அழிய விடல் ஆகாது பாப்பா! - சிங்கவால் குரங்கு

ஆயிஷா இரா.நடராசன்

அன்புள்ள நண்பா...

நான்தான் சிங்கவால் குரங்கு எழுதுகிறேன். யார் யாரிடமோ முறையிட்டு நியாயம் கிடைக்காமல், உன்னிடம் வந்திருக்கிறேன்.

நாங்கள் உயிரியல் முறைபடி ‘மெக்காக்கா சைலீனஸ்’ (Macaca Silenus) என்று அழைக்கப்படுகிறோம். தமிழகத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையும் அதைச் சார்ந்த காடுகளுமே எங்கள் பாரம்பர்ய வாழிடம்.

ஆஞ்சநேயர், அனுமன் என்றெல்லாம் குரங்குகளை வணங்கிப் போற்றுகிறார்கள். ஆனால், எங்கள் இனத்தையே ஓட ஓட விரட்டி அழித்துவிட்டார்கள்.

எங்கள் வாலும் பிடரி முடியும் சிங்கத்தை போன்று இருக்கும். அதனால்தான் 'சிங்கவால்' என்று பெயர். முகம், முடி இன்றி கருமையாக பளபளக்கும். எங்கள் வெண்ணிற பிடரி முடிக்கு அயல்நாட்டில் அதிக விலை பேசப்படுகிறது. பாடம் செய்யப்பட்ட உடலுக்காகவும் நாங்கள் வேட்டையாடப்படுகிறோம். ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே இது நடக்கிறது.

எங்கள் வாழ்க்கை வித்தியாசமானது. அடர்ந்த உயர்ந்த உச்சிமரக் கிளைகளே எங்கள் வாழிடம். ‘மரங்களின் குரல்கள்' என்று எங்களை மலைவாழ் மக்கள் அழைப்பார்கள். எங்களில் பலர், மரஉச்சியில் இருந்து இறங்குவதே கிடையாது. அங்கேயே பிறந்து வாழ்ந்து, மண்ணைப் பார்க்காமலேயே   முழுமையாக வாழ்ந்துவிட எங்களால் முடியும்.

ஆனால், ‘மரங்களின் குரல்கள்' இப்போது கேட்பது இல்லை நண்பா. கூட்டம் கூட்டமாக ஆயிரக்கணக்காக வாழ்ந்த நாங்கள், இப்போது, 200 பேருக்கும் குறைவாக  மிஞ்சி இருக்கிறோம்.

மலைக்காடுகளின் கம்பீரம் நாங்கள். பழங்கள் மற்றும் தழைகளை உண்டு, யாருக்கும் எந்தத் தொல்லையும் தராமல் நாங்கள் வாழ்கிறோம். தாவரங்களின் இனவிருத்திக்கு நாங்கள் முக்கிய பங்காற்றுவதால் எங்கள் அழிவு, காடுகளின் அழிவையே குறிக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick