Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோடை உணவு கொஞ்சம் உஷாரு!

‘நான் எப்பவோ ரெடி’ என்பது போல கோடை வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. தேர்வுகள் முடிந்து, விடுமுறையில் என்ன செய்யலாம் என இப்போதே திட்டமிட ஆரம்பித்து இருப்பீர்கள். அந்தப் பட்டியலில் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக, உணவு விஷயத்தில் கவனமாக இருங்கள்.

காலையில் சாப்பிடாமல் விளையாடப் போகாதீர்கள். காலை உணவு கட்டாயம். அன்றைய நாள் முழுவதும் உங்களைப் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள, காலை உணவுதான் முக்கியம்.

வெயில் காலத்தில் ‘வைட்டமின் சி’ உடலுக்கு மிகவும் தேவை. சூரியக் கதிர்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, தோலுக்கு கூடுதல் சக்தியை ‘வைட்டமின் சி’ வழங்குகிறது. நோய் எதிர்ப்புசக்தியை வலுவாக்குகிறது. நுண்ணுயிர்த் தொற்றுநோய்களுக்கு எதிராகப் போராட, உடலுக்கு சக்தியை வழங்குகிறது. பழங்களில் இந்தச் சத்து கிடைக்கிறது.

காலை உணவில் சரிபாதி, பழங்களாக எடுத்துக்கொள்வது நல்லது. நீர்ச்சத்து நிரம்பியுள்ள தர்பூசணி, திராட்சை, வெள்ளரி போன்றவற்றைச் சாப்பிடுவது சிறப்பு. காலை உணவில் மட்டுமல்லாது, எல்லா வேளையும் உணவுடன் சரிபாதி காய்கறிகள், பழங்கள் சேர்த்துக்கொள்வது எப்போதுமே நல்லது.

ஒரே மாதிரி பழங்களைச் சாப்பிடப்  பிடிக்கவில்லை என்கிறீர்களா? இப்படியும் செய்து சாப்பிடலாம்.

வெயில் காலத்தில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவீர்கள். வெறுமனே ஐஸ்க்ரீம் களுக்குப் பதிலாக திராட்சை, மாதுளை, வாழைப்பழம், ஆப்பிள், அன்னாசிப்பழம் என உங்களுக்குப் பிடித்த பழங்களை சின்னச்சின்ன துண்டுகளாக வெட்டி, ஐஸ்க்ரீமுடன் கலந்து சாப்பிடுங்கள்.

அதே நேரம், விதவிதமான மணங்களில், சுவைகளில் கிடைக்கின்றன என்பதற்காக நிறைய ஐஸ்க்ரீம் சாப்பிடாதீர்கள். இவை, அந்த நேரத்துக்கு குளிர்ச்சியை அளித்தாலும், உடலில் சர்க்கரையை அதிகம் ஆக்கிவிடும்.

தயிர், மோர், லஸ்ஸி போன்ற குளிர்ச்சியான பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். தயிர்ப் பச்சடியில் வெங்காயத்துடன் புதினா, வெள்ளரி, கேரட், மாதுளம் பழம் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.

தர்பூசணிப் பழங்களை அதிகச் சிவப்பு நிறம்கொண்டதாகக் காட்டுவதற்காக, எரித்ரோசின்-பி என்ற நிறமியை ஊசி மூலம் செலுத்துவதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிறமி, எலிகளுக்கு புற்றுநோய், தைராய்டு போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. அப்படி எல்லாம் ஊசி போடுவது இல்லை என தர்பூசணி வியாபாரிகள் சொல்கிறார்கள். என்ன இருந்தாலும் நாம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. சாலை ஓரங்களில் ஏற்கெனவே வெட்டி வைக்கப்பட்ட பழங்களைத் தவிர்ப்பது நல்லது. இவை, நீண்ட நேரம் வெளியில் வைக்கப்பட்டு ஈக்கள் மொய்ப்பதால், தொற்று நோய்கள் ஏற்படலாம். முழுப்பழமாக வீட்டுக்கு வாங்கிவந்து, வெட்டிச் சாப்பிடுவது நல்லது. அதிகமாக இருந்தால், நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினருடன் பகிர்ந்து சாப்பிடலாம்.

பழத்தின் மீது சிறிய துளைகள், லேசாக கறுப்பு நிறம், நீர்க்கசிவு போன்றவை இருந்தால், தவிர்த்துவிடவும்.

கடைகளில், விதவிதமான சுவைகளில் கிடைக்கும் குளிர்பானங்களைத் தவிர்க்கவும். ரசாயன பவுடர்களால் தயாரிக்கப்படும் இவை, உடலுக்குக் கெடுதலையே உண்டாக்கும். நீர்மோர், இளநீர் போன்றவையே உடலுக்கு நல்லது. எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்களைப் பிழிந்து, வீட்டிலே பழச்சாறு தயாரித்துக்  குடியுங்கள்.

இந்தக் கோடைகாலத்தில் அதிகம் வெளிர் நிற உடைகளை அணிவது நல்லது. பருத்தித் துணிகளாக இருந்தால் இன்னும் சிறப்பு. ஜீன்ஸ், பாலியஸ்டர் போன்ற உடைகளைக் கோடைகாலம் முடியும் வரை தவிர்த்துவிடுங்கள். காற்றோட்டமான, தளர்வான உடைகளே நல்லது.

காலை 11 மணியில் இருந்து 3 மணி வரை சூரியக் கதிர்வீச்சின் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த நேரங்களில் வெளியே விளையாடாதீர்கள்.

சரியான உணவு, சரியான பழக்கங்களுடன் கோடை வெயிலுக்கு சவால் விடுங்கள்; விடுமுறையை உற்சாகமாக்குங்கள்!

- இனியன் படங்கள்: அ.குரூஸ்தனம், க.சர்வின்


வழக்கத்தைவிட தண்ணீரை அதிக அளவு எடுத்துக்கொள்ளுங்கள். குளிர்்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட ஐஸ் வாட்டரைவிட, சாதாரண தண்ணீரைக் குடிப்பதே நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். பானையில் நீர் ஊற்றிவைத்து அதைப் பருகலாம்.


ஆரஞ்சுப் பழத்தில் அதிக அளவு  வைட்டமின் சி உள்ளது. தீங்கு விளைவிக்கும் சூரியனின் கதிர்களை எதிர்கொள்ளும் தன்மையை நமது தோலுக்கு அளிக்கிறது.

வைட்டமின் சி நிறைந்த கொய்யாப் பழம், எளிதில் கிடைக்கும். இருமல், சளியைத் தவிர்க்கும்.

அன்னாசிப் பழம், செரிமானப் பிரச்னைகளைத் தீர்க்க உதவுகிறது.

இரும்புச்சத்தும் பொட்டாசியமும் நிறைந்தது வாழைப்பழம். நாள் முழுதும் ஓடி விளையாடத் தேவையான ஆற்றலைத் தரும்.

தர்பூசணி, 92 சதவிகிதம் நீர்ச்சத்துள்ள பழம். உடலில் நீரின் அளவைக் குறையாமல் வைத்துக்கொள்ளும். சிறுநீரகங்களைப் பாதுகாக்கும். நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும். உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வதையும் தடுக்கும்.

திராட்சை, உடலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது. ரத்தத்தைத் தூய்மையாக்க உதவுகிறது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
மந்திரப் பள்ளி
பவித்ரா போட்ட பட்ஜெட்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close