கனவு ஆசிரியர்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

“புலியும் சிங்கமும் எங்கள் பள்ளியில் உலவும்!”

‘‘அதோ சிங்கம் வருது. சீக்கிரம் ஓடுங்க... ஓடுங்க’’ என்ற குரலையும் மாணவர்களின் கூச்சலையும் கேட்டு, அந்தப் பள்ளிக்குள் பதற்றத்துடன் எட்டிப் பார்த்தோம்.

திருவாரூர் மாவட்டம், மேலராதநல்லூரில் இருக்கிறது, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. வகுப்பறைக்கு வெளியே, மாணவர்கள் வட்டமாக அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நடுவே, சிங்கம், புலி, முயல், மான்... என விதவிதமான விலங்குகளின் உருவங்களை முகத்தில் வரைந்து கொண்டு மாணவர்கள், அவர்களோடு சேர்ந்து அந்த ஆசிரியரும் மண் தரையில் தவழ்கிறார். தரையில் சில விலங்கு பொம்மைகளும் இருக்கின்றன.

‘‘சிங்கம் என்ன செய்யும்?’’ - ஆசிரியர்.

“மான், முயல்களை வேட்டையாடும்” - மாணவர்கள்.

‘‘வேட்டையாடி சாப்பிட்டதும் என்ன செய்யும்?”

“மிச்சத்தை அப்படியே போட்டுட்டுப் போய்டும்.”

“அந்த மாதிரி செய்தால் என்ன ஆகும்?’’

“இறந்த உடலில் புழுக்கள் உருவாகி, சுற்றுப்புறச் சூழல் கெடும்.”

“ஆமா. ஆனால், காட்டில் இதுபோன்ற மிச்சங்களைச் சாப்பிட நரி, கழுகு என நிறைய இருக்கும். சுற்றுச்சூழல் பாதிப்பை அவை தடுத்துவிடும். ஆனால், நம்ம நாட்டில், நம்ம ஊரில், நம்ம தெருவில் அப்படிச் செய்தால் என்ன ஆகும்? உணவை வீணாக்கி, குப்பைகளைக் கொட்டுவதால் சுற்றுச்சூழல் மாசுபடும். தொற்றுநோய்கள் உண்டாகும்” என்றார் ஆசிரியர்.

‘‘ஆமா... ஆமா... சுற்றுச்சூழலை மாசுபடாமல் காக்கணும்... உணவை வீணாக்காமல் இருக்கணும்” என முழங்கினார்கள் மாணவர்கள்.

மேக்கப் போட்டிருந்த முகத்தைத் துடைத்தவாறு சிரிப்புடன் வந்த ஆசிரியர், “எங்க பள்ளியில் இப்படித்தான் புலியும் சிங்கமும் தினமும் உலவும். என் பேரு மணிமாறன். இது, சுற்றுச்சூழல் பற்றிய பாடம். அதை வித்தியாசமா நடத்தலாம்னுதான் இந்த கெட்டப்” என்கிறார்.

‘‘எங்க மணிமாறன் சார் எந்தப் பாடத்தை நடத்தினாலும் வித்தியாசமாத்தான் இருக்கும். எத்தனை வருஷமானாலும் மறக்காது” என உற்சாகமாகச் சூழ்ந்துகொண்டார்கள் மாணவர்கள்.

2௦௦4-ம் ஆண்டு ஆசிரியராக தனது பணியைத் தொடங்கியவர் மணிமாறன். கதைகள், களப் பயணங்கள் மூலம் பாடங்களைக் கற்றுத்தருவது, அறிவியல் மன்றத்தைத் தொடங்கி மாவட்ட/மாநில அளவிலான அறிவியல் போட்டிகளில் மாணவர்களை பங்கேற்கவைத்தது, ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பை உருவாக்கி ஒருங்கிணைப்பது, திருச்சியில் இருந்து டெலஸ்கோப் வரவழைத்து, வானியல் காட்சிகளைக் காட்டியது என, இவரைப் பற்றி மூச்சுவிடாமல் பட்டியல் போடுகிறார்கள் மாணவர்கள்.

கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் ‘சாதனை ஆசிரியர் விருது,’ தமிழ்நாடு அரசு கலைப் பயிற்சி மையத்தின் ‘மக்கள் நேயர் விருது’ போன்றவை இவரது அர்ப்பணிப்பான பணிக்கான அங்கீகாரங்கள். ஒவ்வோர் ஆண்டும் தனது ஒரு மாத சம்பளத்தை, அந்தப் பள்ளியின் செயல்பாட்டுச் செலவுக்காகக் கொடுக்கிறார் ஆசிரியர் மணிமாறன்.

‘‘கார்ட்டூன் படங்களைப் பார்க்கும்போது கூட்டமாக விளையாடும்போதும் குழந்தைகள் எவ்வளவு உற்சாகமாக இருக்காங்க. அதே உற்சாகமும் ஆர்வமும் பாடம் கற்கும்போதும் இருக்கணும். அதுக்காக ஒவ்வொரு பாடத்தையும் எப்படி நடத்தலாம்னு ஒரு மாசத்துக்கு முன்னாடியே திட்டம்போட்டு, பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள், பெயின்ட், கலர் பேப்பர் எல்லாம் வாங்கி வெச்சுப்பேன். வயல்வெளி, கோயில், மைதானம்னு வகுப்பறைக்கு வெளியேதான் பாடங்களை நடத்துவேன். ஒவ்வொரு மாணவரும் வீட்டில் இருந்து கிளம்பும்போதே, இன்னிக்கு என்ன பாடம், எப்படி நடக்கும் என்ற சஸ்பென்ஸோடு வரணும்” என்று சிரிக்கிறார் மணிமாறன்.

- த.க.தமிழ் பாரதன்

படங்கள்: க.சதீஸ்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick