ஒரு எண்ணம்... ஒரு லட்சம் புத்தகங்கள்!

‘‘நமக்கு வசதி இருக்கு, புக்ஸ் வாங்கிப் படிக்கிறோம். வசதி இல்லாத, படிக்கும் ஆர்வம் உள்ள பசங்க என்ன செய்வாங்க?”

இப்படி யோசித்தார்கள், கனடாவைச் சேர்ந்த எம்மா மற்றும் ஜுலியா. அப்போது, எம்மாவுக்கு 9 வயது. ஜுலியாவுக்கு 10 வயது. கனடாவின் சுற்றுப் பகுதியில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். அவர்களின் குழந்தைகளுக்குப் படிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதைக் கேள்விப்பட்டார்கள்.

‘‘நாம் வாழும் இதே நாட்டில்தான் அவங்களும் வசிக்கிறாங்க. அவங்களுக்கு ஏன் படிக்கும் வாய்ப்பு கிடைக்கலை? இதுக்கு ஏதாவது செய்யணும்” என யோசித்தார்கள்.

அவர்களிடம் இருந்த புத்தகங்கள், சேமிப்பில் வாங்கிய புதிய புத்தகங்கள் என 500 புத்தகங்களைச் சேகரித்து, பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிக்கு அனுப்பினார்கள். அவர்களிடம் இருந்து உடனடியாக நன்றிக் கடிதம் வந்தது. அவர்களின் படிக்கும் ஆர்வத்தைப் பார்த்த ஜுலியாவும் எம்மாவும் ரொம்ப சந்தோஷமானார்கள்.

நண்பர்கள், அக்கம்பக்கத்திலிருந்து எனப் புத்தகங்களைச் சேகரிக்க ஆரம்பித்தார்கள். ‘புக்ஸ் வித் நோ பௌண்ட்ஸ்’ (Books With No Bounds) என்ற அமைப்பை உருவாக்கி னார்கள். இந்த விஷயம் ஃபேஸ்புக், ட்விட்டர் எனப் பரவி, உலகம் முழுவதிலும் இருந்து உதவிகள் குவிந்தன. கனடாவைத் தாண்டி, ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கும் இவர்கள் சேகரித்து அனுப்பிய புத்தகங்கள் சென்றன. பென்சில், பேனா, கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவையும் உதவியாக வந்தன.

இப்போது, எம்மாவுக்கு 16 வயது. ஜூலியாவுக்கு 17. இது வரை ஒரு லட்சம் புத்தகங்கள் உட்பட, பல்வேறு பொருட்கள் இவர்களின் முயற்சியால், ஆயிரக்கணக்கான சுட்டிகள் கைகளில் தவழ்ந்துட்டு இருக்கு.

‘‘புத்தகம், நம் வாழ்க்கையின் வடிவமைப்பில் முக்கிய இடம் பிடிக்குது. எங்கள் வீட்டில் டி.வி கிடையாது. புத்தக வாசிப்பு தரும் சுகத்தை எல்லோரும் அனுபவிக்கணும். அதனால், குழந்தைகளின் கற்பனைக் கதவுகளைத் திறக்கும் எங்கள் முயற்சி மேலும் மேலும் தொடரும்” என்கிறார்கள் எம்மாவும் ஜுலியாவும்.

- பா.நரேஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick