சிரிப்பின் மகுடம்!

ஏப்ரல் 16 - சார்லி சாப்ளின் பிறந்த தினம்

சார்லி சாப்ளின், 1889-ம் ஆண்டு, ஏப்ரல் 16-ல் லண்டனில் பிறந்தார். இயற்பெயர், சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின்.

ஹாலிவுட் நடிகர், இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர் சாப்ளின்.

சாப்ளினை கறுப்பு வெள்ளைப் படங்களில் மட்டுமே பார்த்திருந்த ரசிகர்கள், சிவந்த நிறமும், நீல நிறக் கண்களுடனும் அவரை நேரில் பார்த்தபோது, வியந்தனர்.

சாப்ளினைப் போல தோற்றம் அளிப்போருக்கான போட்டிகள் பல நடத்தப்பட்டு வந்தன. ஒரு முறை,  அந்தப் போட்டி ஒன்றில் சாப்ளினும் ரகசியமாகக் கலந்துகொண்டார். அதில், அவருக்கு  மூன்றாம் பரிசே கிடைத்தது.

நடிக்க வாய்ப்புக் கேட்ட சார்லியிடம், ஏதாவது நடித்துக்காட்டு என்றார்  தயாரிப்பாளர். அப்போது, அவர் உடல் அளவுக்கு ஏற்ற உடைகள் இல்லை. தொளதொள பேன்ட், சிறிய சட்டை, ஷு, தொப்பி, கைத்தடி இவற்றோடு மேடையேறினார். சிரிப்பலைகளால் பாராட்டுப் பெற, அதுவே அடையாளமானது.

பேசும் சினிமா தொழில்நுட்பம்  தொடங்கிய பிறகும், மெளனப்  படங்களையே எடுத்து, பார்க்கும்  ரசிகர்களைப் பேசவைத்தார்.

இரண்டு முறை ஆஸ்கர் விருது பெற்றவர். பிரிட்டனின் இரண்டாவது எலிசபெத் அரசி, இவருக்கு சர் பட்டம் அளித்து கௌரவித்தார்.

உலகையே சிரிக்கவைத்த உன்னதக் கலைஞன், டிசம்பர் 25, 1977-ல் உலகை விட்டு விடைபெற்றார். புதைக்கப்பட்ட சில தினங்களில், உறவினர்களிடம் இருந்து பணம் பறிப்பதற்காக, சாப்ளினின் உடல் திருடப்பட்டது. 11 வாரங்களுக்குப் பின், ஜெனீவா  ஆற்றங்கரையில் கைப்பற்றப்பட்டது. பிறகு, ஆறரை அடி ஆழத்தில், சிமென்ட் கலவையால் கல்லறை அமைக்கப்பட்டது.

சார்லியின் அம்மா ஹென்னா, லண்டன் விடுதிகளின் இசை நிகழ்ச்சிகளில் பாடுபவர். ஒரு நாள் அவர் மேடையில் பாடும்போது, சரியாகப் பாட முடியவில்லை. ஒரே கூச்சல்! அவமானம் கண்ணீராகக் கரைய, மேடையை விட்டுக் கீழே இறங்கினார் அம்மா. அப்போது, ஆறு வயதுச் சிறுவனான சார்லி என்ன நினைத்தானோ, மேடையேறினான். தன் அம்மா சொல்லிக்கொடுத்த பாடலைப் பாடினான். பிஞ்சுக் கால், கைகளை அசைத்து நடனமாடினான். விசில், கைத்தட்டல்களால் அரங்கம் அதிர்ந்தது. ரசிகர்கள் சில்லறைக் காசுகளை அள்ளி வீசினர். சார்லி அவற்றைப் பொறுக்கினான். பாடச்சொல்லி கூச்சலிட்டது கூட்டம். ‘சில்லறைகளைப் பொறுக்கிய பிறகுதான் பாடுவேன். ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை என்னால் செய்ய முடியாது’ என்றான். மீண்டும் எழுந்த சிரிப்பால் வானம் அதிர்ந்தது. தன் தாய் பாடமுடியாமல் தவித்ததை நடித்துக்காட்டினான். மீண்டும் காது கிழியும் சிரிப்பொலி.

- கே.ஆர்.ராஜமாணிக்கம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick