேசி செய்ததும், உதவிக் குழுவில் இருக்கும் நபர் உங்களோடு பேசி, விவரங்களைப் பெறுவார். நீங்கள் அழைக்கும் இடத்தைப் பொறுத்து, உடனடியாக தகுந்த உதவியோடு வந்து சேர்வார்கள். மருத்துவ சிகிச்சை, சட்டரீதியான உதவி, மறுவாழ்வு மையங்களில் சேர்ப்பது என உதவிக்கு ஏற்ப, நடவடிக்கை எடுப்பார்கள்.

- சுப.தமிழினியன்

படம்: நா.விஜயரகுநாதன்

ஓவியங்கள்: பிள்ளை

மாடல்: சந்தோஷ், பிரியங்கா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick